விழ வேண்டுமானால்!

"நீங்கள் ஆர்ப்பரியாமலும், உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்" (யோசு. 6:10).

எரிகோ கோட்டையும், மதிலும் உங்களுக்கு முன்பாக நொறுங்கி விழ வேண்டு மென்றால், நீங்கள் மவுனமாக, அமைதியாக, அதை சுற்றி வர வேண்டும். ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதமும், ஏழாம் நாள் ஏழு முறையும் மவுன மாய் சுற்றி வரவேண்டும். அதுதான், இரும்பு கதவை கர்த்தர் தகர்த்து, வெண்கல தாழ்ப்பாள்களை முறிக்கிற ஒருநேரம். இது எப்படியாகும்? என்று, சந்தேகப்பட்டு கேட்டுக்கொண்டிருக்க வேண்டாம். ஆம், அதுதான் மவுனத்தின் வல்லமை!

இஸ்ரவேல் ஜனங்கள், வனாந்தரத்திலே நாற்பது வருடங்கள் நடந்தபோது, அவர்கள் முறுமுறுத்துக்கொண்டேயிருந்தார்கள். இதனால், கர்த்தரால் பெரிய காரியம் செய்ய முடியவில்லை.

மிரியாம், தன்னுடைய சகோதரனாகிய மோசேயை, தேவனுடைய ஊழியக்காரன் என்பதைப் பாராமல், அவரை குற்றஞ்சாட்டி, குறை சொல்லிக்கொண்டிருந்தாள். "கர்த்தர் மோசேயைக் கொண்டு தான் பேசுவாரா? என்னைக் கொண்டு பேச மாட்டாரா? அவர். எப்படி எத்தியோப்பியா ஸ்திரீயை விவாகம் பண்ணலாம்?" என்று முறுமுறுத்தாள். கர்த்தருக்கு கோபம் வந்தது. அதினிமித்தம், அவள் உறைந்த மழையைப்போல, குஷ்டரோகியாய் மாறினாள்.

ஆ, முறுமுறுப்பு கர்த்தருக்கு அருவருப்பு! எதை கர்த்தரிடத்திலே கேட்டாலும், முறுமுறுத்துக் கேட்காமல் சந்தோஷமாய், கர்த்தரைத் துதித்து கேளுங்கள். அப்போது, அவர் மனமகிழ்ச்சியுடையவராய், உங்கள் வேண்டுதலை உங்களுக்கு அருள் செய்வார்.

முன்பெல்லாம், ராஜாக்கள் ஒரு பட்டணத்தைப் பிடிக்க எண்ணும்போது, பெரிய பெரிய யானையைக் கொண்டு, வாசல்களிலே கதவுகளை அடித்து உடைப்பார்கள். வெண்கல கதவுகளை ஈட்டிக்கொண்டு முறிப்பார்கள். மரக் கதவுகளாயிருந்தால், தீ வைத்து கொளுத்துவார்கள். ஆனால் இங்கே கர்த்தர், இஸ்ரவேல் புத்திரரிடம் பரிந்துரை செய்த ஆயுதம் என்ன? ஆம், அதுதான் மவுனம்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தரும்படி, ஒரு பக்கம் சுபாஷ் சந்திரபோஸ் முயன்றார். யுத்தமின்றி, இரத்தம் சிந்துதலின்றி சுதந்திரம் கிடைக்காது என்று முழங்கி, படை திரட்டி, ஆங்கிலேயரோடு யுத்தம் செய்யப்போனார். ஆனால் காந்திஜி அவர்களோ, கர்த்தருடைய வழியை பின்பற்றி, அகிம்சை, சத்தியாக்கிரகம் என்று, மவுன போரிலே ஈடுபட்டார். யுத்தத்திற்கு ஆங்கிலேயர் அஞ்சவில்லை.

ஆனால் காந்திஜியின் மவுனம், அவர்களுடைய உள்ளத்தை உடைத்தது. சுதந்திரம் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். காந்திஜி, மேற்கோள் காட்டின வசனம் என்ன தெரியுமா? "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்" (மத். 5:5).

"சாந்தமும், அமைதியுமுள்ளவர்கள், பூமியை சுதந்தரித்துக்கொள்வார்களென் றால், நாம், ஏன் இந்தியாவை சுதந்தரித்துக்கொள்ள முடியாது?" என்று அவர் கேட்டார், தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு இரக்கம் செய்கிற வரையிலும் மவுனமாய், ஜெபத்தோடு, கர்த்தருடைய பாதத்திலே காத்திருங்கள். நிச்சயமாய் உங்கள் காரியம் வெற்றியாய் விளங்கும்.

நினைவிற்கு:- "கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்" (சங். 40:1).