கர்த்தர் தரும் ஜெபக்குறிப்புகள்!

"நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக். 5:16).

நாம் பல வேளைகளில் நம்முடைய ஜெப விண்ணப்பங்களை பெயர் பெற்ற ஊழியரிடம் கொடுத்து, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." எனவே, எங்களுக்காக ஜெபியுங்கள் என்று கேட்கிறோம். அதுபோல ஊழியர்களும் தங்களுக்காகவும், தங்களுடைய ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கும்படி விசுவாசிகளிடம் சொல்லுகிறார்கள்.

கர்த்தரும் நம்மிடம் சில விண்ணப்பங்களைக் கொடுக்கிறார். நீங்கள் அவரோடு இணைந்து ஜெபிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். உங்களுக்குள்ளே வாசமாயிருக்கிற கிறிஸ்துவும் ஜெபவீரர். பரிசுத்த ஆவியானவரும் ஜெப வீரர். ஆகவே, விசுவாசத்தினால் உங்களுடைய கைகளை கிறிஸ்துவின் கைகளோடும், ஆவியானவருடைய கைகளோடும் இணைத்துக்கொண்டு, அவர்தரும் ஜெபக் குறிப்புகளுக்காக ஜெபிப்பீர்களா?

முதல் ஜெபக்குறிப்பு, "உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால், நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்" (மத். 5:44,45).

அநேக தேவபிள்ளைகள், நூற்றுக்கணக்கான ஊழியக்காரர்களுடைய பெயர்களை எழுதி வைத்து ஜெபித்து வருகிறார்கள். அதே நேரத்தில், துன்மார்க்கர்களுக்காக, கொலைபாதகர்களுக்காக, வேசித்தனத்திலே இருக்கிற அக்கிரமக்காரர்களுக்காக ஜெபிப்பவர்கள் மிகவும் குறைவு. இயேசு சிலுவையில் அறையப்படும்போது, அவருடைய இரண்டு பக்கங்களிலும் கொடிய கள்ளர்கள் அறையப்பட்டிருந்தார்கள். அந்த இரண்டு கள்ளர்களுமே முதலில் அவரை நிந்தித்தார்கள் (மத். 27:44). ஆனால் இயேசு அதைப் பொருட்படுத்தாமல், மன்றாடி ஜெபிப்பதை கண்ட ஒரு கள்ளன் உணர்த்தப்பட்டு, "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது, அடியேனை நினைத்தருளும்" என்றான் (லூக். 23:42). கிறிஸ்துவின் ஜெபம், எவ்வளவு துரிதமாய் இந்த கள்ளனை இரட்சித்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அந்த ஜெபத்தைக் குறித்து எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி எழுதும்போது, "அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்தி லூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்" (ஏசா. 53:12) என்று தீர்க்கதரிசனமாய் உரைத்தார்.

ஆண்புணர்ச்சிக்காரர்கள் நிறைந்த சோதோம் கொமோராவுக்காக, ஆபிரகாம் எவ்வளவு பரிந்து பேசி, ஊக்கமாய் ஜெபித்தார் என்பதை தியானித்துப் பாருங்கள். நீதிமான்கள் விழுந்துபோவதும், துன்மார்க்கர் பாவத்தில் மரிப்பதும் ஆண்டவருக்கு பிரியமில்லை. அவர்கள் இரட்சிக்கப்படுவதுதான் ஆண்டவருக்கு சித்தம். ஆகவே தேவபிள்ளைகளே, தீய மனிதர் இரட்சிக்கப்படும்படியாக ஜெபியுங்கள். அவர்களையும் பரிசுத்தவான்களாய் மாற்ற அவர் வல்லமையுள்ளவராயிக்கிறார்.

நினைவிற்கு:- "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்" (லூக். 19:10).