பிரயாசத்தால் முடியாதது!

"அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே, வலையைப் போடு கிறேன் என்றான்" (லூக். 5:5).

கர்த்தர் சீமோன் பேதுருவை, கலிலேயா கடற்கரையின் அருகே கண்டார். சீமோன் ஒரு மீன்பிடிக்காரர். நான் நினைக்கிறேன், தலைமுறை தலைமுறையாகவே அந்த குடும்பத்தினர், மீன் பிடித்தொழிலில் இருந்திருப்பார்கள். நல்ல அனுபவம் அவருக்கு இருந்தது. இரவு முழுவதும் பிரயாசப்பட்டார். ஆனாலும், ஒரு சின்ன மீனைக் கூட அவரால் பிடிக்க முடியவில்லை. தோல்வியிலும் படுதோல்வி.

ஆனால் தேவபிள்ளைகளே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். "பிரயாசத்தாலும், அனுபவத்தாலும் முடியாதது, தேவனாலே முடியும்." தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை." அவர்தான், உங்களுடைய தோல்வியை ஜெயமாக மாறப்பண்ணு கிறவர். அவர் உங்களுடைய பிரயாசத்தை ஆசீர்வதிக்கும்போது, நிச்சயமாகவே நீங்கள் ஆசீர்வாதமுள்ளவர்களாய் திகழுவீர்கள்.

சீமோன் பேதுரு, தன்னுடைய படகைக் கர்த்தருக்குக் கொடுத்தார். இயேசு அந்த படகில் ஏறி உட்கார்ந்து, சூழ உள்ள ஜனங்களுக்கு பிரசங்கம் பண்ணினார். சரித்திர ஆசிரியர்கள், "இயேசுவின் நாட்களிலே கலிலேயா கடலைச் சுற்றிலும் ஏறக்குறைய இரண்டாயிரம் படகுகள் இருந்தன" என்று சொல்லுகிறார்கள். எந்த படகுக்குமில்லாத ஆசீர்வாதம், பேதுருவின் படகுக்கு வந்தது. தனக்கு படகைக் கொடுத்த பேதுருவுக்கு, அற்புதம் செய்யாமல், கர்த்தர் கடந்து போகவில்லை.

நீங்கள் வீட்டைக் கொடுத்தால், உங்களுடைய வீட்டுக்கு ஒரு ஆசீர்வாதம். பிள்ளைகளைக் கர்த்தருக்கென்று கொடுத்தால், அதில் ஒரு ஆசீர்வாதம். தசமபாகங் களை கர்த்தருக்கென்று கொடுத்தால், நிச்சயமாகவே வானத்தின் பலகணிகளைத் திறப்பார். நீங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி, கர்த்தருக்கு கீழ்ப்படியுங்கள்.

வேதம் சொல்லுகிறது, "அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்" (லூக். 5:6). கர்த்தருடைய அற்புதத்தை, கண் எதிரே பேதுரு கண்டார். இரவு முழுவதும் பிரயாசப்படும்போது, அந்த மீன்கள் எங்கே போயிற்று? ஆம், இல்லாத இடத்திலும், உருவாக்கித்தர ஆண்டவர் வல்லமையுள்ளவர். அவரால் முடியும். எல்லாம் முடியும்.

பேதுருவினுடைய வலையிலே, "சிருஷ்டிக்கப்பட்ட புதுப் புது மீன்கள்" வந்து விழுந்திருக்கும் என்று நம்புகிறேன். அவர், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல, அழைக்கிற தேவன். வெறுமையிலிருந்து சகலவற்றையும் சிருஷ்டித்தவர். உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க வல்லமையுள்ளவர். மீன்மேல் உங்களது நம்பிக்கையை வைக்காதிருங்கள். கர்த்தர்மேல் நம்பிக்கை வையுங்கள். உங்கள் படிப்பையும், அனுபவத்தையும், பிரயாசத்தையும் சார்ந்திராதிருங்கள். கர்த்தருடைய ஆலோசனையைக் கேட்டு, அவருடைய வார்த்தையின்படியே செய்யுங்கள். அவர் ஆலோசனைக் கர்த்தா (ஏசா. 9:6).

வேதம் சொல்லுகிறது: "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை, உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங். 32:8). கிறிஸ்துவின் ஆலோசனையின்படி, நீங்கள் நடக்கும்போது, முடியாதவைகள் முடியும். அற்புதங்கள் நடக்கும். அவர் யோசனையில் பெரியவரும், செயலில் வல்லவருமான கர்த்தர். அவரால் செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. ஆம், முடியும். கர்த்தராலே முடியும்.

நினைவிற்கு:- "அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்" (லூக். 5:10).