உடன்படிக்கையின் இரத்தம்!

"உன்னுடையவர்களை, நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை பண்ணுவேன்" (சகரி. 9:11).


கர்த்தர், இன்றைக்கு உங்களோடு உடன்படிக்கைச் செய்ய விரும்புகிறார். இது சாதாரண உடன்படிக்கையல்ல. தேவ குமாரனுடைய இரத்தத்தின் மூலமாய் வருகிற உடன்படிக்கை. பழைய ஏற்பாட்டில் அநேக உடன்படிக்கைகளிருந்தாலும், புதிய ஏற்பாட்டில், அது கல்வாரியின் இரத்தத்தினாலே, அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடு செய்த உடன்படிக்கையாகும்.


கெத்செமனே தோட்டத்தில், இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிற அந்த நாளில், கையிலே திராட்சரசத்தை எடுத்து, இது என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக் கையாயிருக்கிறது என்று சொன்னார். மட்டுமல்ல, "நீங்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளும், வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளுமாயிருப்பதை நினைவுகூருங்கள்," என்ற நியமத்தையும் ஏற்படுத்தினார்.


இஸ்ரவேல், ஜனங்கள் சிறிய அளவு இரத்தத்தின் மூலம், கர்த்தரோடு உடன் படிக்கை செய்தார்கள். நுனித்தோல் வெட்டப்பட்டு, ஒரு சில துளிகள் இரத்தம் சிந்தி, விருத்தசேதனத்தின் உடன்படிக்கைச் செய்தார்கள். அதனுடைய முக்கிய சாராம்சம் என்ன? நாங்கள் கர்த்தருடையவர்கள். கர்த்தர் எங்களுடையவர். நாங்கள் எப்போதும் கர்த்தருடைய பட்சத்தில் நிற்போம். எங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வருமென்றால், கர்த்தர் எங்களுக்கு உதவி செய்யும்படி, எங்களுக்காக யுத்தம் செய்யும்படி வரவேண்டும் என்பதாகும்.


ஒருமுறை கோலியாத், இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் வந்தபோது, இஸ்ரவேலர் அந்த விருத்தசேதனத்தின் உடன்படிக்கையை மறந்துபோனார்கள். ஆனால் தாவீது மறக்கவில்லை. "தேவனோடு உடன்படிக்கை செய்திருக்கும் தேவபிள்ளைகளை எதிர்த்து நிற்பதற்கு, விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம்? நான் கொன்ற மிருகமான சிங்கத்தைப்போலவும், கரடியைப் போலவும் அவன் இருப்பான். அவனை பாதுகாக்க அவனுக்கு யாருமில்லையே" என்றது மாத்திரமல்ல, கோலியாத்தை சிறிய கல் கொண்டு ஜெயம் பெற்றார்.


நம் ஆண்டவருடைய பெயர் என்ன? அவர், "உடன்படிக்கையைக் காக்கிற உண்மையுள்ள தேவன்" என்பதாகும். அதிலும் அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும், தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் (உபா. 7:9). கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, சகல இஸ்ரவேலரும் நினைவு கூரும்படி ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தர் வைத்திருந்தார். அந்தப் பெட்டியில், வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை வைத்திருந்தார். இஸ்ரவேலர் இந்த உடன்படிக்கையை செய்யும்படி, கொடுத்த இரண்டு கற்பலகைகளில், நியாயப் பிரமாணத்தை எழுதியிருந்தார்.


ஆம், நியாயப்பிரமாணத்தின்படி இஸ்ரவேலர் நடக்க வேண்டும். கர்த்தர் வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தருளினபடி, அவர்களுடைய உலகப்பிரகார மான ஆவிக்குரிய எல்லாத் தேவைகளையும் சந்திக்க வேண்டும். தேவபிள்ளைகளே, ஆகாயத்துப் பறவைகளைப் போஷிக்கிறவர், உங்களையும் போஷிப்பார். காட்டுப் புஷ்பங்களை உடுத்துவிக்கிறவர், உங்களையும் உடுத்துவிப்பார்.


ஆம், இன்றைக்கு தண்ணீரில்லாமல் குழியிலே அடைபட்டிருக்கிற, உன்னுடைய வர்களை, என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன் என்று வாக்களிக்கிறார்.


நினைவிற்கு:- "தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே" (2 கொரி. 1:20).