பராக்கிரமசாலிகளின் கேடகம்!

"கர்த்தரோ, பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்; ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள், மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால், மிகவும் வெட்கப்படுவார்கள்" (எரே. 20:11). 

"பராக்கிரமசாலிகளுடைய கேடகம்," என்று, 2 சாமு. 1:21-ல் வாசிக்கிறோம். வேதத்தில், அநேக பராக்கிரமசாலிகளுமுண்டு. நிம்ரோத், பூமியிலே பராக்கிரமசாலி யானான் (ஆதி. 10:8). யோசுவாவும் அவரோடே கூட சென்ற, சகல யுத்த மனுஷரும் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள் (யோசு. 10:7). கிதியோன், ஒரு பராக்கிரமசாலி (நியாயா. 6:12). "கீலேயாத்தியனான யெப்தா, பலத்த பராக்கிரமசாலியாயிருந் தான்" (நியாயா. 11:1). சவுலும், யோனத்தானும், பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள். 

ஒரு யுத்த வீரன், எவ்வளவுதான் பலசாலியாக இருந்தாலும், அவனை பாதுகாத்துக் கொள்ள, கேடகம் மிகவும் அவசியம். ஒரே நிமிடத்தில், பல திசைகளிலிருந்து ஒரு யுத்த வீரனை நோக்கி அம்புகளோ, ஈட்டிகளோ, பட்டயங்களோ நெருங்கி வரக்கூடும். ஆகவே, பம்பரம்போல அவன் சுழன்று, அவனை நோக்கி வரும், சகல அம்புகளையும், கேடகத்தைப் பிடித்து முறியடிக்க வேண்டும். 

அதுபோல, ஆவிக்குரிய யுத்தத்திலே நிற்கிற, தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு, விசுவாச கேடகம் மிகவும் அவசியம் (எபேசி. 6:16). அப்பொழுது தான், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம், அவித்துப்போட முடியும். உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும், எந்த ஆயுதமும் உங்களை மேற்கொள்ளமாட்டாது (ஏசா. 54:17).

ஒரு தேவனுடைய மனிதனை, காரணமில்லாமல் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். இயேசுவுக்கு வைராக்கியமாக நின்றார் என்பதைத் தவிர, அவர் மேலே, வேறு எந்தக் குற்றமும் இல்லை. மிகக் கொடிய பலசாலியான போலீஸ் இன்ஸ்பெக்டர், அவரைக் கொடூரமாய் அடித்து, விசாரிக்க முயன்றான். போலீஸ் அதிகாரி எவ்வளவோ அடித்தும், அந்த தேவ மனிதனுக்கு வலி இல்லை. அந்த அடிகள் அவர்மேல் படவுமில்லை. 

கர்த்தர், அவருடைய ஆவிக்குரிய கண்களைத் திறந்தபோது, கர்த்தர் தாமே அந்த பக்தனை அப்படியே மூடி, அந்த அடிகள் எல்லாவற்றையும் தானே ஏற்றுக் கொண்டதைக் கண்டார். இன்றைக்கும், இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டவராயிருக்கிறார். தன்னை பாதுகாத்துக்கொள்ள, கேடகமாய் நிற்கிறார் என்று அறிந்த போது, அவருடைய உள்ளம், கர்த்தரைத் துதிக்க ஏவி எழுப்பினது. 

தேவபிள்ளைகளே, கர்த்தரே உங்களுக்கு மகா பெலனும், கேடகமுமாயிருப்பாராக. அவரைப்போல பலத்த பராக்கிரமசாலி யாருண்டு? "பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்" (ஏசா. 42:13). 

பராக்கிரமசாலியான கோலியாத்து, வெண்கலக் கேடகத்தையும் தரித்திருந்தான் (1 சாமு. 17:6). ஆனாலும் அந்த வெண்கல கேடகம், கோலியாத்துக்கு பாதுகாப்பாய் இருக்கவில்லை. தாவீது சுழற்றி அடித்த கூழாங்கல், அவனுடைய நெற்றியிலே பாய்ந்தது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஜீவனுள்ள கேடகமாயிருப்பார். அவர் தம்முடைய சிறகுகளாலே உங்களை மூடுவார். அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவீர்கள்.

நினைவிற்கு:- "இதோ, கர்த்தராகிய ஆண்டவர், பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன், அவரோடேகூட வருகிறது" (ஏசா. 40:10).