முழங்கால் ஜெபம்!

"நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக, நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்" (சங். 95:6).

சங்கீதக்காரனாகிய தாவீது, இங்கே தேவ ஜனங்களுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். ஆம், உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே அவர் உங்களை கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டார் (எபே. 1:4). தாயின் கர்ப்பத்திலே உங்களை பேர்சொல்லி அழைத்தார். இந்த பூமியிலே வாழ ஒரு நல்ல வாய்ப்பை தந்தார். ஆகவே, அவருக்கு முன்பாக பணிந்து, குனிந்து முழங்கால்படியிடுங்கள்.

இரண்டாவது, பணிந்து, குனிந்து, முழங்கால்படியிடுவது கர்த்தருடைய மகத்துவத்தையும், அதே நேரம், உங்களுடைய தாழ்மையையும் குறிக்கிறது. "கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்" (சங். 96:4). "கர்த்தர் பெரியவர். அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும், மிகவும் துதிக்கப்படத்தக்கவர்" (சங். 48:1). கர்த்தர் பெரியவர் என்ற தரிசனம் உங்களுக்கு இருக்குமானால், உங்களை தாழ்த்தி, பணிந்து, குனிந்து, முழங்கால்படியிடுவீர்கள். உங்களுடைய வாழ்க்கையிலுள்ள பெரிய பிரச்சனை களும் சிறியதாய் மறைந்துபோகும்.

இயேசு கிறிஸ்துவை, ஒருபோதும் குழந்தையாகவோ, மரியாளின் மடியில் பால் குடி பாலகனாகவோ, உதவி செய்ய திராணியில்லாதவராகவே, பார்க்காதிருங்கள். அவர் மகிமையும் மகத்துவமுள்ளவர். அண்டசராசரங்களை சிருஷ்டித்தவர். ஆகவே அவரை சர்வ வல்லவராய் உயர்த்தி, பயபக்தியோடு கனத்தையும், மகிமையையும் செலுத்துங்கள்.

இயேசு கிறிஸ்து இந்தப் பூமியிலிருந்தபோது, அநேகர் அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, பணிந்துகொண்டார்கள். "குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து அவர் முன்பாக முழங்கால்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்" (மாற். 1:40). ஒருவன், அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: "நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்" (மாற். 10:17). கர்த்தர் அந்த வழிமுறைகளை அவனுக்கு விவரித்தார். அதுபோல, ஒரு தகப்பன் சந்திரரோகியாயிருக்கிற தன்னுடைய மகனுக்கு இரங்கும்படி கிறிஸ்துவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வேண்டிக்கொண்டான் (மத். 17:14,15). கர்த்தர் அவனைக் குணமாக்கினார்.

இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரியானவர். அவர் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல; உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்" (லூக். 22:41). முழங்காலில் நிற்கிற இயேசுவின் முன்மாதிரியை பாருங்கள்.

அப். பவுலும்கூட, பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, ஜெபித்தார் (எபே. 3:15). உங்களுடைய ஜெபநேரத்திலும்கூட, முதலாவது உங்களை தேவனுக்கு முன்பாக தாழ்த்துங்கள். அவரை உயர்த்தி ஸ்தோத்தரியுங்கள். உங்களுடைய தாழ்மையைக் கண்டு, கர்த்தர் உங்களை உயர்த்தி, மேன்மைப்படுத்துவார். தாழ்மை யுள்ளவர்களுக்கு அவர் கிருபையளிக்கிறார்.

நினைவிற்கு:- "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" (பிலி. 2:10,11).