பெரிய காரியங்கள்!

"அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்" (யோவா. 1:50).


கர்த்தர், நாத்தான்வேலை தன்னுடைய சீஷனாய் மாற்றுவதற்கு, முதலாவது அவனது குணாதிசயங்களை தீர்க்கதரிசனமாய், "இதோ, கபடற்ற உத்தம இஸ்ர வேலன்" என்றார் (யோவா. 1:47).  அப்பொழுது நாத்தான்வேல், "நீர் என்னை எப்படி அறிவீர்?" என்று கேட்டார். இயேசு அவனை நோக்கி: "பிலிப்பு, உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது, உன்னைக் கண் டேன்," என்று பதில் சொன்னார்.


பொதுவாக, இஸ்ரவேலர்கள் காலை தியானத்தின்போது, தங்கள் வீட்டின் பின்புற முள்ள  அத்திமரத்தின் கீழேயிருந்து, வேதத்தையும், கர்த்தரையும் தியானிப்பார்கள். இதைக் கேட்டதும், நாத்தான்வேல் கர்த்தரிடம் சரணடைந்தார். "ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா" என்றார். கர்த்தர், அன்றைக்கு நாத்தான் வேலுக்குக் கொடுத்த தீர்க்கதரிசனத்தை, இன்று உங்களுக்கும் கொடுக்கிறார். "இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்" என்பதே! ஆம், கர்த்தருடைய நாமத் திலே, நீங்கள் பெரிய காரியங்களைக் காண்பீர்கள். கர்த்தரால் அது ஆகும். கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்.


கிறிஸ்தவ மார்க்கத்திலே, தேவனுடைய பிள்ளைகளுக்கு, பெரிய பெரியவைகளை வாக்குப்பண்ணியிருக்கிறார். அதிலும் விசேஷமாக, அவர்கள் கர்த்தருடைய பெரிய நாமத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள். நீங்கள் அறியாதபடி, உங்களுடைய நெற்றிகளில் கர்த்தருடைய நாமம் பொறிக்கப்பட்டிருக்கிறது. "கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிப்பிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்" (உபா. 28:10). "யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது" (சங். 76:1).


"நாமம்" என்றால், "பெயர்" என்று அர்த்தம். "இந்திராகாந்தி"யினுடைய பெயர், "அதிகாரத்தைக்" குறிக்கிறது. அவர்கள் பிரதம மந்திரியாக, இந்தியாவை வழிநடத்திச் சென்றார்கள். "ஹிட்லர்" என்ற நாமம் (பெயர்), "சர்வாதிகாரத்தைக்" காண்பிக்கிறது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாய் விளங்கினவர், இரண்டாம் உலக போரை ஆரம்பித்தார். "ராக்பெல்லர்" என்ற பெயர், "பணத்தையும், செல்வத் தையும்" குறிப்பிடுகிறது. சில பெயர்களைச் சொல்லும்போது, அவர்களுடைய சுபாவம், குணாதிசயம் நம்முடைய மனக்கண்களுக்கு முன்பாய் வருகிறது.


ஆனால், கர்த்தருடைய பெயரோ, எல்லா நாமத்துக்கும், எல்லா வல்லமைக்கும், எல்லா அதிகாரங்களுக்கும், மேலாக விளங்குகிறது. ஆம், இயேசு கிறிஸ்து வானத் திலும், பூமியிலும் சகல அதிகாரமுடையவர். நீங்கள் அவருடையவர்கள், அவர், தம்முடைய நாமத்தை உங்களுக்குத் தரிப்பித்து, உங்களோடு உடன்படிக்கைச் செய்திருக்கிறார். "தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக, அவரை உயர்த்தி, இயேசு வின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையான இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" (பிலி. 2:9-11).


இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும்கூட கர்த்தருடைய நாமம் பெரியது. அவர் பெரியவர் பெரிய காரியங்களைச் செய்தருளுவார். ஆகவே, அவரில் சார்ந்து கொள்ளுங்கள். இதிலும் பெரிதானவைகளை நீங்கள் நிச்சயமாய் காண்பீர்கள்.

நினைவிற்கு:- "என் தேவனுடைய நாமத்தையும், என் தேவனால் பரலோகத்திலிருந் திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்" (வெளி. 3:12).