ஊசியின் காதில்!

"ஐசுவரியவான், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும்,ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்

(லூக். 18:25).

"ஊசி" மிகச் சிறியது. அதிலும் ஊசியிலிருக்கும் காது இன்னும் சிறியது. அந்த சிறிய துவாரத்தில் நூலை நுழைத்து, துணி தைப்பார்கள். அவ்வளவு மிகச் சிறிய ஊசியின் காதுக்குள், எப்படி ஒட்டகத்தை நுழைய வைக்க முடியும்? உலகத்தார் தங்களுடைய அறிவிலிருந்து, ஞானத்திலிருந்து, உடனே சொல்லிவிடுவார்கள். "இது முடியாது. முடியவே முடியாது." ஆனால் கர்த்தர் சொல்லுகிறார், "முடியும், தேவனாலே முடியும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை."

ஒருநாள், ஒரு செல்வந்தனான வாலிபன் இயேசுவினிடத்தில் வந்து, "நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்" (லூக். 18:18). அவன் ஐசுவரியவான் மட்டுமல்ல, நியாயப்பிரமாணத்தை சிறுவயதிலிருந்தே கைக்கொண்டிருக்கிறவன். அவனை, ஆண்டவராகிய இயேசு, நோக்கிப் பார்த்து: "இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்திலே, உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு, என்னைப் பின்பற்றிவா என்றார்" (லூக். 18:22).

அவன் அதிக ஐசுவரிமுள்ளவனாயிருந்தபடியால், இதைக் கேட்டபோது, மிகுந்த துக்கமடைந்தான். "அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு, ஐசுவரியமுள்ள வர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டக மானது, ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்" (லூக். 18:24,25). "அதைக் கேட்டவர்கள்: அப்படியானால், யார் இரட்சிக்கப்படக்கூடும்? என்றார்கள். அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள், தேவனால் கூடும் என்றார்" (லூக். 18:26,27).

எருசலேமுக்கு பன்னிரண்டு வாசல்களிருந்தன. ஒவ்வொரு காலத்திலும், இஸ்ரவேலரின் எதிரிகள், ஒரு பிரதான வாசலின் வழியாக, குதிரை மூலமாகவோ, ஒட்டகத்தின் மூலமாகவோ உள்ளே நுழைந்து, கோட்டையைப் பிடித்துவிடுவார்கள் என்பதற்காக, இஸ்ரவேலர் பெரிதான அந்த வாசலை மிகவும் சுருக்கி, ஒரு ஆள் மட்டுமே நுழையத்தக்க, சிறிய வாசலாக்கிவிட்டார்கள். ஆகவே, அந்த வாசல் "ஊசியின் வாசல்" என்று அழைக்கப்பட்டது. என்றாலும், ஒட்டகத்தை நடத்தி வருகிற வியாபாரிகள், அந்த ஒட்டகங்களை முழங்கால்படியிட வைத்து, முதலில் தலையை உள்ளே நீட்டி, கொஞ்சம் கொஞ்சமாய் முழங்காலிலே நடக்க வைத்து, கஷ்டப்பட்டு அந்த வாசலுக்குள் வந்துவிடுவார்கள். தேவனுடைய பிள்ளைகள், அந்த ஊசியின் வாசலை, முழங்காலின் வாசலாக, ஜெபிக்கிற வாசலாக, மாற்றி விடுவார்கள்.

ஆம், முழங்கால் ஊன்றி ஜெபிக்கிறவனுக்கு, ஐசுவரியம் ஒரு தடையல்ல. தேவனுடைய பிள்ளைகள் ஐசுவரியவான்களாயிருந்தும், ஜெபித்து, நித்திய ஜீவனைப் பற்றிக் கொண்டார்கள். கர்த்தருடைய ராஜ்யத்துக்குள் பிரவேசித்தார் கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற முற்பிதாக்கள், ஐசுவரியவான்களாக இருந்தார்கள். திரளான ஆடுகள், மாடுகள், மிருக ஜீவன்கள் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும், அவர்கள் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றி, கடைசிவரை ஜெபத்தில் தரித் திருந்தார்கள். பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்தார்கள். ஆம். தேவனாலே கூடும்.

நினைவிற்கு:- "நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன். கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார். அவர் சீமானாயிருக்கிறார்" (ஆதி. 24:34,35).