ராஜாவால் கூடாதது!

"ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானி யேலைக் காப்பாற்றும்படிக்கு, பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான்" (தானி. 6:14).

பாபிலோனுக்கு அடுத்து, மாபெரும் வல்லரசாக மேதிய, பெர்சிய சாம்ராஜ்யம் திகழ்ந்தது. அதில் தரியு ராஜா மேதியனாயிருந்து, சர்வாதிகாரத்தோடு அரசாண்டு வந்தான். தானியேலை, ராஜா மிகவும் நேசித்தான். தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால், அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த, ராஜா நினைத்தான் (தானி. 6:3).

ஒரு சாம்ராஜ்யத்தில், சக்கரவர்த்தியே மிகப் பெரியவன். ராஜாவின் கோபத்தை, ஒருவனாலும் எதிர்த்துநிற்க முடியாது. எல்லா சட்ட திட்டங்களையும், ஏற்படுத்து கிறவன் அவன்தான். அப்படியிருக்கும்போது, அந்த ராஜ்யத்தின் பிரதானிகள், தானியேலை அவனுடைய தேவனைப் பற்றிய விஷயத்திலே, குற்றம் கண்டு பிடிக்கும் முகாந்தரத்தைத் தேடினார்கள். தந்திரமாய் ராஜாவிடத்தில் வந்து, "தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எவனாகிலும் முப்பது நாள் வரையில் ராஜாவாகிய உம்மைத் தவிர, எந்த தேவனையானாலும், மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்தும் விண்ணப்பம் பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட வேண்டும்" என்று, ஆலோசனை சொன்னார்கள். ராஜாவை நிர்ப்பந்தித்து, அந்த பத்திரத்துக்கு கையெழுத்தும் வாங்கினார்கள்.

ஆனால் தானியேலோ, சட்ட திட்டங்களுக்குப் பயப்படவுமில்லை, பிரதானிகளுக்கு அஞ்சவும் இல்லை. எந்த மனுஷனுக்கும் பயப்படாமல், "தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேல் அறையிலே, எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்" (தானி. 6:10).

பார்க்கிறவர்கள் பார்க்கட்டும். கோள் மூட்டுகிறவர்கள் மூட்டட்டும். என் கர்த்தர் பெரியவர். அவர் ஆபிரகாமிலும், ஈசாக்கிலும், யாக்கோபிலும் பெரியவர் மட்டுமல்ல, இந்த தரியு ராஜாவிலும் பெரியவர். மேதிய, பெர்சிய சாம்ராஜ்யங்களை விட பெரியவர் என்பது, தானியேலின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரதானிகள் என்ன நினைத்திருப்பார்கள்? இவன் என்ன, பாபிலோனிலே வாழ்ந்துகொண்டு, எருசலேமுக்கு நேராய் தன் பலகணிகளைத் திறந்து வைத்திருக் கிறான்? அப்படியானால் அவன், தேசத்துரோகி. ராஜாவின் சட்டத்தை மதிக்காததினால், ராஜதுரோகி. அவனை, சிங்கக் கெபியிலே போடவேண்டுமென்று துடியாய் துடித்திருப்பார்கள்.

ஆனால், தரியு ராஜா, "தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற் றும்படிக்கு, அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்குமட்டும் பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தான்" (தானி. 6:14).

தானியேலுக்கு தெரியும், "கர்த்தரால் முடியும். "ராஜாவால் முடியாதது, சட்டத்தை இயற்றினவனால் முடியாதது, ராஜாதி ராஜாவும், தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தருமான ஆண்டவரால் முடியும்." கர்த்தர் பேரில் விசுவாசமாயிருந்த படியால், சிங்கங்கள் அவனை சேதப்படுத்தாதபடிக்கு, கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி, சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். தேவபிள்ளைகளே, கர்த்தரால் முடியாதது ஒன்றுமில்லை. அவர் வானத்திலும், பூமியிலும் சகல அதிகார முடையவர். அவர், நிச்சயமாகவே உங்களுக்கு அற்புதம் செய்வார்.

நினைவிற்கு:- "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல், குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்" (ரோம. 8:33).