உள்ளம் பூரிக்கும்!

"உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும். ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்" (ஏசா. 60: 5).


ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக, கர்த்தர் இந்த வார்த்தைகளை உங்களுக்குக் கொடுக்கிறார். உங்களுக்காக, கர்த்தர் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்யும்போது, உங்கள் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; மகிழ்ச்சியினால் ததும்பும். கர்த்தர் அதிசயத்தை செய்ததினிமித்தமாக, ஆனந்த கோஷமிடத்தக்கதாக ஒரு மகிமை உங்களுக்குள்ளிருந்து எழும்பி, பூரிப்பை உண்டாக்கும். நீங்கள் கவலைப்பட்ட நாட்களிருந்தன. துயரத்தோடு நடந்த வருஷங்களிருந்தன. இஸ்ர வேலர்கள், நானூறு வருடங்கள் எகிப்திலே அடிமைப்பட்ட காலங்களிருந்தன.


ஆனால், கர்த்தர் அந்த சிறையிருப்பைத் திருப்பினார். இனி, செங்கல் சுடத் தேவையில்லை. ஆளோட்டிகளிடம் அடிகள் வாங்கத் தேவையில்லை. எகிப்தி லிருந்து பெரிய விடுதலையை கர்த்தர் கொடுத்தார். வனாந்தரத்திலே மன்னாவைப் பொழிந்தருளினார். காண்டாமிருகத்துக்கொத்த பெலனைக் கொடுத்தார். முடிவில், கானானை சுதந்தரித்துக்கொண்டபோது, அவர்களுடைய துக்கமெல்லாம் சந்தோஷ மாய் மாறினது. அவர்கள் கட்டாத வீட்டையும், நடாத திராட்சத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் பெற்றுக்கொண்டபோது, அவர்களுடைய உள்ளம் அதிசயப்பட்டுப் பூரித்தது. மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். அதே கர்த்தர், உங்களுடைய வாழ்க்கையிலும் பாலும், தேனும் ஓடுகிற மகிழ்ச்சியான காலங்களைத் தருவார். உங்களுடைய கண்ணீர், ஆனந்தக்களிப்பாய் மாறும்.


இது எப்பொழுது உங்களுக்கு நடக்கும்? இதே 60-ம் அதிகாரம் முதல் வசனத்தை வாசித்துப் பாருங்கள். ஏசாயா சொல்லுகிறார், "எழும்பிப் பிரகாசி. உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது." ஆம், நீங்கள் கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க, பிரகாசிக்க, உங்கள்மேல் பரலோக ஒளி வீசும். மகிமைப் பிரகாசிக்கும். கர்த்தர் உங்கள்மேல் உதிப்பார். அவருடைய மகிமை, உங்கள் மேல் காணப்படும்.


சிறிய ஊழியமோ, பெரிய ஊழியமோ, கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற ஊழியம் எதுவானாலும், அதை மன மகிழ்ச்சியோடும், முழு மனதோடும் செய்யுங்கள். "ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவன் ஞானமுள்ளவன்." உங்களுடைய ஊழியத்திலே, கர்த்தர் மனமகிழுவார். மகிமைப்படுவார்.


கர்த்தர் வாக்குத்தத்தமாக சொல்லுகிறார், "உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதி களும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி, உன்னிடத் திற்கு வருகிறார்கள்; நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப் பட்டுப் பூரிக்கும்" (ஏசா. 60:3-5).


ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் வரும்போது, எங்களுடைய நான்கு மாமாமார் தங்களுடைய பிள்ளைகளோடு, எங்கள் வீட்டுக்கு வருவார்கள். மூன்று சித்தி, சித்தப்பாமார்கள், பலவித தின்பண்டங்களோடும், பலகாரங்களோடும் வருவார்கள். அவர்களைப் பார்ப்பதும், விடுமுறை நாட்களில் மகிழ்ந்துக் களிகூருவதும் தாங் கொண்ணாத மகிழ்ச்சியாயிருக்கும். அப்படியானால், நாம் பரலோகத்தில் நம் இனத்தவர்களை மட்டுமல்ல, எல்லா பரிசுத்தவான்களையும் பார்ப்பது, எத்தனை மகிழ்ச்சியாயிருக்கும்! அந்த சந்தோஷத்தை வார்த்தையால் வர்ணிக்கவே முடியாது.


நினைவிற்கு:- "என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி" (சங். 45:1).