சமீபத்திற்கும் தூரத்திற்கும்!

"நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரே. 23:23).


நீங்கள் துதிக்கும்போது, தொழுது கொள்ளும்போது, கர்த்தர் உங்கள் சமீபமாய் வருகிறார். அதே நேரத்தில், தூரத்திலும்கூட அவர் அற்புதம் செய்யக்கூடும். உங்களுடைய பிள்ளைகள், ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ இருக்கக்கூடும். உங்களால் உடனடியாக அவர்களை தொடர்புகொள்ளவோ, அவர்களிடம் பேசவோ முடியாமலிருக்கலாம். ஆனால், கர்த்தர் உங்களுடைய பிள்ளைகளிருக்கிற இடத்திலே அவர்களை சந்தித்து, அற்புதத்தைச் செய்ய வல்லவர்.


தேவனுடைய மனுஷன், ஒருமுறை இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து, "கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிருக்கிறார். மலைகளின் தேவனாயிருக்கிறார், என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தை யெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால், நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள்" என்றார் (1 இராஜா. 20:28).


கர்த்தர், "மலைகளின் தேவன்" உண்மைதான். அதே நேரம், பள்ளத்தாக்குகளின் தேவனுமாக இருக்கிறார். நீங்கள் விழுந்துக் கிடக்கிற படுகுழியாகிய பள்ளத் தாக்கிலிருந்து, அவர் உங்களைத் தூக்கியெடுப்பார். தோல்வி என்ற பள்ளத்தாக்குகள், நம்பிக்கையற்ற பள்ளத்தாக்குகள் என்று எந்த இடமாயிருந்தாலும், கர்த்தர் உங்களை உயர்த்தி, அருமையாய் நடத்துவார்.
கெட்டக்குமாரன், தன் தகப்பனுக்கு அருகிலேயிருக்க பிரியப்படவில்லை. தன்னைக் குறித்து, தகப்பன் ஒன்றும் கேள்விப்படக்கூடாது என்று, கண்காணாத இடத்திற்கு தூரமாய்ப் போய்விட்டான். ஆனால், அவனது அன்புள்ள தகப்பனி மித்தம், கர்த்தர் அவனைக் குறைவுபடச் செய்தார். கடைசியில், அவன் ஒரு குடியானவனிடத்தில் பன்றி மேய்க்கும் வேலையில் சேர்ந்தான். கர்த்தர் அதோடு விடவில்லை. அவனுக்கு உணர்வைக் கொடுத்து, தகப்பனுடைய வீட்டைக் குறித்து நினைக்கச் செய்து, திரும்பி வரச் செய்தார்.


இன்றைக்கு, ஒருவேளை நீங்கள் மனிதரை நம்பி, சூழ்நிலையை நம்பி, ஆண்டவரைவிட்டுத் தூரமாய் போய்விட்டீர்களோ? நீங்கள் எந்த இடத்திற்குப் போயிருந்தாலும், கர்த்தர் உங்களைச் சந்தித்து, மறுபடியும் ஆதி அன்புக்குள்ளே கொண்டுவர வல்லமையுள்ளவராயிருக்கிறார்.


ஜெபிக்கிற ஒரு தகப்பனுடைய உள்ளம், திடீரென்று கலங்கினது. கர்த்தருடைய ஆவியானவர், அவருக்கு தூர தேசத்திலுள்ள மகனைக் குறித்து ஞாபகப்படுத்தினார். ரோமர் 8:26-ஐ வாக்குத்தத்த வசனமாய்க் கொடுத்தார். "அந்தப்படியே ஆவியான வரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்."
இந்த தகப்பன் ஜெபிக்கிற அந்த நேரத்தில், மகன் எதிர்பாராத ஒரு விபத்துக் குள்ளாகி, ஆஸ்பத்திரியிலே அனுமதிக்கப்பட்டு, பிழைப்பான் என்ற நம்பிக்கையற்ற நிலைமையிலேயிருந்தான். இந்த தகப்பன், அந்நிய பாஷையிலே ஜெபிக்க ஜெபிக்க கர்த்தருடைய கரம் அங்கே நீட்டப்பட்டு, டாக்டர்களுக்குத் தம்முடைய ஞானத்தைக் கர்த்தர் கொடுத்து, பலமணி நேர ஆபரேஷனிலே ஜீவனைக் கொடுத்தார். மகன் பிழைத்துவிட்டான் என்கிற நம்பிக்கை அவர் உள்ளத்தில் பெறுகிறவரையிலும், தனது ஜெபத்தை நிறுத்தவில்லை.


நினைவிற்கு:- "நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்" (யோபு 36:3).