வாடையே எழும்பு!

"வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய, என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக" (உன். 4:16).


வாடைக் காற்று என்பது, வடக்குத் திசையிலிருந்து வீசுகிற பலமுள்ள ஒரு காற்று. தென்றல் காற்று, தெற்கேயிருந்து வீசுகிறது. தோட்டத்தில் மரங்கள் சுவையான கனி கொடுக்க வேண்டுமென்றால், இந்த இரண்டு வகையான காற்றுகளும் வீசவேண்டியது அவசியம். வாடைக்காற்று கடும் வேகத்துடன் வீசுவதால், தோட்டத்திலுள்ள பல இலைகள், மக்கிய காய்ந்த இலைகள், கீழே உதிர்ந்து விழுந்துவிடும். புதிய இளம் துளிர்த் தோன்றும். ஆகவே தோட்டத்தை சுத்திகரிப்பதற்கு, வாடைக்காற்று மிகவும் அவசியம்.


அதுபோலவே, பரிசுத்த ஆவியானவர் சபையிலே பெருங்காற்றாக வீசி, நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவதால், சபை யில் பாவங்களும், அக்கிரமங்களும் நீங்கி, பரிசுத்த ஆவியானவருடைய புதிய அசை வாடுதல் உண்டாகும். ஆவியின் வரங்களும், ஆவியின் கனிகளும் காணப்படும்.


இது பரிசுத்த ஆவியானவரின் காலம். மாம்சமான யாவர்மேலும், கர்த்தர் தம்முடைய ஆவியை ஊற்றுகிற காலம். கிறிஸ்து சபையின் அங்கத்தினராகிய உங்கள்மேலும், ஆவியை ஊற்ற மாட்டாரா? உங்கள் குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்ல மாட்டார்களா? உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களையும், மூப்பர்கள் சொப்பனங்களையும் காணமாட்டார்களா?
பெந்தெகொஸ்தே நாளிலே, மேல் வீட்டறையில் காத்துக்கொண்டிருந்த நூற்றி யிருபதுபேர் மேல், பரிசுத்த ஆவியாகிய பெருங்காற்று வீசினபோது, அது விசுவாசி கள் ஒவ்வொருவர்மேலும் அக்கினிமயமான நாவுகளைக் கொண்டு வந்தது.

அவர்கள், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷைகளைப் பேசினார்கள். "வாடைக்காற்று, எங்கள்மேல் பலமாய் வீசட்டும்," என்று ஜெபிப்பீர்களா?
இன்னொரு காற்றாகிய தென்றல் காற்று, உள்ளத்தில் ஆறுதலையும், தேறுதலை யும் கொண்டு வருகிறது. ஜனங்கள் பொதுவாக, எல்லாவித காற்றுகளிலே தென்றல் காற்றை அதிகம் விரும்புவார்கள். அது, இருதயத்துக்கு இனிமையை கொண்டு வரும். சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டு வரும். வாழ்நாளெல்லாம் பாடுகளையும், துன்பங்களையும் சகித்து வருகிற ஆத்துமாக்களுக்கு, தென்றல் காற்று இதமாக, புத்துணர்ச்சியைத் தருகிறதாக இருக்கும்.


பரிசுத்த ஆவியானவர் வல்லமையையும், புது பெலனையும் கொண்டு வருகிற அதே நேரத்தில், ஆறுதலையும், தேறுதலையும் கொண்டு வருகிறார். என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் என்று, அவர் அன்போடு சொல்லுகிறார் (ஏசா. 40:1). ஒரு தாயின் இனிமையான சுபாவம், தன் பிள்ளைகளை ஆற்றித் தேற்றி உற்சாகப் படுத்துவதுதான். தாயினுடைய குரல், வீசுகிற தென்றல் காற்றைப்போல இருக் கிறது. "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்" (ஏசா. 66:13).


தேவபிள்ளைகளே, இன்று உங்கள்மேல் காற்று வீசட்டும். சில காற்றுகள், சரீரத்தை தொட்டு இதமளிக்கின்றன. ஆனால், பரலோகத்திலிருந்து வருகிற மெல்லிய பூங்காற்று ஆத்துமாவை தொடுகின்றது. ஆத்துமாவில் புத்துணர்ச்சியைத் தருகிறது. நம்பிக்கையை ஊட்டுகிறது. மனமகிழ்ச்சியாக்குகிறது.


நினைவிற்கு:- "என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்" (உன். 4:12).