லீலிபுஷ்பத்தைப் போல!

"முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக் குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்" (உன். 2:2). 

உலகத்தில் எத்தனையோ வகை மலர்கள், காட்டு புஷ்பங்களிருந்தாலும், கர்த்தரோ, லீலிபுஷ்பத்தை அன்போடு தன் கரத்தில் எடுக்கிறார். தன்னுடைய மணவாட்டிக்கு ஒப்பிடுகிறார். "லீலிபுஷ்பத்தைப்போல, குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளுமிருக்கிறாள்," என்று சொல்லி, சந்தோஷப்படுகிறார். 

லீலிபுஷ்பம் மலராமல், மொட்டையாயிருந்தால், அது வாசனை வீச முடியாது. தன் பூரண அழகை வெளிப்படுத்த முடியாது. தேனீக்கள்,வண்டுகள் வந்து, அதிலுள்ள இனிமையான தேனைப் பருக முடியாது. "என் மகனே, மகளே, நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்படி, அருமையாய் மணம் வீசி, வாசனை பரிமளிக்கும்படி உன்னை லீலிபுஷ்பத்தைப்போல, மலரச் செய்வேன். நீ மனமகிழ்ச்சியோடும், இனிய முகத்தோடும் விளங்குவாய். ஒருநாளும் நீ கைவிடப்பட்டுப்போவதில்லை. தலைகுனிந்து நிற்பதில்லை" என்று, அன்போடு சொல்லுகிறார். 

இரவு நேரங்களிலே, பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம் மலரும்போது, அதன் வாசனையை, காற்று இனிமையாய் சுமந்துச் செல்லும். நான்கு, ஐந்து கி.மீ-க்கு அப்பாலேயிருக்கிற வண்டினங்களையும், அது கவர்ந்திழுத்துக்கொண்டு வந்துவிடும். நீங்கள் கிறிஸ்துவை அறிகிற வாசனையை, ஜெபத்தில் வெளிப்படுத்தும்போது, தூர இடங்களிலுள்ள ஆத்துமாக்கள்கூட கர்த்தரண்டை வந்துவிடுவார்கள். 

லீலிபுஷ்பத்தின் நிறம் வெண்மை. அது பரிசுத்தத்துக்கு அடையாளம். எவ்வளவு இருளிலிருந்தாலும், அவைகளின் மத்தியிலே, வெண்மை பளீச்சென்று தெரியும். இருண்டு கிடக்கிற உலகத்துக்கு, தெய்வீக பரிசுத்தத்தை வெளிப்படுத்தும்படி, நீங்கள் லீலிபுஷ்பத்தைப்போல மலருவீர்கள். 

ஒரு சகோதரி, திருமணமான சில மாதத்தில் தன் கணவனை இழந்தார்கள். வயிற்றிலே குழந்தை. அந்த சூழ்நிலையிலும் அந்த சகோதரி தன்னைக் கர்த்தருக்குள் திடப்படுத்திக்கொண்டு, "ஆண்டவரே, எனக்கு வேறு ஒரு நம்பிக்கையுமில்லை. நான் ஜெப ஊழியத்தை செய்ய விரும்புகிறேன். ஆத்துமாக்களை நீர் என்னிடத்தில் வழிநடத்திக்கொண்டு வரவேண்டும். வெளிப்பாட்டு வரங்களை, நீர் எனக்குத் தரவேண்டும். தீர்க்கதரிசன அபிஷேகத்தால், என்னை நிரப்ப வேண்டும்" என்று ஜெபித்தார்கள். 

அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர்கள் லீலிபுஷ்பத்தைப்போல, வாசனை வீசினார்கள். அது ஜெப வாசனை. கர்த்தர் கொடுத்த வரத்தினால், ஆயிரமாயிரமான ஆத்துமாக்களை கர்த்தரண்டை வழி நடத்தினார்கள். அவர்கள் என்னை சந்திக்கும் போது, அவர்களுக்கு ஏறக்குறைய எழுபது வயது. குடிகாரனான என்னை, அவர்கள் சந்தித்து, கர்த்தருடைய அன்புக்குள் வழிநடத்தினார்கள். அவர்களுடைய ஜெபம், என்னை ஊழியக்காரனாக்கினது. அவர்களுடைய ஜெபத்தால், நான் இரட்சிக்கப்பட்டது மட்டுமல்ல, அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றேன். 

"அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்" (நீதி. 31:28). லீலிபுஷ்பத்தின் தோற்றம், ஒரு எக்காளத்தைப்போலவே அமைந்திருக்கிறது. கிறிஸ்துவின் வருகையை, பரலோக எக்காளம் பூமிக்கு அறிவிக்கிறது. கர்த்தர்தாமே பிரதான தூதனோடு, எக்காளத்தோடு வருவார். கிருபையின் நாட்களிலே லீலிபுஷ்பம் போல, நீங்கள் மனம் வீசுங்கள். 

நினைவிற்கு:- "இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே, நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்" (வெளி. 22:20).