கர்த்தரின் ஆச்சரியம்!

"ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது" (எசா. 59:16).

கர்த்தரே ஆச்சரியப்பட்டாரென்றால், அது நமக்கு பெரிய ஆச்சரியமாயிருக்கிறது. தாஜ்மஹாலைப் பார்த்து, நாம் பிரமித்து ஆச்சரியப்படுகிறோம். எகிப்திலுள்ள பிரமிடுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. நேபுகாத்நேச்சார் கட்டின தொங்கு தோட்டம் அன்றைக்கு உள்ளவர்களை மகிழ்ச்சியாக்கியிருந்திருக்கும். ஆனால், பரலோக மகிமையிலே இருக்கிற கர்த்தரை, ஆச்சரியப்படுத்தக்கூடியவை ஒன்று மில்லை. ஆனாலும் அவர் ஜெபம் பண்ணுகிறவர்கள் ஒருவருமில்லை. விண்ணப்பம் பண்ணுகிறவர்கள் இல்லையென்று ஆச்சரியப்பட்டாராம் (ஏசா. 59:16).

ஜெபத்திற்கு சொல்லி முடியாத வல்லமை இருந்தும் இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையிலே போதுமான ஜெபமோ, விண்ணப்பமோ இருப்பதில்லை. ஒரு கணக்கெடுப்பின்படி ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஐந்து நிமிடம்கூட ஜெபிக்காத கிறிஸ்தவர்கள்தான் ஏராளமாக இருக்கிறார்கள். ஆச்சரியப்பட்ட கர்த்தர், அவரே விண்ணப்பம் பண்ணலானார். இன்றைக்கும் இயேசு நமக்காக பிதாவின் வலதுபாரிசத்திலே பரிந்துபேசுகிறார். மட்டுமல்ல, ஆவியான வரும் நமக்குள்ளே வந்து, நமக்காக விண்ணப்பம் செய்கிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரோடு இணைந்து விண்ணப்பம் பண்ணுங்கள். நீங்கள் ஜெபிக்கிற ஜெபம்தான், பாதாளத்துக்குச் செல்லுகிற ஒரு மனிதனை, பரலோக கரைக்கு கொண்டு வருகிறது. தேவ பிரசன்னத்தைக் கொண்டு வருகிறது.

கர்த்தரை ஆச்சரியப்படுத்திய இன்னொன்றும் உண்டு. "என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது. நான் பார்த்தேன். துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று" (ஏசா. 63:4,5).

புதிய ஏற்பாட்டிலே, இயேசு நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார். இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத்.8:10). இயேசு கிறிஸ்து தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தபோது, ஜனங்கள் அவரை குறித்து இடறலடைந்தார்கள். "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா" என்றெல்லாம் பேசினார்கள். அங்கே அவர் சில நோயாளிகள் மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி வேறொரு அற்புதமும் செய்யவில்லை. "அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்" (மாற். 6:6).

ஆகவே முழு வேதத்திலும் நான்கு இடங்களிலே கர்த்தர் ஆச்சரியப்பட்டதை கண்டோம். உங்களை ஆராய்ந்து பாருங்கள். கர்த்தருடைய பாதத்திலே அமர்ந்திருந்து மற்றவர்களுக்காக விண்ணப்பம்பண்ணுகிறது உண்டா? கர்த்தரோடு எப்போதும் துணை நிற்கிற அனுபவம் உண்டா? உங்களுடைய விசுவாசம் அவரை ஆச்சரியப்பட வைக்கிறதா? அல்லது இன்னும் அவிசுவாசத்தோடு இருக்கிறீர்களா? இன்றைக்கு உங்களை பார்த்து உலகம் ஆச்சரியப்பட்டு, "இவன் கிறிஸ்தவன், கிறிஸ்துவோடு இருக்கிறவன், ஜெபிக்கிறவன், கர்த்தருக்காக அக்கினி ஜுவாலையாய் பற்றி பிரகாசிக்கிறவன்" என்றெல்லாம் ஆச்சரியப்படட்டும்.

நினைவிற்கு:- "பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்து கொண்டார்கள்" (அப். 4:13).