அதிசயமான காரியம்!

"இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" (எரே. 32:27).


இன்றகை்கு, கர்த்தர் இந்த வசனத்தை உங்களுக்கு வாக்குத்தத்தமாக கொடுக்கிறார். எரேமியா 32-ம் அதிகாரம் ஒரு அற்புதமான, ஆச்சரியமான அதிகாரமாகும். இதிலே, கர்த்தர் கேட்கிற ஒரு கேள்வியைப் பார்க்கிறோம். "என்னாலே செய்யக்கூடாத, அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?," என்று சவால் விட்டு கேட்கிறார்.


அவருடைய கேள்விக்கு, அதே அதிகாரத்தில் மனுஷன் கொடுக்கிற பதிலும் இருக்கிறது. அது என்ன? "ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும், பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை" (எரே. 32:17).  


சுருக்கமாக சொல்லப்போனால், "என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" என்று கர்த்தர் கேட்கிறார். "உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை" என்று தேவபிள்ளை பதிலளிக்கிறார்.
தொடர்ந்து வாசிக்கும்போது, கர்த்தரைக் குறித்து எரேமியா சொல்லுகிறார், "ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிற சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும், வல்லமையுமுள்ள தேவனே, யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும்,  அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும், அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன" (எரே. 32:18,19).


தேவபிள்ளைகளே, கர்த்தர்மேல் விசுவாசம் வையுங்கள். கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ, அது சின்ன காரிய மானாலும், பெரிய காரியமானாலும், கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு கேளுங்கள். பிள்ளை, தகப்பனிடத்தில் உரிமையோடு கேட்பதுபோல கேளுங்கள்.


ஒருவேளை, உங்களுடைய பார்வையிலே இது அதிசயமான காரியமாய் காணப் படலாம். உங்களுடைய திராணிக்கு மிஞ்சினதாயிருக்கலாம். ஆனால், கர்த்தருடைய பார்வையிலே இது மிகவும் சிறியது. ஒரு வினாடி நிமிடத்திலே, அதை அவர் உங்களுக்குச் செய்தருளுவார்.


நான், கர்த்தரைப் பின்பற்றத் துவங்கி இப்பொழுது 43 வருடங்களாகிறது. அவர், என் வாழ்க்கையிலே செய்த அற்புதங்களும், அடையாளங்களும் எண்ணற்றவை. யோபு பக்தன் சொல்லுகிறதுபோல, "ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 9:10). தகுதியில்லாத என்னை, கர்த்தருடைய மகிமையான ஊழியத்தை செய்ய தகுதிப்படுத்தினார்.


சிறு வயதிலேயே, எனக்கு விஷ ஜுரம். அதோடு, போலியோவும் என் சரீரத்தைத் தாக்கியது. என் கால்களிலே ஊனம் வந்தது. ஆனாலும், கர்த்தர் என்னுடைய பெலவீனத்திலே 65 தேசங்களுக்கு சுமந்துச் சென்று,  அவருடைய அதிசயமான கிரியைகளை ஜனங்களுக்கு விவரிக்க கிருபை பாராட்டினார். ஏந்தினார், தாங்கினார், சுமந்தார், தப்புவித்தார்.


இந்த தேவன், உங்களுடைய தேவனாயிருப்பார். நீங்கள் அவருடைய ஜனமாய் இருப்பீர்கள். உங்களுடைய தகுதிப்படியல்ல, அவருடைய கிருபையின்படி உங்களுக்கு மனதிரங்குவார்.

நினைவிற்கு:- "நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்" (எரே. 30:22).