கர்த்தருடைய கரம்!

"உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு, அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்" (1 நாளா. 4:10).


துக்கத்தோடு வாழ்ந்த யாபேஸ் என்ற பக்தனுடைய ஜெபமே இது. இன்றைக்கும் நீங்கள் கர்த்தரை நோக்கி, "உம்முடைய கரம் என்னோடுகூட இருக்கட்டும்" என்று ஊக்கமாக கேளுங்கள். அப். பவுலின் கரத்தைக் கொண்டு, பலத்த அற்புதங்களைச் செய்ததுபோல, கர்த்தர் உங்களுடைய கரத்தைக் கொண்டும், பலத்த அற்புதங்களைச் செய்தருளுவார். அவர், பட்சபாதமில்லாத தேவன். ஆகவே, கர்த்தருடைய கரத்தின் வல்லமை, உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதாக.
கர்த்தருடைய கரம் எப்படியிருக்கும் என்பதை, கற்பனை செய்து பாருங்கள். ஆம், அவருடைய ஓங்கிய புயமும், உயர்ந்த கரமும், இஸ்ரவேலை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டது. வனாந்தரங்களில் இஸ்ரவேலரை வழிநடத்தின அவர், தன் கரத்தை ஓங்கி நிற்கும்போது, யார் அந்த கரத்தை எதிர்த்து நிற்க முடியும்? அந்த கரம், தேவ பெலத்தைக் கொண்டு வருகிறது. தேவ வல்லமையைக் கொண்டு வருகிறது. கர்த்தருடைய கரம் உங்கள் மீதிருக்கும்போது, நீங்கள் எல்லாவற்றிலும் ஆசீர்வாதமுள்ளவர்களாயிருப்பீர்கள்.


"உம்முடைய வலது கரம் என்னைத் தாங்குகிறது" (சங். 18:35)  என்பது, தாவீதின் சாட்சி. நம் எல்லோருடைய காலங்களும் கர்த்தருடைய கரத்திலிருக்கின்றன. நிச்சயமாகவே, கர்த்தருடைய கரம் உங்களை ஆசீர்வதித்து, எல்லாத் தீங்கினின்றும் பாதுகாத்தருளும்.


டி.எல். ஆஸ்பார்ன் என்ற பக்தன், தன் இளவயதிலேயே மனைவியோடுகூட இந்தியாவுக்கு மிஷனெரியாக வந்தார். ஊழியத்திலே படுதோல்வி. இந்துக்கள், முஸ்லீம்கள் வாதத்தையும், தத்துவ ஞானத்தையும், அவரால் மேற்கொள்ள முடிய வில்லை. அவருடைய குழந்தைகள் நோயினால் வாடினார்கள். மனச்சோர்பு, தாழ்வு மனப்பான்மை. துயரத்தோடு தன் தேசத்திற்குத் திரும்பினார்.


அங்கு அவர் நீண்ட நாட்கள் உபவாசித்து, ஜெபித்து, "ஆண்டவரே, உமது கரம் என்னோடிருக்க வேண்டும்," என்று ஊக்கமாய் மன்றாடினார். அந்த உபவாசத்திற்குப் பின்பு, கர்த்தருடைய வல்லமை அவரிலே வெளிப்பட ஆரம்பித்தது. அவர் மூலமாய் பலத்த அற்புதங்கள் நடந்தன. பின்பு, இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்தின் பல தேசங்களுக்கும் சென்று, லட்சக்கணக்கான ஆத்துமாக்களை ஆதாயம் செய்தார்.


ஒரு சாதாரண போலீஸ்காரரின் பின்பாக, முழு போலீஸ் இலாகாவும், அதிகாரங் களும், அரசாங்கமும் நிற்கிறது. அதுபோல, தேவ கரம் உங்களோடிருக்கும்போது, எல்லா தேவதூதர்களும், எல்லா ஆவியின் வரங்களும், முழு பரலோகமும் உங்களுடைய பட்சத்திலே நிற்கும். நெகேமியா உற்சாகமாய் சொன்னார், "என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறது" (நெகே. 2:18).  ஆகவே, அவர் செய்ததெல்லாம் வாய்த்தது. எருசலேமின் மதில்களை கட்டியெழுப்பினார்.


கர்த்தருடைய கை எலியாவின் மேலிருந்தது. ஆகவே, தெய்வீக பெலத்தோடு ஆகாபின் இரதத்துக்கு முன்பாக ஓடினார். மழை பெய்யாதபடி, வானத்தைக் கட்டி னார். பின்பு, மழை பெய்யும்படி வானத்தை திறந்தார். அக்கினியை வானத்திலிருந்து இறக்கி, "கர்த்தரே தேவன்" என்று நிரூபித்தார். தேவபிள்ளைகளே,  கர்த்தருடைய கரம் உங்களுடைய கரத்தோடு இணைந்திருப்பதாக. அப்பொழுது கர்த்தர் உங்களைக் கொண்டு, ஜனங்களுடைய நோய்களைக் குணப்படுத்தி, அற்புதங்களைச் செய்வார்.


நினைவிற்கு:- "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலி. 4:13).