யோபுவின் நண்பர்கள்!

"அவனோடு (யோபுவோடு) ஒரு வார்த்தையும் பேசாமல், இரவு பகல் ஏழுநாள், அவ னோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்" (யோபு 2:13).

யோபுக்கு மூன்று சிநேகிதர் இருந்தார்கள். முதலாவது, எலிப்பாசும், இரண்டாவது, பில்தாத்தும், மூன்றாவது, சோப்பாரும் (யோபு 2:11). யோபுக்கு மூண்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காக பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள், தூரத்தில் வருகையில் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருதெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தன் தன் சால்வையை கிழித்து, வானத்தைப் பார்த்து, தங்கள் தலையின்மேல் புழுதியை தூற்றிக் கொண்டார்கள். அவர்கள், ஏழு நாள் ஒன்றும் புசியாமலிருந்தாலும், அவர்கள் சும்மா வந்து அமர்ந்ததே, யோபுக்கு ஆறுதலாயிருக்கும். அந்த அமைதியிலும்கூட, "என் நண்பர் கள், எனக்காக இவ்வளவு தூரத்திலிருந்து வந்தார்களே, ஒன்றும் சாப்பிடாமல் தரையிலே உட்கார்ந்திருக்கிறார்களே" என்று அவர் எண்ணினார்.

சில வேளைகளில், வியாதியஸ்தரைப் பார்க்கப்போகிறோம். சிலரோடு, ஐந்து வார்த்தைகள் பேசினாலும், அவர்களுக்கு ஆறுதலாயிருக்கும். உற்சாகப்படுத்தி வாக்குத்தத்தத்தைப் பேசும்போது, அவர்களுடைய விசுவாசம் உறுதிப்படும். ஆனால், சில வியாதியஸ்தர் மூச்சு பேச்சற்றுக் கிடப்பார்கள். பேசினாலும், அவர்கள் காதுகளிலே கேட்க முடியாது. அமைதியாய் உட்கார்ந்து, அவர்களுடைய கையைப் பிடித்து, "இயேசு, இயேசு" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, கிறிஸ்துவின் பிரசன்னம் அவர்களை சூழ்ந்துகொள்ளும்.

யோபின் சிநேகிதர்கள்கூட, தாங்கள் அமைதியாய் உட்கார்ந்து திடப்பட்டப்பிறகு, பேச ஆரம்பித்தார்கள். எவ்வளவு மனதை உடைக்கிற பேச்சு. "உம்மில், ஏதோ இரகசிய பாவங்கள் இருக்கிறதினால்தான், நீர் இவ்வளவு கஷ்டப்படுகிறீர் " என்பதுபோல, முப்பது அதிகாரங்களை, பேசியே அவருடைய இருதயத்தை உடைத்தார்கள். கடைசியில் ஆண்டவர் குறுக்கிட்டு, "எலிப்பாசை நோக்கி: உன்மேலும், உன் இரண்டு சிநேகிதர்கள்மேலும், எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை" (யோபு 42:7) என்று சொன்னார்.

"யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறை யிருப்பை மாற்றினார்" (யோபு 42:10). பேசி, பேசி, மற்றவர்களுடைய துன்பத்தை வளர்த்துவிடாமல், மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்த்து, அவர்களுடைய மனதை புண்படுத்தாமல், அமைதியாயிருப்பது நல்லது.

இங்கே, புத்திமான்களைக் குறித்து ஆமோஸ் பேசுகிறார். "யார் புத்திமான்கள்?" ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார், "புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே, நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை" (ஏசா. 57:1). வருகையைப் பற்றிய தரிசனம் உள்ள வன், மௌனமாய் இருப்பான். ஆனால், இந்தப் பூமியில் தங்களுடைய நியாயத்தை நிலைப்படுத்த வேண்டுமென்றிருப்பவர்கள் தப்பிக்கொண்டிருப்பார்கள். தேவ பிள்ளைகளே, நீங்கள் அமைதியாயிருந்தால், கர்த்தர் உங்களுக்கு நீதி செய்வார்.

நினைவிற்கு:- "நீதிமானையும், துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்" (ஆதி. 18:25).