சிறு கூட்டமே பயப்படாதே!

"யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே;  நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்" (ஏசா. 41:14).


அற்புதமான ஒரு வாக்குத்தத்தத்தை,  இங்கே கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிறார். பொதுவாக, உங்களை யாராவது "புழு,  பூச்சி" என்று அழைத்தால்,  உங்களுக்கு கோபம் வரக்கூடும். நான் யார் தெரியுமா? என்னைப் போய்,  "பூச்சி" என்று சொல்லுகிறாயே? என்று கேட்பார்கள். ஆனால்,  கர்த்தர் தாழ்மையுடன் உங்களை நோக்கிப் பார்த்து, "பூச்சியைப்போல பெலவீனமான யாக்கோபே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே," என்று அன்போடு அழைக்கிறார்.


ஒரு சின்ன பூச்சி அல்லது புழுவை எடுத்துக்கொள்ளுங்கள். யார் எப்பொழுது என்னை நசுக்குவார்களோ, யார் என்னை மிதிப்பார்களோ ,  என்று பயந்துகொண்டிருக் கும். அதை ஒரு சுண்டு சுண்டிவிட்டால்,  அங்கேயே சுருண்டு விழுந்துவிடும். அந்த பூச்சியை ஊதி தள்ளினால்,  எங்கேயோ பறந்துபோய்விடும். தேவபிள்ளைகளே, இன்றைக்கு நீங்கள், எதற்கெல்லாமோ பயந்து நடுங்கிக்கொண்டிருக்கலாம். ஒதுங்கி ஒதுங்கி,  சென்று கொண்டிருக்கலாம். "ஐயோ, என் வாழ்க்கை இப்படியாகி விட்டதே" என்று கலங்கிக்கொண்டிருக்கலாம். பயப்படாதிருங்கள். கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டார்.


"என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே" (ஏசா. 41:8) என்கிறார். இங்கே கர்த்தர் யாக்கோபு என்னும் சிறு பூச்சியைப் பார்த்து எவ்வளவு அன்போடு, "நான் உன்னை தெரிந்துகொண்டேன்" என்று சொல்லுகிறார்.  ஆம், "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவை களை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்" (1 கொரி. 1:27). நீங்கள் எவ்வளவு அற்பமாய் காணப்பட்டாலும்,  கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டபடியால், சந்தோஷப்பட்டு களிகூருங்கள்.


இரண்டாவதாக, கர்த்தர் உங்களுக்குத் துணை நிற்கிறார் (ஏசா. 41:14). யார் உங்களை ஒதுக்கிவிட்டாலும், யார் உங்களைத் தள்ளிவிட்டாலும், அதைக்குறித்து கவலைப்படாதிருங்கள். வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தர்தாமே உங்களுக்குத் துணைநிற்கும்போது, மற்ற எதைக் குறித்தும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.


சங்கீதக்காரன்  சொல்லுகிறார், "என் தகப்பனும், என் தாயும் என்னைக் கை விட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்" (சங். 27:10). யார் மறந்தாலும் கர்த்தர் உங்களை மறப்பதில்லை. "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக் கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" (ஏசா. 41:10) என்று கர்த்தர் சொல்லுகிறார்.


சங்கீதக்காரன் கர்த்தரிடத்தில், "நானோ ஒரு புழு, மனுஷனல்ல" (சங். 22:6) என்று சொன்னார். அப்படிப்பட்ட தாவீதைக்கொண்டு, எதிரிகளை நசுக்கி, வெற்றி மேல் வெற்றிச் சிறக்க கர்த்தர் உதவி செய்தார். இன்றைக்கு, தாவீதின் தேவன் உங்கள் பட்சமாயிருக்கிறார். நீங்கள்  கையிட்டுச் செய்கிற எல்லாக் காரியத்திலும்,  சம்பூரணமான ஜெயத்தைக் கொடுப்பார். வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள்.


நினைவிற்கு:- "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்;  நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்" (ஏசா. 41:15).