கிளைகள் ஓங்கிப் படரும்!

"லீபனோனைப் போல் வேரூன்றி நிற்பான். அவன் கிளைகள் ஓங்கிப் படரும்" (ஓசியா 14:5,6).

இந்த வாக்குத்தத்தத்தை வாசிக்கிறது மட்டுமல்ல, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளவும் வேண்டும். லீபனோன் கேதுரு மரங்களைப்போல, வேரூன்றி நிற்பது மட்டு மல்ல, உங்களுடைய கிளைகள் ஓங்கி படர வேண்டும். இங்கே, "கிளை" என்று சொல்லுவது, உங்களுடைய பிள்ளைகளையும், குடும்பத்திலுள்ள ஒவ்வொரு வரையும் குறிக்கிறது. கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுடைய சந்ததிமேலும், சந்தானத்தின்மேலும் நிச்சயமாய் கடந்து வரும். உங்கள் நிமித்தம் கர்த்தர், உங்களுடைய பிள்ளைகளை தலைமுறை, தலைமுறையாக ஆசீர்வதிப்பார். உங்களுடைய குடும்பமும், பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் தலைமுறை, தலைமுறையாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். 

"ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்" (ஏசா. 11:1). பிள்ளைகளைக் குறித்த கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? "உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும், ஒலிவ மரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். நீ உன் பிள்ளைகளின், பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்" (சங். 128:3,6). "உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளை களுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்" (ஏசா. 54:13). 

சில ஆண்டுகளுக்கு முன்பு, சிவகாசியிலுள்ள ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டிலுள்ள பெண் பிள்ளை, எலும்பும் தோலுமாயிருந்தாள். ஏன் இவள் சரியாய் சாப்பிடுவதில்லையா? ஏன் இப்படியிருக்கிறாள்? என்று, துக்கதோடு கேட்டேன். அதற்கு அவர்கள், "சரியாய்தான் சாப்பிடுகிறாள். ஆனால் உடலில் ஒன்றும் ஒட்டுவதில்லை. எங்களை கர்த்தர் ஆசீர்வதித்திருந்தாலும், வீட்டில் தேவையான உணவு பொருட்களிருந்தாலும், இவள் ஏனோ எலும்பும், தோலுமாய் இருக்கிறாள்" என்றார்கள். 

ஒராண்டு காலத்திற்குப் பிறகு, நான் அந்த மகளைப் பார்த்தேன். கொழுகொழு வென்று இருந்தாள். "அவளா இவள்" என்று, சந்தேகப்படும்படியிருந்தது. அந்த பெற்றோர்கள் சொன்னார்கள், "கர்த்தர் எங்களுக்கு வாக்குத்தத்தமாக, மல்கியா 4:2ஐ கொடுத்தார். "நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்" (மல். 4:2) என்ற வசனம், எங்களோடு பேசினது. அதை வைத்து ஒவ்வொருநாளும், எங்களுடைய மகளுக்காக ஜெபித்தோம். கர்த்தர் அவளுடைய சரீரத்திலும், ஆரோக்கியத்திலும் நல்ல ஒரு செழிப்பைத் தந்தார்" என்றார்கள். 

பாருங்கள்! ஏசாயா தீர்க்கதரிசி விசுவாச அறிக்கை செய்து சொன்னார், "இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே, இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்" (ஏசா. 8:18). 

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த பிள்ளைகளை, கர்த்தருக் கென்று அர்ப்பணியுங்கள். அப்பொழுது உலகப் பிள்ளைகளைப் பார்க்கிலும், உங்கள் பிள்ளைகள் விசேஷமுள்ளவர்களாய் விளங்குவார்கள். உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் என்பது, கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம் அல்லவா? (யோவே. 2:28). உங்களுடைய பிள்ளைகள் உன்னதமானவருடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள். கர்த்தர், அவர்களுக்கு விசேஷித்த ஞானத்தைக் கொடுப்பார். 

நினைவிற்கு:- "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" (யோசு. 24:15).

Joshua Jebadurai