சத்தியமென்னும் கேடகம்!

"அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம், உனக்குப் பரிசையும், கேடகமுமாகும்" (சங். 91:4).

விசுவாசமென்னும் கேடகத்தைப் பார்த்தோம், இரட்சிப்பென்னும் கேடகத்தைப் பார்த்தோம். சகாயஞ்செய்யும் கேடகத்தை தியானித்தோம். உண்மையிலே இவைகளெல்லாம் பராக்கிரமசாலிகளின் கேடகமாய் விளங்குகின்றன. அவைகளோடு கூட 91-ம் சங்கீதத்திலே, "சத்தியமென்னும் கேடகமும்" வருகிறது.

நீங்கள் சத்தியத்துக்காக வைராக்கியமாய் நிற்கும்போது, சத்தியமான இயேசு, உங்களுக்காக வைராக்கியமாயிருப்பார். இயேசுவினுடைய பெயரே "சத்தியம்" என்பதாகும். "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல் லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவா. 14:6).

வேத புத்தகத்துக்கு, இரண்டு முக்கியமான பெயர்களுண்டு. 1. பரிசுத்த வேதாகமம். 2. சத்திய வேதாகமம். வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும், சத்தியமானது, மெய்யானது, உண்மையானது. மட்டுமல்ல, அதில் எழுதப்பட்ட வசனங்களெல்லாம், ஆவியானவரால் எழுதப்பட்டதால், ஆவியும், ஜீவனுமாயிருக் கிறது. வானமும், பூமியும் ஒழிந்துபோனாலும், அதிலுள்ள வார்த்தைகள் ஒருநாளும் ஒழிந்துபோவதில்லை. "தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும், அவர் கேடகமாயிருக்கிறார்" (2 சாமு. 22:31).

உலகத்தாருக்கு, பல வகை கேடகங்கள் இருக்கக்கூடும். கோலியாத்து ஏந்தினது வெண்கல கேடகம். இன்றைக்கு, சிலருக்கு அறிவு ஒரு கேடகம். பணமும், செல்வமும், செல்வாக்கும் ஒரு கேடகம். அரசாங்கத்தின் அதிகாரங்கள் ஒரு கேடகம்; பிரசங்கி சொல்லுகிறார், "ஞானம் கேடகம். திரவியமும் கேடகம், ஞானம் தன்னை உடையவர்களுக்கு, ஜீவனைத் தரும். இதுவே அறிவின் மேன்மை" (பிர. 7:12). ஆனால் நமக்கோ, சத்தியமே கேடகம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவை அரசாண்ட அசோகர் என்ற சக்கரவர்த்தி, பொன் எழுத்துக்களால், ஒன்றை பதிக்க விரும்பினார். "சாஞ்சி" என்ற இடத்திலே, அவர் நாட்டின பெரிய ஸ்தூபியில், "சத்தியமேவ ஜெயதே" என்ற எழுத்துக்களைப் பொறித்தார். சத்தியம்தான் முடிவான வெற்றியைப் பெறும். உலகத்தில், பல போலியான மார்க்கங்கள் தோன்றியிருக்கலாம். முடிவிலே சத்தியமானவராகிய இயேசுவே, ஜெயம்பெறுவார் என்பதே, அதின் அர்த்தமாகும்.

அந்த வார்த்தையை, தமிழிலே மொழிபெயர்க்க நினைத்த, தமிழக அரசு சரியானபடி, அதை மொழிபெயர்க்கவில்லை. அவர்கள் வெறுமனே "வாய்மையே வெல்லும்" என்று, மொழிபெயர்த்து விட்டார்கள். "சத்தியமேவ ஜெயதே" என்ற வார்த்தையிலுள்ள அழுத்தம், ஆழம், மேன்மை, அதில் வெளிப்படவில்லை. ஆனாலும், எப்போதும் சத்தியமானவரே, வெற்றி பெறுவார்.

உங்களுடைய சத்தியத்தையும், உங்களுடைய நியாயத்தையும் புரட்ட, அநேகம்பேர் வரலாம். ஆனால், நீங்கள் உண்மைக்காக நில்லுங்கள். உத்தமமாக ஜீவியுங்கள். என்னதான், கோர்ட் கேஸ் வந்தாலும், சத்தியம்தான் ஜெயம் பெறும். சத்தியத்துக்காக நிற்கிற நீங்கள், ஜெயம் பெறுவீர்கள். தோல்வியோ உங்களுடைய எதிரிகளையே சூழ்ந்துகொள்ளும்.

நினைவிற்கு:- "இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்" (சங். 115:9,10).