அன்பான தேவன்!

"அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:8).


இந்த நாளிலே, உங்களுடைய கண்கள், அன்பான கர்த்தரை நோக்கிப் பார்க் கட்டும். நீங்கள், அவருடைய அன்பை ருசிப்பீர்கள். அந்த அன்பிலே மகிழுவீர்கள் அந்த அன்பை நோக்கி முன்னேறிச் செல்லுவீர்கள். அன்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர், இயேசு கிறிஸ்து. அவர்தான், உங்களை அநாதி சிநேகத்தால் சிநேகித்தவர். உருக்கமான இரக்கங்களினால், உங்களைத் தேடி வந்தவர். அவருடைய அன்புதான், இதுவரை உங்களைத் தாங்கினது, ஏந்தினது, சுமந்தது.


இயேசு கிறிஸ்து, "இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்" (யோவா. 13:1). சிலருடைய அன்பு, கொஞ்சகாலம் மட்டுமே இருக்கும். முன்பு, தேன் ஒழுகப் பேசினவர்கள், பின்னர் எட்டிக்காய் கசப்பதுபோல கசப்பார்கள். அன்பை, உங்கள் மேல் பொழிந்தவர்கள், கசப்பையும், எரிச்சலையும் உமிழுவார்கள். மனிதருடைய அன்பு குறைந்து, மறைந்துபோகும். ஆனால், கர்த்தருடைய அன்போ மாறாதது. "முடிவுபரியந்தம் அன்புவைத்தார்," என்று இந்த வசனம் சொல்லுகிறது. இந்த அன்பினால், உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் அவர் உங்களோடு இருப்பார்.


நீங்கள் அவரைத் தேடாத வேளையிலும்கூட, அவர் உங்களைத் தேடி வந்தார். அதற்காகவே, பரலோகத்தைத் துறந்து மனுஷ சாயலானார். காணாமல்போன ஆட்டை தேடிக் கண்டுபிடிக்கிறதுபோல, கல்லுகளிலும், முள்ளுகளிலும் நடந்து, உங்களை தேடிக் கண்டுபிடித்தார். நீதிமான்களையல்ல, பாவிகளையே இரட்சிக்க வந்தேன், என்று சொன்னார்.


இயேசுவின் அன்பைப் பாருங்கள்! அவர் தன்னை பாவிகளோடும், ஆயக்காரர் களோடும் இணைத்துக்கொண்டார். அவர்களோடு பந்தியிருந்தார். பாவியான ஸ்திரீயை அவர் புறக்கணிக்கவில்லை. கையும், மெய்யுமாய் பிடிபட்ட விபச்சார ஸ்திரீயின்மேல்கூட இரக்கமாயிருந்தார். அவளுக்குப் புது வாழ்க்கையை அளித்தார். அவர் உள்ளம், தேவ அன்பினால் நிரம்பியிருந்தது. அவருடைய அன்பு, தாயின் அன்பை விட மேலானது. "ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" (ஏசா.49:15) என்றார்.
மட்டுமல்ல, அவருடைய அன்பு, ஒரு தகப்பனுடைய அன்பைப்போல இருக்கிறது. "தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்" (சங். 103:13). மட்டுமல்ல, அவருடைய அன்பு ஒரு சிநேகிதனுடைய அன்பைப்போல, நம்மைத் தேடுகிற அன்பாயிருக்கிறது. அவர் சீஷர்களைப் பார்த்து அன்போடு சொன்னார்,  "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை" (யோவா. 15:13)  என்று சொன்னது மட்டுமல்ல, கல்வாரிச் சிலுவையிலே அடிக்கப் பட்டு, பாடுபட்டு, நொறுக்கப்பட்டு, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.


தேவபிள்ளைகளே, அன்பு அன்பைக் கேட்கிறது. கர்த்தருக்கு உங்களுடைய முதல் அன்பையும், முழு அன்பையும் கொடுங்கள். முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும், கர்த்தரில் அன்புகூருங்கள்.


நினைவிற்கு:- "தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளா திருப்பதெப்படி?" (ரோம. 8:32).