வல்லமை வாசமாயிருக்கும்!

"என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்" (2 கொரி. 12:9).

உங்களுக்குள்ளே வாசம்பண்ணும் கிறிஸ்துவுக்குள், சகல வல்லமைகளும் இருக்கின்றன. சிருஷ்டிப்பின் வல்லமை அவருக்கு உண்டு. உருவாக்கும் வல்லமை உண்டு. வியாதிகளை குணமாக்கும் வல்லமை உண்டு. மரித்தோரை உயிரோடு எழுப்பும் வல்லமை உண்டு. மட்டுமல்ல, கடைசி பரியந்தம் வழுவாதபடி உங்களை பாதுகாத்துக்கொள்ளும், வல்லமையும் உண்டு.

ஆகவே நீங்கள் விசுவாசத்தோடு, "எனக்குள் ஒருவர் இருக்கிறார். அவர் வானாதி வானங்களை சிருஷ்டித்த வல்லமையுள்ளவர். ஆகவே அவருடைய வல்லமையெல்லாம் எனக்குரியது" என்று சொல்லுங்கள். அப். பவுல், அந்த வல்லமையை தன்னுடைய சரீரத்தில் உணர்ந்தார். "கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்" என்றார் (2 கொரி. 12:9).

ஒருமுறை இயேசு தம்முடைய சீஷர்களோடு இருந்தபோது, கடல் கொந்தளித்தது. புயல் காற்று வீசினது. படகு அமிழ்ந்துவிடுமோ என்ற பயம், சீஷர்களுக்கு ஏற்பட்டது ஆகவே, கப்பலின் அடித்தட்டில் களைப்புடன் இளைப்பாறிக்கொண்டிருந்த, இயேசுவை அவர்கள் எழுப்பினார்கள். அவர் எழுந்தார். "அற்ப விசுவாசிகளே, ஏன் பயப்பட்டீர்கள்?" என்று சொல்லி, காற்றையும், கடலையும் அதட்டினார். அப்படியே புயல் நின்றது. கொந்தளிப்பு அமர்ந்தது. அப்பொழுது சீஷர்கள், ஆச்சரியப்பட்டு, "இவர் யாரோ, இவருடைய வார்த்தைக்கு காற்றும், கடலும் கீழ்ப்படிகிறதே?" என்று பேசிக்கொண்டார்கள்.

இப்பொழுது இயேசு நம்மோடும், நமக்குள்ளும் இருக்கிறார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும், தனக்குள்ளாக கிரியைச் செய்கிற கிறிஸ்துவின் வல்லமையை உணர்ந்து, அதை தனது ஜீவியத்தில் அனுபவிக்க வேண்டும் (எபே. 3:20). கிறிஸ்து இயேசுவினுடைய வல்லமை, ஆவியிலே வரும் சகல கலக்கங்களையும், பயங்களையும் விரட்டியடிக்கிறது. உங்களுடைய பலவீனங்களிலே, கர்த்தரின் பலன் பூரணமாய் விளங்கும். ஆகவே "பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக" (யோவே. 3:10).

அப்.பவுல் சொல்லுகிறார், "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எப்பக்கத் திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை" (2 கொரி. 4:7-9). "ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரி. 4:16).

தேவபிள்ளைகளே, உங்களுக்குள்ளிருக்கிறவர் ஒவ்வொருநாளும் உங்களை தம்முடைய வல்லமையினாலும், பலத்தினாலும் இடைக்கட்டிக் கொண்டே யிருக்கிறார். நீங்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து சீயோனிலே தேவ சந்நிதியில் வந்து காணப்பட வேண்டுமென்பது அவருடைய நோக்கம் (சங். 84:7). ஆகவே உங்களை சோர்ந்து போகப்பண்ணுகிற, தூசிகளை உதறிவிட்டு, தேவ வல்லமையைத் தரித்துக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலி. 4:13).