அலங்காரம்!

"அவன் அலங்காரம், ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப் போலவும், அவனுடைய வாசனை, லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்" (ஓசி. 14:6). 

உலகத்திலுள்ள எல்லா மரங்களிலும் விசேஷமான மரம், "ஒலிவ மரம்" தான். அதன் இலைகளிலும், தண்டுகளிலும் விசேஷித்த எண்ணெய் நிரம்பியிருக்கிறது. அது, "பரிசுத்த ஆவியானவருக்கு" அடையாளம். உங்களுக்குள், பரிசுத்த ஆவியாகிய எண்ணெய் வைக்கப்பட்டிருக்கிறது.

முழு உலகமும், ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்டபோது, அனைத்து மரங்களும், நீரால் அழுகிப்போனபோது, ஒலிவமரமோ, எல்லா தண்ணீர் களுக்கும் மேலாக, அலங்காரமாய் தன்னுடைய இலைகளை காண்பித்தது. அது வெற்றிக்கு அடையாளம். எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும், நான் நிலை குலைந்து போவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பேன் என்று சொல்லுகிறதுபோல, இருக்கிறது. நோவாவின் பேழையிலிருந்து புறப்பட்ட புறா, ஒலிவ இலையை கொத்திக்கொண்டு, நோவாவிடம் போய் கொடுத்தது. 

இந்தியாவிலே, பெண் கேட்டு வருகிற மாப்பிள்ளையிடம், உங்களுக்கு வீடு வாசல் உண்டா? சம்பாத்தியம் எவ்வளவு? என்று கேட்பார்கள். ஆனால் இஸ்ரவேல் தேசத்திலே, பெண் கேட்டு வருகிற மாப்பிள்ளை வீட்டாரிடம், பெண்ணின் தகப்பனார் கேட்கிற முதல் கேள்வி, "மாப்பிள்ளைக்கு ஒலிவத் தோப்பு உண்டா?," என்பதே. பின்பு தான், அத்தி மரங்களைப் பற்றியும், திராட்ச தோட்டங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். காரணம், ஒலிவ தோப்புகள், அவ்வளவு ஆசீர்வாதத்தையும், செழிப்பையும், வருமானத்தையும் கொண்டு வருகின்றன. 

இயேசு ஜெபிக்க போகும்போது, ஒலிவ மலையிலுள்ள, ஒலிவ மரங்களால் நிறைந்திருக்கிற கெத்செமனே தோட்டத்துக்குப் போனார். அங்கே, பிதாவினு டைய சமுகத்தில் தன்னுடைய இருதயத்தை ஊற்றி ஜெபித்தார். தேவபிள்ளை களே, உங்களுடைய அலங்காரம் என்ன? உங்களுடைய மேன்மை என்ன? அது, அபிஷேகம் நிறைந்த வாழ்க்கையாக, இருக்கட்டும். ஊக்கமான ஜெபமாயிருக்கட்டும். சங்கீதக்காரன் சொன்னார், "உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக, உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது" (சங். 93:5). 

இந்த வேத பகுதியிலே, உங்களுடைய வாசனை, லீபனோனுடைய வாசனை போல இருக்கட்டும் என்று, கர்த்தர் மனதுருகி சொல்லுகிறார் (ஓசி. 14:6). இங்கே வாசனை என்பது, கர்த்தரை ஆராதிக்கிற ஆராதனையாகும். "எங்களைக் கொண்டு, அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற, தேவனுக்கு ஸ்தோத்திரம்" (2 கொரி. 2:14). 

வேதத்திலே பலவகையான வாசனைகளுண்டு. பரிமள தைல வாசனை (உன். 1:3). நளததைல வாசனை (உன். 1:12). வஸ்திரங்களின் வாசனை (உன். 4:11). விரல் களிலிருந்து வழியும், வெள்ளைப்போள வாசனை (உன். 5:5). கர்த்தருக்குப் பயப்படுகிற பயம், உகந்த வாசனையாயிருக்கும் (ஏசா. 11:3).

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாசனை இரட்சிப்பின் வாசனையாக, அபிஷேகத்தின் வாசனையாக விளங்கட்டும். உங்கள் வஸ்திரங்களின் வாசனை, லீபனோனின், வாசனையாயிருக்கட்டும் (உன். 4:11) என்று கூறி, கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார். இந்த ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 

நினைவிற்கு:- "அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை, கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது" என்றார் (ஆதி. 27:27).