பிதாவை நோக்கி!

"நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு" (எபே. 3:15).

மனிதனுடைய வாழ்க்கையிலே மிக இனிமையான நேரம் ஜெப நேரமாகும். அதிலும் ஆவியானவரோடும், கிறிஸ்துவோடும் கர்த்தருடைய கிருபாசனத்தண்டை கிட்டிச் சேருவது மிக மிக இனிமையானது. அங்கே தேவனோடு ஆழமான உறவு கொள்ளுகிறோம். ஐக்கியம் கொள்ளுகிறோம். "அப்பா பிதாவே," என்று அழைத்து அவருடைய பொன்முகத்தை நோக்கிப் பார்க்கிறோம். நாத்தீகர்கள் இந்த பெரிய பாக்கியத்தை இழந்து விடுகிறார்கள்.

"கேளுங்கள் தரப்படும்" என்று வேதம் சொல்லுகிறது (மத். 7:7). உங்களுடைய ஜெபத்தைக் கேட்கிறவரும், பதிலளிக்கிறவருமாகிய பரமபிதாவை நோக்கி, நீங்கள் கேட்டுக்கொண்டேயிருங்கள். பிதாவானவர் தருகிறவரையிலும், சோர்ந்து போகாமல் கேட்டுக்கொண்டேயிருங்கள். இயேசுகிறிஸ்து சிந்திய விலையேறப் பெற்ற இரத்தத்தின் புண்ணியத்தினாலே, பிதாவின் கிருபாசனத்தண்டை கிட்டிச் சேரும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

இயேசு கிறிஸ்து கற்பித்த ஜெபத்தில் "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" என்று அழைத்து, ஜெபிக்க கற்றுக்கொடுத்தார் (மத். 6:9). அப்.பவுல், "நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி: முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்" (எபேசி. 3:15,16) என்று குறிப்பிட்டார்.

பிதாவாகிய தேவனிடத்திலே மட்டுமே ஜெபிக்க வேண்டுமா? இயேசுகிறிஸ்து விடத்திலே ஜெபிக்கக் கூடாதா? பரிசுத்த ஆவியானவரிடத்தில் ஜெபிக்கக்கூடாதா? நிச்சயமாகவே இயேசுவினிடத்திலே நீங்கள் ஜெபிக்க முடியும். ஏனென்றால், அவரும் "நித்திய பிதாக்களில் ஒருவர்" (ஏசா. 9:6). அவர் திரித்துவத்தில் ஒருவர். பிதாவுக்கு சமமாயிருப்பவர். அதே நேரம், ஆவியானவரும் தேவனாயிருக்கிற படியால் அவரை நோக்கி நீங்கள் ஜெபம் பண்ணுவது தவறல்ல. ஆனால் புனிதருடைய வழிபாடுகளையும். தேவதூதர்களுக்கு செய்யும் ஆராதனைகளையும், "எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்று அவர்களை கேட்பதையும் கர்த்தர் வெறுக்கிறார்.

அப்.பவுல் சொல்லுகிறார், "நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்" (கொலோ. 3:17). இயேசு கிறிஸ்து, இந்தப் பூமியிலிருந்தபோது, கற்பித்த ஒரு முக்கியமான சத்தியத்தை உங்களுக்கு எழுதுகிறேன். "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவா. 14:13,14). தேவபிள்ளைகளே, நீங்கள் ஜெபிக்கமாட்டீர்களா? என்று பிதாவானவரும், குமாரனாகிய இயேசுவும், பரிசுத்த ஆவியானவரும், எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களுடைய விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். அன்புடன் கர்த்தரை ஸ்தோத்தரித்து, துதித்து மகிழுங்கள். ஆவிக்குரிய பாடலைப் பாடி, கர்த்தரை கனம்பண்ணுங்கள். அதன்பின்பு நீங்கள் எதைக் கேட்டாலும், கர்த்தர் மனமகிழ்ந்து அன்போடு உங்களுக்கு அருளிச் செய்வார். அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் அல்லவா?

நினைவிற்கு:- "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" (மத். 6:33).