சாந்தம் வாசமாயிருக்கும்!

"பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்" (2 கொரி. 10:1).

கிறிஸ்து உங்கள் இருதயத்தில் வாசமாயிருந்தால், நிச்சயமாகவே கிறிஸ்துவின் சாந்தமும், உங்களில் வாசமாயிருக்கும். பழைய ஏற்பாட்டிலே மோசே, "மிகுந்த சாந்தகுணமுள்ளவர்" என்று அழைக்கப்பட்டார். புதிய ஏற்பாட்டிலே, கிறிஸ்து தெய்வீக சாந்தத்தை, தம்முடைய வாழ்க்கை மூலமாய் வெளிப்படுத்தினார். "நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்றார்" (மத். 11:29,30).

நீங்கள் கிறிஸ்துவுக்கு எந்த அளவு உங்களை ஒப்புவிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு கிறிஸ்துவின் சாந்தமும் உங்களில் கிரியை செய்யும். உங்கள் திராணிக்குமேல் தேவன் உங்களை சோதிக்கிறவர் அல்ல (1 கொரி. 10:13). சில வேளைகளிலே உபத்திரவமும், பாடுகளும் வரும்போது, உங்களில் வாசம்பண்ணுகிற ஆவியானவர், ஆவியின் கனியாகிய சாந்தத்தை உங்களுக்குள்ளே பெருகப்பண்ணுகிறார். ஆகவே, நீங்கள் அமைதலோடு இளைப்பாற முடியும்.

சாந்தகுணமில்லாதவர்கள், எதற்கெடுத்தாலும் அவசரப்படுவார்கள். டென்ஷனாகி விடுவார்கள். பதறி பேசிவிடுவார்கள். ஒரு முறை ஒரு லாரியின் பின்பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு வார்த்தை என் கவனத்தை ஈர்த்தது. "பதறினால் சிதறிவிடுவாய்." சிலர் பதறிப்போய், முடிவிலே ஆபத்தில் விழுகிறார்கள். சாந்தகுணமுள்ளவர்களோ "கர்த்தர் பார்த்துக்கொள்வார்; கர்த்தர் எனக்காக வழக்காடி யுத்தம் செய்வார்" என்று திடமனதாயிருப்பார்கள்.

ஒரு அம்மா சாட்சி சொல்லும்போது, "நான் ஒரு புழு, பூச்சி துடைத்துப் போடும் குப்பை" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு குறும்பான வாலிபன், அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் ஏறுகிற பஸ்சிலே ஏறி, அவர்களுடைய காலின் பெருவிரலிலே மிதித்து விட்டான். அந்த அம்மாவுக்கு வந்ததே கோபம். பாம்பைப்போல சீறி, கோபத்தை உமிழ்ந்தது மட்டுமல்ல, அவனை ஓங்கி அறைந்துவிட்டார்கள். அதற்கு அந்த வாலிபன், "நீங்கள் உங்களை புழு என்று சொல்லி சாட்சி கொடுத்தீர்கள். ஆனால் நீங்கள் புழு அல்ல; சீறுகிற பாம்பு" என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள். கிறிஸ்து இயேசுவிலுள்ள சிந்தை உங்களில் இல்லையே" என்றான்.

அருமையான ரோஜா மலரை எவ்வளவுதான் கொடிய, கூரிய முட்கள் குத்தினா லும், அது இனிமையான வாசனையையே பரிமளிக்கும். முட்கள் மத்தியிலுள்ள லீலிபுஷ்பமும் அப்படித்தான். இயேசுவைப் பாருங்கள்! சிலுவையிலே அவர் தொங்கும்போது, அவரை ஆணிகளால் கடாவினவர்களையும், ஈட்டியால் குத்தின வர்களையும் மன்னித்து, "பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று பரிந்துபேசினார்.

பாலை எவ்வளவுதான் காய்ச்சினாலும் அது கறுப்பாகிவிடாது. அதிக சுவையைத் தான் கொடுக்கும். சந்தன மரத்தை எவ்வளவுதான் தேய்த்தாலும், அது முறுமுறுக்காது. அருமையான வாசனையைத்தான் பரிமளிக்கும். தேவபிள்ளைகளே, எவ்வளவுதான் நீங்கள் பாடுகளின் பாதையிலே போனாலும், கிறிஸ்துவின் சாந்த குணத்தை வெளிப்படுத்துங்கள். அது தெய்வீகமானது.

நினைவிற்கு:- "சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வை யில் விலையேறப்பெற்றது" (1 பேது. 3:4).