கிருபையின் ஆவி!

"நான் தாவீது குடும்பத்தாரின்மேலும், எருசலேம் குடிகளின்மேலும், கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்" (சகரி. 12:10).

  வெளிப்படுத்தின விசேஷத்தில், பரலோக பிதாவையும், அதே சிங்காசனத்தில் இயேசு கிறிஸ்து, வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறதையும் பார்க்கிறோம் (வெளி. 4:21). ஆனால் பரிசுத்த ஆவியானவர், அந்த சிங்காசனத்துக்கு முன்பாக, தேவனுடைய ஏழு ஆவிகளாகிய, ஏழு அக்கினி தீபங்களாக எரிந்துகொண்டிருந்தார் (வெளி. 4:5).

  ஆவியானவர் ஒருவர்தான். ஆனால், ஏழு அக்கினி தீபங்களாக தன்னை வெளிப் படுத்துகிறார். மலை ஒன்றாயிருந்தாலும், அதிலே ஏழு பர்வதங்களிருக்கிறதுபோல, ஏழு வெளிப்பாடுகளோடு, அவர் விளங்குகிறார். அதற்காக, மொத்தம் ஏழு ஆவியானவர் இருக்கிறார் என்று, நாம் எண்ணிவிடக்கூடாது.

  ஆண்டவருடைய எல்லா வெளிப்பாடுகளுக்கும், தேவனுடைய கிருபையே முன் செல்லுகிறது. வேதத்தில் இரண்டு இடங்களில், அதாவதாக, சகரியா 12:10-லும், இரண்டாவதாக, எபி. 10:29-லும் கிருபையின் ஆவியைக் குறித்து வாசித்து அறிகி றோம். கர்த்தருடைய எல்லா ஆசீர்வாதத்துக்கும் முன் செல்லுவது, கர்த்தருடைய கிருபைதான். உங்களுக்கு இரட்சிப்பு அருளுவது, கர்த்தருடைய கிருபை. பரிசுத்த ஆவியைத் தருவது, அவருடைய கிருபை.

  பரலோக சிங்காசனத்துக்கு உங்களை தகுதிப்படுத்துவதும், கிறிஸ்துவின் மணவாட்டியாய் உங்களை மறுரூபமாக்குவதும், இந்த கிருபையேயாகும். "கிருபை யினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும். நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர், அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்" (ஏசா. 16:5).

  கர்த்தர் கெம்பீரமாய் உட்கார்ந்திருக்கிற ஆசனத்துக்கு பெயர், "கிருபாசனம்" என்பதாகும். அதிலிருந்து, கர்த்தர் தம்முடைய அளவற்ற கிருபையை, பொழிந்து கொண்டிருக்கிறார். தாவீது, கர்த்தருடைய கிருபையை அதிகமாயப் புகழ்ந்தார். "நீர் உமது முகத்தை, உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப் பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்" (சங். 31:16). "நானோ உமது மிகுந்த கிருபையினாலே, உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே, பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்" (சங். 5:7). தேவபிள்ளைகளே, கர்த்தரிடம் கிருபையை கேளுங்கள். கர்த்தருடைய கிருபையைக் குறித்தே மேன்மை பாராட்டுங்கள்.

  ஆடுகளை மேய்த்து, வனாந்தரத்தில் நடந்த தாவீதை அவ்வளவு உயர்த்தி, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் அபிஷேகம்பண்ணினது, கர்த்தருடைய கிருபை அல்லவா? அந்த தேவன், உங்களையும் தெரிந்துகொண்டிருக்கிறார். கிருபையின் ஆவியினால் அபிஷேகம்பண்ணியிருக்கிறார். உங்கள்மேல் கிருபையின் ஆவியை யும், விண்ணப்பத்தின் ஆவியையும் ஊற்றுவார்.

  இன்றைக்கும், தேவ கிருபை உங்களை சூழ்ந்துகொண்டிருக்கிறது. உங்களுடைய குடும்பத்திலே, மற்ற யாருக்கும் கிடைக்காத கிருபையை உங்களுக்கு பாராட்டி, மரண இருளின் பள்ளத்தாக்கிலே, உங்களை பாதுகாத்து வழிநடத்தியிருக்கிறார். எகிப்தின் பாவ பழக்க வழக்கத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் உங்களை விடுவித்து, தம்முடைய ஆவியினால் நிரப்பியிருக்கிறார். ஆகவே, தேவ கிருபையைப் போற்றிப் புகழுங்கள்.

நினைவிற்கு:-  "ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன். அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை" (1 கொரி. 15:10).