பனியைப் போல!

"நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப் போல் வேரூன்றி நிற்பான்" (ஓசி 14:5). 

நான் உனக்கு பனியைப்போல இருப்பேன். பெருங்காற்றைப்போல இருப்பேன். அக்கினியைப்போல இருப்பேன். எண்ணெயைப்போல இருப்பேன். ஜீவ நதியாயிருப்பேன். பின்மாரி காலத்து மழையாயிருப்பேன். இன்று அன்போடு, "என் பிள்ளையே, நான் உனக்கு பனியைப்போல இருப்பேன். நீ லீலிபுஷ்பத்தைப்போல மலருவாய்" என்று சொல்கிறார்.

என் தகப்பனார் என்னை மிகவும் நேசித்தார். நானும் அவரை நேசித்தேன். என்னுடைய தகப்பனார் மரித்தபோது, நான் மட்டுமே அவருடைய அருகிலிருந் தேன். அடக்க ஆராதனை முடிந்து சென்னை புறப்பட்டபோது, என்னால் தாங்க முடியவில்லை. அப்பொழுது, கர்த்தருடைய மெல்லிச் சத்தம் எனக்கு உண்டானது. "நான் உனக்கு தகப்பனாயிருப்பேன்" என்றார். அப்பொழுது அது எனக்கு மகா ஆறுதலாயிருந்தது. உள்ளத்தை சமாதானப்படுத்தினது. 

நீங்கள், உலகப்பிரகாரமான தகப்பனை இழந்தாலும், கிறிஸ்து உங்களுக்கு அன்பும் பாசமுமுள்ள தகப்பனாயிருப்பார். தாயை இழந்தாலும், கர்த்தர் தாமே, உங்களுக்கு தேற்றுகிற தாயைப்போல இருப்பார். இங்கே, இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, மிக அன்போடு, பாசத்தோடு, மனதுருக்கத்தோடு, "நான் உனக்கு பனியைப் போல இருப்பேன். நீ லீலிப்புஷ்பத்தைப்போல் மலருவாய்" என்று சொன்னார். பனி குளிர்ச்சியானது. உள்ளத்துக்கு புத்துணர்வைக் கொடுக்கக்கூடியது. அது பரலோகத்திலிருந்து நமக்கு கிடைக்கிற ஒரு நல்ல ஈவு. 

பாருங்கள்! இந்த உலகத்தில், முதன் முதல் வானத்திலிருந்து பூமிக்கு வந்தது "பனி" தான். "மூடு பனி எழும்பி, பூமியை நனைத்தது" (ஆதி. 2:6). அந்த பனி பெய்த பிறகுதான், பூமியிலே புல், பூண்டுகளெல்லாம் வளர ஆரம்பித்தது. பனி என்பதை ஆங்கிலத்தில் என்பார்கள். சின்ன பனிக்கட்டியை என்பார்கள். அதிகாலை இந்த பனி மேகத்திலிருந்து வரும், இந்த என்பது, செடிகளின் இலைகளிலே ஓட்டிக்கொண்டிருக்கும். 

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும்போது, "தேவன் உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும், திராட்சரசத்தையும் தந்தருளுவாராக" (ஆதி. 27:28) என்றார். பனி, தேவன் அருளிச் செய்கிற விசேஷமான ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். "விதைப்புச் சமாதானமுள்ள தாயிருக்கும்; திராட்சச்செடி, தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்" (சகரியா 8:12). ஆம், பனி உன்னதத்திலிருந்து வருகிற ஆசீர்வாதத்துக்கு அடையாளம் (எபேசி. 1:3).

 "பனி" என்பது, உன்னதத்துக்குரிய ஆசீர்வாதத்துக்கு மட்டுமல்ல, ஆவியான வரின் சின்னங்களில் ஒன்றாகும். வான் புறா, அக்கினி, எண்ணெய், பின்மாரி மழை, காற்று, மேகங்கள், முத்திரை, அச்சாரம் போல பனியும், பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாகும்.

"பனி" என்பது, "தேவனுடைய கிருபையை" காண்பிக்கிறது. ஆகவே, பரிசுத்த வான்களெல்லாம், அதிகாலை வேளை எழுந்து, கர்த்தரைத் தேடினார்கள். நீங்களும் அதிகாலை வேளையில் கர்த்தரைத் தேடுவீர்களா? வசனத்தை தியானிப்பீர்களா? நான் உங்களுக்குப் பனியைப்போல இருப்பேன் என்று, கர்த்தர் சொல்லுகிறார். 

நினைவிற்கு:- "மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்" (உபா. 32:2).