ஜீவ விருட்சம்!

"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்;  விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்" (நீதி. 13:12).


இன்றைக்கு அன்போடு உங்களுக்கு வாக்குப்பண்ணி, "என் பிள்ளையே, நீ நீண்ட காலம் காத்திருந்துவிட்டாய். இப்பொழுது, உன்னுடைய காத்திருக்குதல் நிறைவேறப் போகிறது. நான், உனக்கு சாதாரண ஒரு ஆசீர்வாதத்தைத் தரப் போகிறதில்லை. நான் தருகிற ஆசீர்வாதம், ஜீவ விருட்சத்தைப்போல் இருக்கும்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.


ஆம், உண்மையிலே, காத்திருப்பது என்பது கடினமானது. உள்ளத்தை சோர்ந்து போகச் செய்யக்கூடியது. அதிலும் நீண்ட காலங்கள் காத்திருப்பது ஏமாற்றங்களைத் தரும். மற்றவர்களால் அற்பமாய் எண்ணப்படுகிற ஒரு நிலைமை வரும். யாரும் காத்திருக்குதலை விரும்பமாட்டார்கள். திடீர் இட்லி. திடீர் பூரி என்று உடனுக் குடனே கிடைத்துவிட வேண்டுமென்று எண்ணுவார்கள். பல ஹோட்டல்களில் "துரிதமான உணவகம்"  (Fast Food) என்ற பெயர் இருக்கும்.


அதுபோல, நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியிலே, சுகத்திற்காக காத்திருப்பது, மன உளைச்சலைத் தரும். சிலர், திருமணத்திற்காக காத்திருக்கிறார்கள். வேறு சிலர், பிள்ளைபேற்றுக்காக காத்திருக்கிறார்கள். வேறு சிலர், நல்ல வேலை கிடைக்காதா? என்று காத்திருக்கிறார்கள்.


வாலிப வயதில், என்னுடைய கால் ஊனத்தினிமித்தம், என் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. அப்பொழுது என்னுடைய தகப்பனார் மகனே, "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்" (நீதி. 13:12) என்ற வார்த்தையை கடிதத்தில் எழுதி, என்னைத் தேற்றுவார், உற்சாகப்படுத்துவார். அது போலவே ஆபகூக் தீர்க்கதரிசி சொல்லுகிறார், "தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை" (ஆப. 2:3).


கர்த்தர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறினது. என்னை வேண்டாம் என்று தள்ளின பெண்களைப் பார்க்கிலும், கர்த்தர் எனக்குத் தெரிந்தெடுத்துக் கொடுத்தது மிகச் சிறப்பாயிருந்தது. மேன்மையாயிருந்தது. மிகவும் அழகாயிருந்தது. தாமதித் தாலும், மிகச் சிறந்ததை கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். பிரசங்கி சொல்லு கிறார், "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்" (பிர. 3:11). ஆம், கர்த்தர் நிறைவானதை உங்களுக்காக முன் குறித்திருக்கிறார். அதை, ஏற்ற வேளையிலே வெளிப்படச் செய்வார்.


ஒருநாளும் கர்த்தரை முறுமுறுத்து, "ஏன் எனக்கு இந்த தாமதம்?" என்று கேள்விக் கேட்டுக்கொண்டிராதிருங்கள். பொறுமையுடன், கர்த்தரிடத்தில் காத்தி ருந்து அவரைச் சார்ந்துகொள்ளுங்கள். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே, உங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் (ஏசா. 58:8). "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து, சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவான் 1:2).   


ஏதேன் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்களிருந்தாலும், கனிதரும் செடி களும், விருட்சங்களும் இருந்தாலும், ஆதாமும், ஏவாளும், புசிப்பதற்கு ஜீவ விருட் சத்தின் கனியை வைத்திருந்தார். அது அவர்களுக்கு ஜீவன் உண்டாகவும், அந்த ஜீவன் பரிபூரணபடவும் செய்தது. ஆம், நீங்கள் சந்தோஷப்படவும், மனம் மகிழ்ந்து களிகூரவும், கர்த்தர் உங்களுக்காக சிறப்பான ஒன்றை ஆயத்தம் செய்திருக்கிறார்.

நினைவிற்கு:- "நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்" (நீதி. 11:30).