ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்!

"சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்" (எபே. 6:18).

வேதம் உங்களுக்கு கொடுக்கும் நான்காவது ஜெபக்குறிப்பு இது. ஆம், ஊழியர் களை, கர்த்தர் பாதுகாத்து கொள்ளும்படியாக ஊக்கமாக ஜெபியுங்கள். ஊழியத்தில் நிற்கிற அவர்கள், போர்க்களத்தில் நிற்பதைப்போல எதிரியின் தாக்குதலில் நிற்கிறார்கள். நோய்களை, வியாதிகளை, பில்லிசூனியங்களை, அசுத்தங்களை, மந்திரவாதிகளை அவர்கள் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது.

ஒரு விசுவாசியின் வீழ்ச்சியைப் பார்க்கிலும், ஒரு ஊழியனின் வீழ்ச்சியே சாத்தானுக்கு மிக முக்கியம். வல்லமையாய் பிரகாசிக்கும் ஒரு ஊழியன் விழுந்தால், அவன் மூலம் இலட்சக்கணக்கான மக்கள், கிறிஸ்துவண்டை வருவதை தடுத்து நிறுத்தி விடுவான். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படாமல் பார்த்துக்கொள்வான். ஊழியரின் வீழ்ச்சியில், கர்த்தருடைய நாமத்தை தூற்றித் திரிவான்.

அநேகர் கர்த்தருடைய ஊழியனை தலையின்மேல் தூக்கி வைத்து, ஆனந்த கூத்தாடி அவனை புகழ்ந்து, அவன் வீழ்ச்சிக்கு வழி வகுப்பார்கள். அவன் விழுந்து விட்டாலோ, அவனை காறித் துப்பி, காலின் கீழ் மிதித்து, காலமெல்லாம் தூற்றித் திரிவார்கள். ஆனால் அவனுக்காக பாரத்தோடு, கண்ணீரோடு ஜெபிப்பதற்கு ஆட்களில்லை. அவனை உற்சாகப்படுத்த, பரிந்து பேச, ஜெப வீரர்கள் இல்லை. அப். பவுல் தன் ஜெப விண்ணப்பத்தை எழுதினார். "சுவிசேஷத்திற்காகச் சங்கிலி யால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான், தைரியமாய் என் வாயைத் திறந்து, சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப் படும்படி, எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்" (எபே. 6:19,20).

ஒரு முறை ஒரு மிஷனெரி, இரவில் பயங்கரமான காட்டுப்பாதையின் வழியாக தனியாக நடந்து செல்ல வேண்டியிருந்தது. அது ஆபத்தும், கள்ளர் பயமும் உள்ள பாதையாயிருந்தபடியால், அந்த ஊழியருக்காக முப்பது விசுவாசிகள் ஊக்கமாக ஜெபித்தார்கள். இரவில் அந்த மிஷனெரி நடுகாட்டில் தங்கியபோது, எந்த மிருகமோ, எந்த திருடரோ அவரை சேதப்படுத்தவில்லை. அவர் சுகமாக, தான் போய்ச் சேரவேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்தார்.

சில நாட்களுக்குப் பின் அவர் ஆஸ்பத்திரி ஊழியத்திற்கு சென்றபோது, அங்கே ஒரு மனிதன் சொன்னான். "ஐயா, நான் ஒரு கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன். சில நாட்களுக்கு முன்பு இரவில் நீங்கள் தனியாய் புறப்பட்டு காட்டின் வழியே சென்றதை கவனித்து, உங்களை கொள்ளையடிக்க வந்தேன். அப்பொழுது உங்களோடுகூட முப்பது பேர் கைகளில் உருவின வாளோடு, உங்களை சூழ நடந்து வருவதைப் பார்த்தேன். அவர்களை கண்டபோது, நான் மிகவும் பயந்து நடுங்கி திரும்பி விட்டேன்" என்றார். அந்த இரவுதான் அந்த மிஷனெரிக்காக முப்பது பேர் ஜெபித்த இரவாகும். கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டு, முப்பது தேவதூதர்களை அவருக்கு துணையாக அனுப்பி வைத்தார்.

டி.எல். மூடி என்ற பக்தன், தனக்காக ஊக்கமாய் ஜெபிக்கக்கூடிய ஜெப வீரர்களை வைத்திருந்தார். ஆகவே அவர் வல்லமையாய் ஊழியம் செய்து ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணினார். அவர் செல்லுகிற இடங்களிலெல்லாம் பெரிய எழுப்புதல் உண்டாயிற்று. 1905-ம் ஆண்டு வேல்ஸ் தேசத்தில் பெரிய எழுப்புதல் ஏற்பட அங்கிருந்த முந்நூறு ஜெபக்குழுக்கள் காரணமாகும்.

நினைவிற்கு:- "நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன். கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன். கருத்தோடும் பாடுவேன்" (1 கொரி. 14:15).