ஏன் மூன்று பேர்!

‘அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம் பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்" (லூக். 9:28).


இயேசு கிறிஸ்துவுக்கு பன்னிரண்டு சீஷர்களிருக்கும்போது, ஏன் அவர் மூன்று பேரை மாத்திரம் கூட்டிக்கொண்டு, உயர்ந்த மலையாகிய மறுரூபமலைக்குச் சென்றார் என்று, வேதம் நமக்கு அறிவிக்கவில்லை. மற்ற ஒன்பது பேரும் மலையேற சற்று கஷ்டப்பட்டிருக்கக்கூடும். சாக்குப்போக்குகளை சொல்லியிருந்திருக்கக்கூடும். கர்த்தர், அவர்களை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இதனால், அவர்களுக்கு மறுரூபமாகும் அனுபவத்தை காண முடியவில்லை.


ஆபிரகாம் மோரியா மலைக்குச் சென்றபோது, ஆபிரகாமும், ஈசாக்கும் இன்னும் இரண்டு வேலைக்காரர்களும் புறப்பட்டு வந்தார்கள். இரண்டு வேலைக்காரர்களும் மலையின் அடிவாரத்தில் நின்றுவிட்டார்கள். மலையின் உச்சிக்குப் போகாததினால், ஆபிரகாமோடு ஆண்டவர் பேசியதையும், ஈசாக்குக்குப் பதிலாக ஆட்டுக்குட்டியை ஆயத்தம் பண்ணினதையும், அவர்களால் பார்க்க முடியவில்லை.


எலியாவின் நாட்களில், எரிகோவில் ஏராளமான தீர்க்கதரிசிகளின் புத்திரர் இருந்தாலும், அவர்கள் எலியாவைப்போல கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்யவில்லை. எலியாவைப் பின்பற்றவும் இல்லை. அவர், அக்கினி இரதங்கள், குதிரைகளின்மேல் பரலோகத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதைப் பார்க்கவுமில்லை (2 இராஜா 2:16).  
இன்றைக்கும் இயேசு, "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.

இவைகளைப்பார்க்கிலும், பெரிய கிரியைகளையும் செய்வான்" (யோவா. 14:12) என்று சொல்லியிருந்தும்கூட, விசுவாசிகளில் அநேகம் பேருக்கு அப்படிப்பட்ட ஆர்வமில்லை. அவர்கள் யாவரும் பார்வையாளர்களாக இருந்தார் களே தவிர, பங்குதாரராக, இயேசுவோடு இணைந்து, பெரிய காரியங்களைச் செய்கிறவர்களாக இருக்கவில்லை.
ஒரு மைதானத்தில் கால்பந்தாட்டம் நடக்கிறது. பங்குபெறும் வீரர்கள், வீரா வேசத்தோடு விளையாடுகிறார்கள். வெற்றிக் கோப்பையையும் ஏந்துகிறார்கள். ஆனால், அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கு பல லட்சம்பேர் கூடியிருக் கிறார்கள். ஸ்டேடியத்தில் அமர்ந்து, பார்ப்பதோடு நின்று விடுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதுமில்லை. வெற்றி கோப்பையை கையில் ஏந்துவதுமில்லை.


இந்த பின்மாரி அபிஷேகத்தின் காலத்தில், கர்த்தர் மாம்சமான யாவரையும் தம்முடைய ஆவியினால் நிரப்பிக்கொண்டிருக்க, ஒருசிலர் மாத்திரம் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். சொப்பனங்களையும், தரிசனங்களையும் காண்கிறார்கள். ஊழியக் காரர்களாக, ஊழியக்காரிகளாக எழும்புகிறார்கள். கர்த்தருக்காக, அரிய பெரிய செயல்களைச் செய்து முடிக்கிறார்கள். நீங்கள், சராசரி மனுஷராக விளங்குவது போதாது. ஆண்டவருக்காக எழும்ப வேண்டும். பிரகாசிக்க வேண்டும்.


"இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்" என்று, ஏசாயாவைப்போல முன் வருவீர்களென்றால், கர்த்தர் உங்களை இன்றைக்கு தமது அபிஷேகத்தால் நிரப்பி உங்களைக் கொண்டு, தேசங்களை அசைத்தருளுவார். ஆவியின் வரங்களும், கனிகளும் உங்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. "கர்த்தரே தேவன்" என்று நிருபிக்க, ஆவியின் வரங்கள் உங்களுக்கு அவசியம். கிறிஸ்துவைப்போல சுபாவ முடையவர்களாய் விளங்க, ஆவியின் கனிகள் உங்களுக்கு அவசியம்.


நினைவிற்கு:- "யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும், தரித்து நில்லுங்கள் என்றான்" (யோசுவா 10:12).