விசுவாச ஜெபம்!

"நீங்கள் ஜெபம்பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவை களைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்" (மாற். 11:24).

ஆண்டவராகிய இயேசு, இந்த பூமியிலிருந்தபோது, அநேக அற்புதங்களை நிகழ்த்தினார். அதற்கு அவருக்குள் இருந்த வல்லமை முக்கியமான காரணமா யிருந்தபோதிலும்கூட கிறிஸ்துவோ, அவர்களது விசுவாசத்தை வலியுறுத்திப் பேசினார். "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்" (மத். 21:22).

அதற்கு உதாரணமாக, ஒரு மலையையும், காட்டத்தி மரத்தையும் குறித்து, உவமையாய் சொன்னார். "எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மாற். 11:23). "கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்தி மரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும் என்றார்" (லூக். 17:6).

விசுவாசமுள்ள ஜெபம் எல்லாவற்றையும் உங்களுக்கு பெற்றுத்தரும். தடை களையெல்லாம் தகர்த்து விடும். மலைகளைப்போல உள்ள பிரச்சனைகளையும், காணப்படாமற்போகும்படி செய்யும். மனுஷனால் கூடாதது தேவனால் கூடும். "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" (மாற். 9:23). "நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" (1 யோவா. 5:4). உங்களுடைய ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு பதிலளிப்பார் என்கிற விசுவாசம் உங்களுக்குத் தேவை.

கர்த்தர் நூற்றுக்கு அதிபதியைப் பார்த்தார். "நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக் கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்" (மத். 8:13) பெரும்பாடுள்ள ஸ்திரீயைப் பார்த்து, "மகளே, திடன்கொள். உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்த மானாள்" (மத்.9:22). ஒரு முறை இரண்டு குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி, "இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது அவர்களுடைய கண்களை அவர் தொட்டு, உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்" (மத். 9:28,29).

ஒரு கானானிய ஸ்திரீ தன்னுடைய மகளை கர்த்தர் குணமாக்க வேண்டுமென்று அவரிடத்தில் வந்தபோது, இயேசு அவளை நோக்கி, "ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது. நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார்" (மத்.15:28). நீங்கள் கர்த்தரிடத்தில் எதைக் கேட்டாலும் சந்தேகப்படாமல், மன உறுதியோடே கேளுங்கள். விசுவாசத்தோடே கேளுங்கள். ஜீவனுள்ள வல்லமையான சாட்சிகளை கேட்க, கேட்க உங்களுக்குள் விசுவாசம் வரும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் விசுவாசத்திலே நிரம்பியிருங்கள். வாக்குத்தத்த வசனங்களை விசுவாசத்தோடு அறிக்கையிடுங்கள். மனதுருக்கமுள்ள கர்த்தர் உங்களு டைய விசுவாசத்தை கனம்பண்ணி, நிச்சயமாகவே உங்களுக்கு அற்புதம் செய்வார். ஆகவே, விசுவாசத்திலே வளருங்கள். விசுவாசத்திலே பெலன் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக் கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும் படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது" (யோவா. 20:31).