கண்களின் ஒளி!

"கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக் கும்" (நீதி. 15:30).


கர்த்தர், உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை இன்றைக்குக் கொடுக்கிறார். ஒரு நற்செய்தி உங்களை வந்தடையும். அது அற்புதமான வார்த்தையாயிருக்கும். அதனால், உங்களுடைய உள்ளமும், வாழ்க்கையும் பூரிப்பாகும். நற்செய்தியை அனை வரும் விரும்புவார்கள்.


பல மாதங்கள் எனக்கு வேலை கிடைக்காமல், தத்தளித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு நிலையான விலாசம் இல்லாததினால், என்னுடைய அண்ணனுடைய விலாசத்தை அனைவருக்கும் கொடுத்திருந்தேன். ஒருநாள் என் அண்ணன், உனக்கு இன்டர்வியூக்கு ஒரு கார்டு வந்திருக்கிறது. அரசாங்கத்திலிருந்து, உன்னை நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருக்கிறார்கள் என்றார். என்னுடைய உள்ளம் மகிழ்ந்து களிகூர்ந்தது.


ஆனால், அதிலே என்ன துக்கம் தெரியுமா? முந்தின நாளே அந்த நேர்முகத் தேர்வு முடிந்துவிட்டது என்பதுதான். எனக்கு மனதுக்கு மிகுந்த கஷ்டமாயிருந்தது. ஆனாலும், மிகுந்த ஜெபத்தோடு அந்த அலுவலகத்துக்குப் போனேன். என் நிலையை விளக்கிக்கூறினேன். கர்த்தருடைய கிருபை பாருங்கள். அடுத்த நாள் நேர்முகத் தேர்வுக்கு, என்னை மாற்றி அமைத்தார்கள். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன். இப்படியாக, வருமான வரி இலாகாவிலே வேலைக்குச் சேர்ந்தேன்.


கிறிஸ்தவ சரித்திரத்திலே, மல்கியா தீர்க்கதரிசிக்குப் பிறகு ஏறக்குறைய நானூறு வருடங்கள் இருண்ட காலமாயிருந்தது. ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை. "கர்த்தர் உரைக்கிறார்," என்ற வார்த்தையை சொல்ல ஒருவருமில்லை. பக்தியுள்ள ராஜாக்களுமில்லை, ஆசாரியர்களுமில்லை. அதன்பின்பு, திடீரென்று நற்செய்தி வந்தது. தேவதூதன் இயேசுவின் பிறப்பைக் குறித்து முன்னறிவித்தான். "இதோ, எல்லா ஜனத்துக்கும், மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை, உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்றான் (லூக். 2:10).


ஒரு தீர்க்கதரிசி பிறந்திருக்கிறார் என்றோ, ராஜா பிறந்திருக்கிறார் என்றோ அல்ல. தேவக்குமாரனாகிய இயேசு, முழு உலகத்துக்காகவும் தன்னையே கொடுக்கும்படி இரட்சகராய் பிறந்திருக்கிறார் என்பதே, அந்த சந்தோஷமான செய்தி. கிறிஸ்துவுக்குள் சொல்ல முடியாத ஈவுகள், ஆசீர்வாதங்கள், மேன்மைகள் நமக்குக் கிடைக்கிறது. அது பரலோகத்திலிருந்து வருகிற நற்செய்தி. பரலோக தூதர்களால் கொண்டு வரப்பட்ட நற்செய்தி. "தூர தேசத்திலிருந்து வரும் நற்செய்தி, விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்" (நீதி. 25:25).


நீங்கள் கர்த்தருடைய பட்சத்திலிருக்கிறபடியால், ஒவ்வொருநாளும் பரலோகத் திலிருந்து நற்செய்திகளை எதிர்பாருங்கள். அது பாவத்தினால் கிடைக்கிற அற்ப சந்தோஷமல்ல. பணத்தினாலும், பொருளினாலும் வாங்கக்கூடிய சமாதானமுமல்ல. அது நித்தியமாக, நிலை பெறுகிற ஆசீர்வாதமாகும். தாவீது என்ன ஜெபித்தார் தெரியுமா? "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்" (சங். 51:12) என்று ஜெபித்தார். நீங்களும், அப்படி ஜெபியுங்கள். ஆனந்தத் தைலத்தினால், கர்த்தர் உங்களை அபிஷேகம்பண்ணி, ஒவ்வொருநாளும் உங்களுக்கு அற்புதம் செய்வார். வருடம் ழுமுவதும், உங்கள் உள்ளம் மகிழ்ந்து களிகூரட்டும். எந்த விதத்திலும் குற்ற மனச் சாட்சி வாதிக்காதபடி பரிசுத்தத்தோடும், ஜெயத்தோடும் காத்துக்கொள்ளுவார்.


நினைவிற்கு:-  "நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலை யிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்" (சங். 90:14).