வேலையாட்களுக்காக ஜெபியுங்கள்!

"அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்" (மத். 9:38).

கர்த்தர் தருகிற இரண்டாவது ஜெபக்குறிப்பு, அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்பதாகும். விதைக்க ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அறுவடையின் காலம். "நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன். நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர். களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால் களைகளைச் சேர்த்து, அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்" (மத். 13:37-40).

இன்றைக்கு காண்கிற இடங்களிலெல்லாம் ஜனங்கள் வேக வேகமாக இரட்சிக்கப் படுகிறார்கள். ஞானஸ்நானம் பெற்று, அபிஷேகம் பெறுகிறார்கள். கர்த்தருடைய ஊழியக்காரர்களாய் மாறுகிறார்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் போதவில்லை. இந்தியா தேசம் சந்திக்கப்பட இன்னும் அதிகமான வேலையாட்களும், ஊழியர்களும் தேவை. இந்தியாவில் ஏறக்குறைய 130 கோடி மக்கள் உண்டு. 70 கிராமங்கள் உண்டு. 1652 விதமான மொழிகளை பேசும் மக்கள் உண்டு. 3000 விதமான ஜாதிப் பிரிவுகள் உண்டு. இன்னும் காடுகளிலும், மலைகளிலும், அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் வசிக்கும் இலட்சக்கணக்கான ஆதிவாசிகள் உண்டு. இவர்களையெல்லாம் சந்திக்கவும், கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக்கவும், ஊழியர்கள் தேவை. கோதுமை மணியாக செத்து, ஆயிரமாயிர மான பேரை கர்த்தரண்டை கொண்டு வரும் தன்னலமற்ற தியாகிகள் தேவை.

"ஆண்டவரே, அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும். மிஷனெரிகளை அனுப்பும். ஜெப வீரரை எழுப்பும். இரத்த சாட்சிகளை எழுப்பும். அளவற்ற அன்போடு உம்மை நேசிக்கிறவர்களை ஆயிரமாயிரமாக எழுப்பும். அறுப்புக்கு வேலையாட்களை அனுப்ப மாட்டீரோ? திருச்சபைகளில் உயிர் மீட்சியை அனுப்பி உயிர்ப்பிக்க மாட்டீரோ? என்று மன்றாடுங்கள்.

வில்லியம் கேரி, இங்கிலாந்து தேசத்திலே செருப்பு தைக்கிறவராய் தன் பணியை ஆரம்பித்தார். ஆனாலும் ஏனோ அவருக்கு இந்தியாவின்மேல் ஒரு பாரம். அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போதே அவருக்கு முன்பாக சுவரில் மாட்டியிருக்கும் இந்தியா படத்தை பார்த்து, இந்தியாவுக்காக கதறி, அழுது அழுது ஜெபிப்பாராம். "வலதுகைக்கும், இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத கோடிக் கணக்கான மக்கள் இங்கே உண்டு. மூட பழக்க வழக்கங்கள் நிரம்பியிருக்கும் இந்தியாவை சந்திக்கமாட்டீரா? அடிமைத்தனத்தை தகர்த்து, இந்தியாவை சுவிசேஷ ஒளியினாலே நிரப்பும். இமயமலை முதல் இந்தியா வரையுள்ள மக்களை உம்முடைய இரத்தம் கழுவி சுத்திகரிக்கட்டும்" என்று மன்றாடுவாராம்.

ஆத்தும பாரம் அதிகமாயிருக்கும்போது, சுவரில் மாட்டியிருக்கும் இந்திய படத்தை தரையிலே விரித்து, அதன்மேல் உருண்டு, புரண்டு, "இந்தியாவை இரட்சியும்" என்று கண்ணீரோடு மன்றாடுவாராம். ஒரு நாள் வந்தது. தன் கடையை இழுத்து மூடிவிட்டு, இந்தியாவுக்கு மிஷனெரியாய் வந்தார். பல இந்திய மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். இந்தியா தேசத்தின் அஸ்திபாரங்களை அசைத்து குலுக்கிவிட்டுதான், மகிமைக்குள் கடந்துச் சென்றார்.

நினைவிற்கு:- "சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக் காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்" (எபே. 6:18).