தேசத்திற்காக ஜெபியுங்கள்!

"நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும், சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன். ஒருவனையும் காணேன்" (எசேக். 22:30).

கர்த்தர் தரும் மூன்றாவது ஜெபக்குறிப்பு, "தேசத்திற்காக திறப்பிலே நின்று ஜெபியுங்கள்" என்பதாகும். ஒரு தேசத்தில் பாவம் பெருகும்போது, அந்த தேசம் அழிவுக்கு நேராய், கர்த்தருடைய கோபாக்கினைக்கு நேராய் செல்லுகிறது. "பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" (நீதி. 14:34). சில பாவங்கள் மரணத்துக்கு ஏதுவான பாவங்கள். சில பாவங்கள் வான பரியந்தம் எட்டுகிற பாவங்கள்.

"ஆணுக்கு ஆண் திருமணம்" என்று சொல்லுபவர்கள், தேவகோபாக்கினைக்கு ஏதுவாக தீவிரிக்கிறார்கள். ஆண்புணர்ச்சி என்பது பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டு வருகிற, விபரீதமான இச்சையாகும். ஆகவே, கர்த்தர் சோதோமை அழிக்கும்போது, நரக கடலிலுள்ள அக்கினியையும், கந்தகத்தையும் எடுத்து, சோதோம் கொமோரா மேல் வருஷிக்கப்பண்ணினார் (ஆதி. 19:24). அழிவுக்கு நேராய் சென்று கொண்டிருக் கிற தேசங்களை, கர்த்தர் பக்கமாய் திருப்பும்படி முழங்காலில் நின்று மன்றாடும் ஜெப வீரரை கர்த்தருடைய கண்கள் தேடுகின்றன. கிறிஸ்துவின் சீஷனாகிய தோமா இந்தியாவில் வந்து தன் இரத்தத்தை சிந்தினார். எத்தனையோ வெளிதேசத்தின் மிஷனெரிகள் இந்தியா மண்ணில் கோதுமை மணிகளாய் மடிந்தார்கள்.

சோதோமுக்காக மன்றாடின ஆபிரகாமின் ஜெபத்தை சற்று தியானித்துப் பாருங்கள். "துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள். அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. நீதிமானையும், துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. சர்வலோக நியாயாதிபதி, நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்" (ஆதி. 18:23-25).

முரட்டாட்டமாய் முறுமுறுத்த, இஸ்ரவேல் ஜனங்களுக்காக மோசே, உத்தர வாதத்தோடு திறப்பிலே நின்று மன்றாடினார். "உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தீரே. ஒரே மனிதனைக் கொல்லு கிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார், கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டு போய்விடக் கூடாதே போனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்று போட்டார் என்பார்களே.

ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக" (எண். 14:13-18) என்றார்.

மோசேயின் ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் உடனே மனதுருகினார். "உன் வார்த்தையின்படியே மன்னித்தேன் என்றார்" (எண். 14:20). மோசே ஜெபிக்கா மலிருந்திருந்தால், முழு சீனாய் வனாந்தரமும் இஸ்ரவேலரின் பிரேதங்களால் நாறிப் போயிருந்திருக்கும். அத்தனை பேரும் மரித்திருப்பார்கள். தேவபிள்ளைகளே, தேசத்துக்காக மன்றாடிய ஆபிரகாமைப்போல, மோசேயைப்போல எழும்படி ஜெபியுங்கள்.

நினைவிற்கு:- "அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்கு கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்" (ஏசா. 53:12).