முன்மாரி, பின்மாரி!

"அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும், பின்மாரியையும், ஏற்கெனவே வருஷிக்கப்பண்ணுவார்" (யோவே. 2:23).

மழை, தேவனால் உலகத்துக்கு கொடுக்கப்படுகிற, மாபெரும் ஆசீர்வாதங்களில் ஒன்று. இதனால், குடிதண்ணீர் கிடைக்கிறது. ஆறுகளில் பாய்ந்தோடி, மரம் செடி, கொடிகள் செழித்து, வளருகின்றன. தானியங்கள் விளைகிறதினால், பஞ்சம் நீங்கி, தேசத்தில் செழிப்புண்டாகிறது. விலைவாசி குறைகிறது. கர்த்தர், இந்த ஆசீர்வாதமான மழையை, வாக்குப்பண்ணியிருக்கிறார். "நான் அவர்களையும், என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையை பெய்யப்பண்ணுவேன். ஆசீர்வாதமான மழை பெய்யும்" (எசேக். 34:26).

உலக மழையைப் பார்க்கிலும், மிக மேன்மையான மழை "பரிசுத்த ஆவியின் மழை." அது, ஆவிக்குரிய புத்துணர்ச்சியை கொண்டு வருகிறது. ஜெபவீரர்களை எழுப்புகிறது. இந்த மழையினால், ஆவிக்குரிய வரங்கள் கிரியை செய்கின்றன. அபிஷேக மழையினால், ஜனங்களுடைய சுபாவங்கள், குணாதிசயங்கள் மாறுகின்றன. ஆவிக்குரிய கனிகள் காணப்படுகின்றன.

இரண்டாவது மழை, "முன்மாரி மழை" என்று அழைக்கப்படுகிறது. அப்பொழுது விவசாயி, தரிசு நிலத்தை பண்படுத்தி விதைக்கிறான். பயிர் வளரு வதற்கு, இந்த மழை மிகவும் பிரயோஜனமானது. அதுபோல, பரிசுத்த ஆவியின் முன்மாரியும், அப்போஸ்தலர் நாட்களிலே, மேல் வீட்டறையிலிருந்து தொடர்ந்து பெய்துகொண்டேயிருந்தன. பேதுரு எங்கெங்கெல்லாம் வசனத்தைப் பிரசங்கித்தாரோ, அங்கெங்கெல்லாம் அபிஷேகம் ஊற்றப்பட்டது (அப். 10:44). ஏராளமான மக்கள் இரட்சிக்கப்பட்டு, சபை மிக வேகமாய் வளர்ந்தது.

மூன்றாவது மழை, "பின்மாரி" என்று அழைக்கப்படுகிறது. இது அறுவடை காலத்துக்கு முன்பு, பெய்கிற நல்ல மழையாகும். அந்த நேரம், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு நல்ல உரமிட்டு, பக்குவப்படுத்தி, வயல்களை ஆயத்தப்படுத்தியிருப்பார்கள். அடுத்து பெய்கிற அபிஷேக மழையினால் ஆவிக்குரிய பயிர் முப்பது, அறுபது, நூறுமாக பலன் கொடுக்கும். ஒரு காலத்தில், மிஷனெரிகள் வந்து விதைத்த, வசன விதைகள் இன்றைக்கும் பெரிய ஆத்தும அறுவடையை செய்து கொண்டிருக்கின்றன. அறுக்கிற காலம், உலகத்தின் முடிவு. அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள். ஆகவே, பின்மாரி காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள் (சகரியா 10:1).

நான்காவது மழை, பரிசோதிக்கும் மழை. இயேசு சொன்னார்: "நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப் படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதினபோது, அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது" (மத். 7:26,27).

ஐந்தாவது, இன்னொரு மழை உண்டு. அதுதான் சுத்திகரிக்கிற மழை. இந்த மழைக்கு முன்பாக, வெயிலடித்து நிலங்கள் காய்ந்து போய் கிடக்கும். இன்னும் தூசியும், புழுதியும் தாண்டவமாடும். இலைகள் மேலும் கூட புழுதி. மழை பெய்துவிட்டால், மரம், செடி, கொடிகளை கழுவி விடுவதைப்போன்று, ஒரு புத்துணர்ச்சி. கோடை வெயிலின் உஷ்ணங்கள் அடங்கிப்போகும். கர்த்தர் தேசத்திலே, இந்த ஐந்துவிதமான மழைகளைக் கட்டளையிடுவாராக.

நினைவிற்கு:- "தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப் போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படிசெய்யும்" (ஏசா. 64:2).