இது நடக்குமா?

"இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா?" (2 இராஜா 7:19).

எலிசாவின் நாட்களில், சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், தன் இராணுவத்தை யெல்லாம் கூட்டிக்கொண்டு வந்து, சமாரியாவை முற்றிக்கைபோட்டான். அதினாலே, சமாரியாவிலே கொடிய பஞ்சம் உண்டாயிற்று. 

பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்ததினாலே, இரண்டு ஸ்திரீகள், "உன் மகனை தா. அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனை தின்போம்" என்று பேசிக் கொண்டார்கள் (2 இராஜா. 6:28). அந்த வார்த்தைகளைக் கேட்ட ராஜா, தன் வஸ்திரங் களை கிழித்துக்கொண்டார். அவர், உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தி யிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.

அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங் கள். நாளைக்கு, சமாரியாவின் வாசலிலே, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், விற்கப்படும் என்று சொன்னார். அப்பொழுது, ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன், "இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இப்படி நடக்குமா" என்றான். அதற்கு எலிசா, "உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய். ஆனாலும், அதிலே சாப்பிடமாட்டாய்" என்றார் (2 இராஜா. 7:2). 

கர்த்தருடைய வார்த்தை உங்களுக்கு வரும்போது, சந்தேகப்படாமல், கேள்வி கேட்காமல், விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். தேவனாலே முடியும். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. வானமும், பூமியும் ஒழிந்துபோனாலும், கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேறாமல், ஒழிந்துபோவதில்லை. நீங்கள், விசுவாசித்தால், கர்த்தர் உங்களுடைய விசுவாசத்தைக் கனப்படுத்துவார். இல்லா விட்டால், ராஜாவின் பிரதானிக்கு நேரிட்டது போல நேரிடும். 

கர்த்தர் என்ன செய்தார் தெரியுமா? "ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு, இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும், எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி, இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும், தங்கள் குதிரைகளையும், தங்கள் கழுதைகளையும், தங்கள் பாளயத்தையும், அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி, ஓடிப்போனார்கள்" (2 இராஜா 7:6,7). 

அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியாவின் பாளயத்தை கொள்ளையிட்டார்கள். கர்த்தருடைய வார்த்தையின்படி, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. 

தேவபிள்ளைகளே, மனுஷன் பொய்யுரைக்கலாம். மனம் மாறிவிடலாம். ஆனால், "பொய் சொல்ல, தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" (எண். 23:19). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தீர்க்கதரிசன வார்த்தையாவது, வாக்குத்தத்தமாவது, நிச்சயமாகவே நிறைவேறும். ஆகவே, விசுவாசத்தோடிருங்கள். 

நினைவிற்கு:- "அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன, அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம், ஒரு வார்த்தையானாலும் தவறிப்போக வில்லை" (1 இராஜா. 8:56).