சகாயஞ்செய்யும் கேடகம்!

"இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும், உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே" (உபா. 33:29).

இது ஒரு அபூர்வமான கேடகம். நிச்சயமாகவே, இது உலகப்பிரகாரமான கேடகமல்ல, உலகப்பிரகாரமான கேடகம் நெஞ்சை, இருதயத்தை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளுகிற கேடகம். அவ்வளவுதான். ஆனால் "கர்த்தராகிய கேடகமோ," உங்களைப் பாதுகாக்கிறார். மட்டுமல்ல, உங்களுக்கு சகாயஞ்செய்கிறார். ஒத்தாசை செய்கிறார். இவ்வளவு பெரிய சகாயஞ் செய்யும் கேடகத்துக்குள்ளே, நீங்கள் அடைக்கலமாய் நிற்கிறபடியால், சாத்தான், எவ்வளவுதான் பொல்லாங்கு செய்ய நினைத்தாலும், அவனுடைய தீக்கங்குகள் உங்களை அணுகாது.

கர்த்தரை நம்பி, எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர், கர்த்தர், தங்களுக்கு "சகாயஞ்செய்யும் கேடகமாய்" நின்றதைக் கண்டார்கள். பார்வோனும், அவனு டைய சேனைகளும் வேகமாய் இஸ்ரவேலரை நெருங்கியபோதிலும், கர்த்தர் சகாயஞ்செய்யும் கேடகமாய், இரண்டு சேனைகளும் ஒன்றோடொன்று சேராதபடி பார்த்துக் கொண்டார். இரண்டு சேனைகளுக்கும் நடுவே, ஒரு மேகம் வந்து நின்றது. அது, எகிப்தியருக்கு காரிருளைக் கொடுத்தது. இஸ்ரவேலருக்கோ, வெளிச்சத்தைத் தந்தது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழி விட்ட சிவந்த சமுத்திரம், பார்வோனையும், அவனுடைய சேனையையும் மூடிப்போட்டது. (யாத். 14:19,20).

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த ஒரு போர் வீரன், யுத்தத்திற்கு போகும் முன்னால் 91-ம் சங்கீதத்தை வாசித்து, "தேவனே, எனக்கு கேடகமாயிரும்" என்று சொல்லி, ஜெபித்தான். யுத்தக்களத்திலே எதிர்பாராதவிதமாக, ஒரு புல்லட் அவனை தாக்கினது. கீழே விழுந்தான், ஆனால், எந்த சேதமும் ஏற்படவில்லை.

காரணம் என்ன? அந்த புல்லட், அவன் பாக்கெட்டில் வைத்திருந்த புதிய ஏற்பாட்டின்மேல் அடித்து, அதிலேயே பதிந்திருந்தது. அந்த புதிய ஏற்பாடு கர்த்தருடைய காருண்ய கேடகமாய் விளங்கி பாதுகாத்தது. "கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்" (சங். 3:3) என்று சொல்லி, கர்த்தரை நன்றியோடு துதித்தார்.

இன்றைக்கு அநேக பெற்றோர், தங்களுடைய பிள்ளைகளுக்கு, "சகாயம்" என்ற பெயரை சூட்டுகிறார்கள். "சகாயம்" என்ற பெயருள்ள, உண்மையும், உத்தமமுமான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பற்றி அறிந்திருக்கிறேன். அவரைக் கண்டு, லஞ்சம் வாங்குகிறவர்கள் நடுங்குவார்கள். அவர் ஊழல்களை ஒழிக்க அரும்பாடுபட்டார். அப்படிப்பட்ட அதிகாரிகளால், தேசத்திற்கு எவ்வளவு ஆசீர்வாதம்.

தாவீது பலமுறை கர்த்தரை நோக்கி, "கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம் பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்" (சங். 22:19). அதுபோலவே சங். 40:13-ல், "கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம் பண்ணத் தீவிரியும்" என்று சொல்லுகிறார்.

தேவபிள்ளைகளே, மனுஷரிடத்திலிருந்து அல்ல, தேவனிடத்திலிருந்து சகாயத்தை எதிர்பாருங்கள். அவர் ஒருபோதும் உங்களுக்கு தூரமாயிருக்கமாட்டார். சரியான நேரத்திலே, சரியான விதத்திலே வந்து, உங்களுக்கு உதவிச் செய்வார். ஆகவே காலதாமதமாகிறதே என்று, கலங்காதிருங்கள். கர்த்தர், ஒருநாளும் முந்தவு மாட்டார். பிந்தவுமாட்டார். சரியான நேரத்தில், உங்களுக்கு சகாயம் செய்வார்.

நினைவிற்கு:- "தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்" (சங். 46:5).