உள்ளான மனுஷனில்!

"நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்" (எபே. 3:16).

நீங்கள் வைத்திருக்கிற சிறிய மொபைலானாலும் சரி, பெரிய காரானாலும் சரி, அதற்குள்ளே இருக்கும் பேட்டரியை தொடர்ந்து சார்ஜ் பண்ணிக் கொண்டிருக்கும் போது, அவை நன்றாக இயங்கும். அதுபோல உங்களுக்குள்ளாக இருக்கும் உள்ளான மனுஷனை ஜெபத்தின் மூலமாகத்தான் வல்லமையினாலும், உன்னத பெலத்தினாலும் இடைக் கட்ட வேண்டும். அப்பொழுது நீங்கள் எந்த நற்கிரியை யும் செய்வதற்கு வல்லமை பொருந்தினவர்களாக விளங்குவீர்கள்.

உங்களுடைய வாழ்க்கையிலே வல்லமை குறைந்தால், நீங்கள் பரிசுத்தத்திலே குன்றிபோய்விடுவீர்கள். தேவனோடுள்ள ஐக்கியம் தொய்ந்து போய்விடும். ஜனங்களுக்கு அற்புதங்களும், அடையாளங்களும் கொண்டுவர முடியாது. மழுங்கட்டை கோடரியினால் மரம் வெட்டப்போனால், உங்களுடைய சரீர முயற்சிதான் வீணாகுமே தவிர, மரம் விழாது. ஆகவே வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும், ஊழியம் செய்வதற்கும் ஊக்கமாய் ஜெபியுங்கள். அப்பொழுது உங்களுடைய உள்ளான மனுஷனில், வல்லமையாய் பலப்படுவீர்கள்.

அநேகர் ஆவியானவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போதிய அளவு ஆவியிலே நிரம்புவதுமில்லை. ஒரு சபையிலே ஆவியானவர் அதிகமாய் அசை வாடுகிற நேரம், ஆராதனையின் நேரம்தான். ஆனால் அநேகர் ஆலயத்துக்கு பிந்தி பிந்தி வருகிறார்கள். துதி ஆராதனை முடிந்தபிறகு, பிரசங்க நேரத்தில் வந்து அமருகிறார்கள். இதனால் அவர்களுடைய உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படுவதில்லை. சடங்காச்சாரமாய், பாரம்பரியமாய், ஏனோ தானோவென்று கர்த்தரை ஆராதிக்கிறவர்களால், ஒருபோதும் ஜெய ஜீவியம் செய்ய முடியாது.

ஆதி திருச்சபையாரைப் பாருங்கள்! அவர்கள் எப்போதும் ஜெபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இயேசு பரமேறிச் சென்ற நாளிலிருந்து, பெந்தெ கொஸ்தே நாள் வரையும், பத்து நாட்கள் நூற்றியிருபது சீஷர்களும் ஒருமனப்பட்டு ஜெபத்திலும், வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் (அப். 1:14). மட்டுமல்ல, "அவர்கள் ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (அப். 2:42). "தேவனைத் துதித்து ஜனங்களெல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள்" (அப். 2:47). "அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்" (அப். 4:31).

அநேகருடைய உள்ளான மனுஷன், அவர்களுக்குள் பெலவீனப்பட்டு ஒடுங்கிப் போயிருக்கிறான். உங்களுடைய ஆத்துமா, தெனாலிராமன் வளர்த்த குதிரையைப்போல ஒடுங்கி, மெலிந்து இருக்கிறதா? சிறிய காரியத்துக்கும் சோர்வடைகிறதா? ஜெபம் இல்லாததினால் ஆத்துமா பசியும், பட்டினியுமாய் வாடுகிறதா? உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்பட ஜெபமும் தேவை. வேத வசனமும் தேவை. ஊழியமும் தேவை. பிரசங்கமும் தேவை.

ஒரு லாரியில், பேட்டரி வைக்கப்பட்ட இடத்தில் ஒரு வாசகம் எழுதியிருந்தது. "தினமும் என்னை கவனி." அதுபோல உங்களுடைய உள்ளான மனுஷனையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அந்த உள்ளான மனுஷனில்தான் கிறிஸ்து வாசமா யிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரும் தங்கியிருக்கிறார். அந்த பரலோக விருந்தாளிகள் உங்களுக்குள் சந்தோஷமாயிருக்க வேண்டும்.

நினைவிற்கு:- "விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்" (யோபு 4:4).