யுத்தக் காலத்தில்!

"என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு. அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்" (எரே. 32:8).

அது ஒரு யுத்தக் காலம். இஸ்ரவேலுக்கு விரோதமாக, பாபிலோன் ராஜா வந்து முற்றுகைபோட்டிருந்தார். அந்த நாட்களில், யாரும் நிலத்தை வாங்கமாட்டார்கள். யூதா தேசத்தை ராஜாவாகிய சிதேக்கியா ஆண்டுகொண்டிருந்தார். எரேமியா தீர்க்கதரிசி, தன் சொந்த வாயால் தீர்க்கதரிசனம் உரைத்து, "சிதேக்கியா ராஜாவே, நீர் ஜெயிக்கமாட்டீர். பாபிலோன் ராஜா உம்மை வென்று, பாபிலோனுக்கு சிறையாக்கிக் கொண்டு போவார்" என்று சொன்னார். இதைக் கேட்ட சிதேக்கியா ராஜாவுக்கு, வந்ததே கோபம்.

ஆகவே, ராஜா எரேமியாவை பிடித்து, அவனை அடித்து அரண்மனை முற்றத்திலே, காவலிலே போட்டிருந்தார். சிறையிருப்பு, எழுபது ஆண்டுகள் தொடரும். பதட்டமான ஒரு சூழ்நிலை. யாருக்கு என்ன நடக்கும், எத்தனைபேர் யுத்தத்திலே கொல்லப்படுவார்கள் தெரியவில்லை. கொடுக்கல் வாங்கலைக் குறித்து, பேசவே முடியாத சூழ்நிலையில், ஆண்டவர் சொல்லுகிறார், "மூதாதையர் சொத்தை உனக்கு தரப்போகிறேன். உன்னைப் பார்க்க உன் இனத்திலுள்ள ஒருவர் வரப்போகிறார். அப்பொழுது பத்திரத்தை வாங்கி, கையெழுத்து வைக்க வேண்டும். அதற்கு, நீ இவ்வளவு வெள்ளி கொடுக்க வேண்டும்" என்று பேசினார். எரேமியாவுக்கு, அது ஆச்சரியமாயிருந்தது. இது எப்படி, இந்த யுத்தக் காலத்திலே முடியும்!

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வழிகள் மிகவும் ஆச்சரியமானவை. "கர்த்தருடைய வழி சுழல் காற்றிலும், பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது" (நாகூம். 1:3). "இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" (எரே. 32:27).

ஆம், முடியும், கர்த்தராலே முடியும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை. அதற்கு எரேமியா, கர்த்தரிடம் சொன்ன பதில் என்ன தெரியுமா? "ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை" (எரே. 32:17). அப்படியே, அந்த சொத்துக்கள் கிரயம் செய்யப்பட்டு, எரேமியாவுக்கு வந்தன.

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு, தீர்க்கதரிசனம் உரைக்கிற ஒரு எழை சகோதரி, எங்களுடைய வீட்டுக்கு வந்தார்கள். திடீரென்று, தீர்க்கதரிசனமாக "மகனே, உன் வீட்டு பக்கத்திலுள்ள வீட்டை, நான் உனக்குக் கொடுக்கப்போகிறேன். நீ இதற்காக எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். பக்கத்து வீட்டார் வந்து, குறைந்த விலையிலே, உங்களுக்கு விற்றுவிட்டு போவார்கள்" என்றார்.

எங்கள் வீட்டிற்கு அடுத்த, பக்கத்து வீட்டிலே ஆறு குடித்தனங்களிருந்தன. அவர்கள் விற்க போகிறார்களா, இல்லையா, என்பது, எனக்குத் தெரியாது. ஒரு நாள் அவர்கள் என்னை பார்க்க வந்து, கர்த்தர் சொன்னபடியே மிக சாதாரண விலைக்கு அதை விற்றுவிட்டுப்போனார்கள். கர்த்தர் உள்ளங்களை மாற்றுகிறவர். சிந்தையை நிறைவேற்றுகிறவர். நிச்சயமாகவே கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும், பெரிய காரியங்களை செய்வார். இதுவரை, ஆசீர்வாதத்தைத் தடுத்துக்கொண்டிருந்த தடுப்புச் சுவர்களையெல்லாம், தகர்த்தெறிந்து விடுவார்.

நினைவிற்கு:- "ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 5:9).