எளிதாய் ஜெயிக்கலாம்!

"அப்பொழுது காலேப், மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றார்" (எண். 13:30).


இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு வாக்குக்கொடுத்து, "நீங்கள் எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்" என்று சொல்லி,  உடன்படிக்கை செய்கிறார். வனாந்தரத்தில் மோசே பக்தன், பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து,  கானானை சுற்றிப் பார்த்து வரும்படி அனுப்பினார். அந்த பன்னிரண்டுபேரில் ஒருவர் யோசுவா. மற்றவர் காலேப். இந்த இரண்டு பேரும்,  நற்செய்தியைக் கொண்டு வந்தார்கள். "நாம்,  உடனே போய் கானானை சுதந்தரித்துக்கொள்வோம். பாலும், தேனும் ஓடுகிற ஆசீர்வாதமான தேசம் அது. கர்த்தர் நமக்கு வாக்குக்கொடுத்து விட்டபடியால், அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்" என்றார்கள்.


காலேப், யோசுவாவைப்போல,  நீங்களும் கர்த்தருடைய வார்த்தையையும், வாக்குத்தத்தத்தையும் உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர். நிச்சயமாகவே, அதை அவர் நிறைவேற்றுவார். வானமும், பூமியும் ஒழிந்துபோனாலும், கர்த்தருடைய வார்த்தைகள் ஒழிந்து போவதில்லை. உங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளை, உங்களுடைய சுய பெலத் தோடு நீங்கள் எதிர்நோக்காமல், கர்த்தருடைய பெலத்தோடும், ஞானத்தோடும் எதிர்கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்.


கானானில் ஏழு ஜாதிகளும், முப்பத்தொரு ராஜாக்களும் இருந்தார்கள். உண்மைதான். அங்கே அரணிப்பான மலைகளும், ஏனோக்கின் புத்திரரைப்போல ராட்ஷச பிறவிகளும் இருந்தார்கள். ஆனால்,  அவர்கள் கர்த்தரோடு எதிர்நிற்க முடியவில்லை. இன்றும்கூட, கர்த்தர் பலத்த பராக்கிரமசாலியாய் உங்களோடு வருகிறார். அவர் உங்களுக்காக வழக்காடி,  யுத்தம் பண்ணுவார். ஆகவே,  அவருடைய கிருபையால் நீங்கள் ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்வீர்கள்.


யோசுவாவோடும், காலேப்போடும் சென்ற மற்றவர்கள், தங்களைப் பார்த்தார் கள். தங்களுடைய சுய பெலனைப் பார்த்தார்கள். இது முடியாது, நடக்காது, அந்த ஜனத்தை எதிர்க்க நம்மால் கூடாது, அவர்கள்,  நம்மைப் பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் ஜெயத்தை சுதந்தரிக்க உங்களைப் பார்க்கா திருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பாருங்கள். அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்கை எண்ணிப்பாருங்கள். ஆகவே,  விசுவாச வார்த்தைகளைப் பேசுங்கள். ஜெயத்தைப் பற்றி பேசுங்கள். மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது (நீதி. 18:21).


கர்த்தரை காணாமல், மற்றவர்களைக் காண்பவர்கள் பயந்து நடுங்கத் தான் செய்வார்கள். ஒரு கோலியாத்து,  இஸ்ரவேல் வீரர்களை பயமுறுத்தினான். சவுலும், அவன் படைத்தலைவனாகிய அப்னேரும்,  கோலியாத்தை சந்திக்க பெலனற்றவர் களாய் நடுநடுங்கினார்கள். ஆனால்,  தாவீதின் பார்வை வேறாயிருந் தது. விருத்த சேதனமில்லாத, இந்த கோலியாத்துக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை, இவனை எளிதாய் ஜெயித்துவிடலாம் என்றான். இப்படி கர்த்தரை நோக்கிப் பார்த்து, விசுவாச வார்த்தைகளைப் பேசுங்கள்.


எலிசாவின் வேலைக்காரன்,  சீரிய இராணுவத்தைக் கண்டு பயந்தான். ஆனால் எலிசாவோ, கர்த்தரையும், அவர் நிறுத்தியிருக்கிற அக்கினிமயமான இரதங்களையும், குதிரைகளையும் கண்டார். ஜெயத்தைச் சுதந்தரித்துக்கொண்டார்.


நினைவிற்கு:- "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" (1 யோவா. 5:4).