வேரூன்றி நிற்பான்!

"நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான். லீபனோனைப் போல் வேரூன்றி நிற்பான்" (ஓசியா 14:5). 

மலர்களிலே, இஸ்ரவேலரை லீலிபுஷ்பத்துக்கு ஒப்பிட்டார். ஓங்கி வளருவதிலே தேவ ஜனங்களை, லீபனோனின் கேதுருக்கு ஒப்பிட்டார். லீபனோன் என்பது, கர்த்தருடைய தேசத்தின் வடக்கு எல்லையிலுள்ள சிறப்பான, அழகான மலை தேசமாகும். மோசே பக்தன் மரிக்கும் முன், லீபனோனின் அழகை பார்க்க விரும்பி னார். ஆகவே கர்த்தரிடம், "நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும் படி, உத்தரவு கொடுத்தருளும், என்று வேண்டிக்கொண்டார்" (உபா. 3:25). 

"லீபனோன்" என்பதற்கு, "இன்ப வனம்" என்பது அர்த்தமாகும். சாலொமோன் தனக்கென்று ஒரு அழகான அரண்மனையைக் கட்டும்போது, அந்த அரண்மனைக்கு "லீபனோனின் வனம்" என்ற பெயரைச் சூட்டினார். லீபனோனின் கேதுரு மரங்கள், மிகவும் உறுதியானவை. மிகச் சிறந்தவை. சாலொமோன் தேவனுக்குக் கட்டின தேவாலயத்திலும், தனக்கு கட்டின அரண்மனையிலும், லீபனோனின் கேதுரு மரங்களை பயன்படுத்தினார். 

சாலொமோனிலும் பெரியவரான கர்த்தர், உங்களை அன்போடு நோக்கிப் பார்த்து, என் மகனே, நீ லீபனோனைப் போல், வேரூன்றி உறுதியாய் நிற்பாய். பாடு களும், பிரச்சனைகளும் உன்னை தாக்கி, சோர்ந்துபோகப் பண்ண முடியாது. நீ ஒரு நாணல் அல்ல, ஒரு புல் அல்ல. "லீபனோனின் கேதுரு" என்று சொல்லுகிறார். 

எப்படி ஒரு உயரமான கட்டிடத்தை, உறுதியான அஸ்திபாரம் தாங்கி நிற் கிறதோ, அதுபோல ஒரு மரத்தை, அதனுடைய வேர் தாங்கி நிற்கிறது. வேரில்தான் உறுதியும், பெலனும் மேன்மையுமிருக்கிறது. ஆணி வேர், ஆழமாக சென்று, நீரூற்றோடு ஐக்கியப்படும்போதுதான், மரம் செழித்து வளரும். அங்கே பூ, காய், கனிகள் மிகுதியாயிருக்கும்.

பாக்கியவான் யார்? "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங். 1:3). நீங்கள் வேரூன்றி நின்றால், ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. சகோதரன் ஜீவானந்தம் அவர்கள், ஒவ்வொரு பிரசங்கத்துக்கும் முன்பாக, "இயேசு என்னை கைவிடமாட்டார். கடும்புயல்வரினும், பெருங் காற்று வீசினும், அவர் என்னைக் கைவிடமாட்டார்" என்று பாடுவதுண்டு. 

பேதுருவுக்கு முதலில் சீமோன் என்ற பெயர் உண்டு. "சீமோன்" என்பதற்கு "நாணல்" என்பது அர்த்தமாகும். தண்ணீருக்குள்ளேயும், வெளியேயும் நாணல் போல உயரமாய் வளர்ந்துநிற்கும். அது எந்தவிதத்திலும் கேதுரு மரத்தைப் போல உறுதியானவையல்ல. அது காற்றடிக்கிற திசை எல்லாம் வளைந்தாடும். கர்த்தர் அந்தப் பெயரை மாற்றி, "பேதுரு" என்ற பெயரை கொண்டு வந்தார். அதற்கு "கன்மலையைப்போல உறுதியானது" என்று அர்த்தம்.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஜெப ஜீவியத்திலே உறுதியாயிருக்கிறீர்களா? விசுவாசத்திலே உறுதியாயிருக்கிறீர்களா? ஊழியத்திலே, கர்த்தரை நேசிக்கிற நேசத்திலே, கர்த்தருடைய சபையிலே உறுதியாய் நிற்கிறீர்களா? என்று யோசித்துப் பாருங்கள். சிறு பிரச்சனைகளிலே சோர்ந்து போய் உட்கார்ந்து விடுகிறீர்களா? எழுந்திருங்கள். கர்த்தருக்குள் வேரூன்றி உறுதிப்படுங்கள்.

நினைவிற்கு:- "கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத் திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்" (சங். 125:1).

Joshua Jebadurai