பின்மாரிகாலத்து மழை!


"பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்" (சகரி. 10:1).

பொதுவாக, நாம், பல விண்ணப்பங்களை கர்த்தருக்குத் தெரியப்படுத்துகிறோம். தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு அறிவிக்கிறோம். "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" என்கிறோம் (யாக். 5:16). ஆனால் கர்த்தர் தாமே, நம்மிடத்தில் ஒரு ஜெபக்குறிப்பைக் கொடுக்கிறார். இயேசு, பிதாவினுடைய வலதுபாரிசத்தில் அமர்ந்து, நமக்காக ஜெபிக்கிறபடியால், நாம் அவரிடத்திலே, "ஆண்டவரே, தேசத்தில் பின்மாரி மழையைக் கட்டளையிடும்" என்று வேண்டிக்கொள்ளுவோமா?

வேண்டிக்கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை. பிறகு, விசுவாசத்தோடு அதை எதிர்பாருங்கள். அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல் வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக, அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். இந்த வேத பகுதியில், ஐந்து காரியங்களை வாசிக்கிறோம். 1. கேட்க வேண்டிய மழை. 2. மின்னல்கள். 3. வயல்வெளிகள். 4. செழிப்பான பயிர். 5. பின்மாரி மழை. "பின்மாரி மழை" என்பது, "அபிஷேகத்தின் மழை." கடைசி நாட்களில் ஊற்றப்படுகிற, பரிசுத்த ஆவியின் வல்லமை, உன்னதத்தின் பெலனாகும்.

ஒரு ஊழியரிடத்தில் ஒருவர் வந்து, "ஐயா, தேசத்தில் எழுப்புதல் எப்போது உண்டாகும்?" என்று கேட்டார். அந்த ஊழியர், தரையிலே ஒரு சிறிய வட்டமும். அதையொட்டி இன்னும் பெரிய நான்கு வட்டங்களையும் போட்டு, "சகோதரனே, நீங்கள் இந்த சிறிய வட்டத்தில் நின்று கொள்ளுங்கள். முதலாவது, பின்மாரி அபிஷேக மழை, உங்கள்மேல் இறங்கட்டும். எழுப்புதல், உங்களில் ஆரம்ப மாகட்டும். பின்பு அடுத்த வட்டமாகிய உங்களுடைய குடும்பத்திலும், சபையிலும், தேசத்திலும் பின்மாரி பெய்யட்டும். அப்பொழுது, உலகத்தில் பெரிய எழுப்புதல் உண்டாகும் என்று சொன்னார்.

பரலோகம் என்பது, பெரிய சூப்பர் மார்க்கெட் போன்றதாகும். அதிலே உலகப் பிரகாரமான ஆவிக்குரிய, உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களும் உண்டு. கர்த்தர் எந்தப் பகுதியிலே, உங்களுக்கு வானத்தின் பலகணிகளைத் திறக்கவேண்டும், என்று கேளுங்கள். சாலொமோன் ராஜா ஞானத்தைக் கேட்ட போது, ஒரு மழைபோல ஞானம், அவர்மேல் இறங்கி வந்தது. வனாந்தரத்தை கடந்த இஸ்ரவேலர்களுக்கு, காலைதோறும் மன்னா மழைபோல இறங்கி வந்தது. இறைச்சியை விரும்பி கேட்ட போது, அவர்கள் பாளயத்தில் காடைகள் வந்து குவிந்தன. எலியா கேட்டபோது, வானத்திலிருந்து, அக்கினி மழை இறங்கி வந்தது.

தேவபிள்ளைகளே, உங்களுக்கு தேவையானது என்ன? பொருளாதார ஆசீர்வாதம் வேண்டுமா? சமாதானமா? சந்தோஷமா? பிள்ளைகளின் நல்வாழ்க்கையா? அவைகளையெல்லாம் கர்த்தர் தம் பூரணத்திலிருந்தும், சம்பூரணத்திலிருந்தும், பின்மாரி மழைபோல, கட்டளையிடுவார்.

"பின்மாரி மழை" என்பது, கடைசி நாட்களில் கர்த்தர் ஊற்றப்போகிற, பரிசுத்த ஆவியின் அபிஷேக மழையைக் குறிக்கிறது. உலகப்பிரகாரமானதும், ஆவிக்குரியது மான, ஆசீர்வாதங்களை இந்த மழை கொண்டு வரும். ஆகவே, விசுவாசத்தோடு கர்த்தரிடத்தில் கேளுங்கள்.

நினைவிற்கு:- "நான் அவர்களையும், என் மேட்டின் சுற்றுப்புறங்களையும், ஆசீர்வாத மாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்" (எசேக். 34:26).