பூரண சமாதானம்!

"உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக் கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" (ஏசா. 26:3).


இன்றைக்கும், கர்த்தர் உங்களுக்கு வாக்களித்து, எந்த சூழ்நிலை, எந்த பிரச்சனை வந்தாலும், "மகனே, மகளே நான் உன்னைப் பாதுகாத்து, பூரண சமாதானத்தை நிலைப்படுத்துவேன்" என்று சொல்லுகிறார். ஒன்றை நினைவில்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற சமாதானம், அரைகுறையான சமாதானமல்ல. பாதி கலக்கமும், பாதி மன நிறைவுமுள்ளது அல்ல. அது, பூரண சமாதானம்.


சில குடும்பத்தில், மாத சம்பளம் வாங்கினவுடனே, அவர்களுக்கு பெரிய சந்தோஷம், சமாதானமிருக்கும். ஆனால், நாட்கள் போகப் போக, சமாதானம் தோய்ந்து 31-ம் தேதியில், குடும்பத்தில் சண்டையும், சச்சரவும் வந்துவிடும். நீங்கள் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொள்வீர்களென்றால், கர்த்தர் மாதம் முழுவதும், பூரண சமாதானத்தைத் தந்தருளுவார். முதலாவது, பூரண சமாதானம்.


இரண்டாவது, தேவ சமாதானம். இயேசு சொன்னார், "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக் கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக" (யோவான் 14:27).


"எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம், உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய்க் காத்துக் கொள்ளும்"  (பிலி. 4:7). இயேசு, எந்த சூழ்நிலையிலும் பயப்பட்டதில்லை, கலங்கினதுமில்லை. அவர்மேல் விசுவாசம் வைக்கிறவன் பதறான். கர்த்தர், உங்களுக்கு உலக மனிதரின் சமாதானத்தை வாக்குப்பண்ணவில்லை. தம்முடைய சொந்த சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறார். இதனால் என்ன புயலடித்தாலும், எவ்வளவு வாழ்க்கை, கொந்தளித்தாலும், தெய்வீக சமாதானத்தாலும், சந்தோஷத்தினாலும் நிரம்பியிருப் பீர்கள்.


மூன்றாவதாக, "மிகுந்த சமாதானத்தைக்" குறித்து, சங்கீதம் 119:165-ல் வாசிக் கிறோம். "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை" (சங். 119:165). அது, மிகுந்த பெரிதான சமாதானமாகும். உலகம் கொடுக்கவும், எடுக்கவும் முடியாத சமாதானமாகும். உங்களுடைய அறிவுக்கு எட்டாத சமாதானமாகும்.


இன்றைக்கு, கர்த்தர் அந்த சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். ஆகவே பயப்படாதிருங்கள். இயேசுவை சார்ந்திருங்கள். வாக்குத்தத்தத்தைச் சார்ந்திருங்கள். இன்றைக்கு, கர்த்தர் அன்போடு, "மகனே, மகளே,  "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசா. 54:10).


சிலுவையிலே தொங்குகிற இயேசுவை நோக்கிப்பாருங்கள். சமாதானப் பிரபுவாகிய அவர், உங்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவரும்படியாக அத்தனை ஆக்கினைகளையும், சிலுவையிலே சுமந்தார். சாத்தானின் தலையை நசுக்கினார். வியாதியை நீக்கும்படி, சரீரமெல்லாம் சவுக்கடிகளை ஏற்றுக்கொண்டார். சாபத்தை முறித்து, சமாதானத்தை தர, முள்முடி தாங்கி, சாபமான மரத்தில் தொங்கினார். ஆம், உங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் ஆக்கினை இயேசுவின்மேல் வந்தது (ஏசா. 53:5).


நினைவிற்கு:- "சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்" (சங். 4:8).