பின்மாரிக்காக ஜெபியுங்கள்!

"பின்மாரி காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்" (சகரி. 10:1).

கர்த்தர் தருகிற ஐந்தாவது ஜெபக்குறிப்பு இது. ஆவியின் மழையால், எழுப்புதல் உண்டாகிறது. எழுப்புதலால், ஜெபவீரர்கள் எழும்புகிறார்கள். ஜெபத் தீயும் பற்றி எரிகிறது. ஆகவே பின்மாரி காலத்து மழைக்காக வேண்டிக்கொள்ளுவது எவ்வளவு அவசியம்! இந்த கடைசி நாட்களில் ஆவியின் பின்மாரி மழையானது, வல்லமையான அற்புத செயல்களுடன் அபரிமிதமாய் ஊற்றப்பட ஊக்கமாய் ஜெபியுங்கள். ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களில் ஒரு முன்மாரி ஊற்றப்பட்டது. எழுப்புதலின் நதி கரைபுரண்டு ஓடினது. சீஷர்கள் ஜெபித்தபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். பேதுரு வசனத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது,கேட்டுக்கொண்டிருந்த யாவர்மேலும் ஆவியான வர் இறங்கினார் (அப். 10:44).

இது கடைசி காலம். "மாம்சமான யாவர்மேலும், என் ஆவியை ஊற்றுவேன்" என்று கர்த்தர் வாக்களித்தபடியே, இன்றைக்கு அவர் ஊற்றிக்கொண்டிருக்கிறார் (யோவே. 2:28). இந்த பின்மாரி மழைக்காக ஊக்கமாக நீங்கள் ஜெபிப்பீர்களானால், எலியாவின் நாட்களைப்போல அக்கினி இறங்கப்பண்ணுவார். ஏசாயாவின் ஜெபம் என்ன தெரியுமா? "தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்" (ஏசா. 64:2).

பின்மாரி மழையைக் குறித்த ஏக்கமும், எதிர்பார்ப்பும், உங்களை ஊக்கமான ஜெபத்துக்குள் வழிநடத்தட்டும். மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதறுவதுபோல, எழுப்புதலை தாகத்தோடு வாஞ்சியுங்கள். தேவனாகிய கர்த்தர், பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்புகிறவர் (லூக். 1:53). தாகமுள்ளவர்கள்மேல் ஆறுகளை ஊற்றுகிறவர் (ஏசா. 43:20). தேவபிள்ளைகளே, உங்களுடைய ஜெப வேளை, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிற ஜெப வேளையாயிருக்கட்டும். கர்த்தர் பலத்த இடிமுழக்கங்களோடு, பின்மாரி மழையை அனுப்புவார்.

பவுண்ட்ஸ் என்ற பக்தன் சொல்லுகிறார், "உயிருள்ள ஆத்துமா, தேவனிடத்தில் கதறும் வேண்டுதல்தான் ஜெபம்! ஸ்பர்ஜன் என்ற தேவ மனிதன் சொன்னார்: "மனிதனை முத்தமிட தேவன் தாழ்ந்து குனியும் நேரமே ஜெப நேரம். சர்வ வல்லவரின் தசை நார்களை அசைக்கும் சிறிய நரம்புகளே, ஜெபம்" என்கிறார். எங்கெங்கெல்லாம் தேவ ஜனங்கள் ஜெபிக்கிறார்களோ, அங்கெங்கெல்லாம் எழுப்புதல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார்கள். நடன, நாடக சாலைகள், சினிமா சாலைகள், இழுத்து மூடப்பட்டன. தெருக்கள்தோறும், வீடுகள் தோறும் கண்ணீரோடு அழுது ஜெபிக்கும் ஜெப சத்தங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன. கர்த்தர் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு, பின்மாரி பெருமழையை அனுப்பிக் கொண்டிருந்தார்.

தேவபிள்ளைகளே, கடைசி காலத்துக்கு வந்துவிட்டோம். நோவாவின் காலத்தில் எழுத்தின்படியான மழை பெய்தது. சிறு தூறலாய் ஆரம்பித்த மழை, போகப் போக பெரும் மழையாக, அடை மழையாக, பேய் மழையாக பலத்தது. முடிவிலே கர்த்தர் வானத்தின் மதகுகளையெல்லாம் திறந்துவிட்டார். அப்படிதான் வருகைக்கு முன்பாக ஒரு பெரும் மழை பெய்யும். அந்த மழையின் காரணமாக இரட்சிப்பின் பேழை உன்னதத்திற்கு உயர்த்தப்படும்.

நினைவிற்கு:- "அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்" (ஓசியா 6:3).