அதிசயங்கள் பெரியது!

"ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது" (சங். 136:4).


வேதப்புத்தகம் முழுவதும்,  கர்த்தருடைய அற்புதங்களாலும், அடையாளங் களாலும் நிரம்பியிருக்கிறது. அவர் செய்த அதிசயமான காரியங்களை வர்ணிக்கிறது. அவர் அதிசயமானவர் என்பதற்கு சாட்சியளிக்கிறது. அந்த அதிசயமானவர், இன்றைக்கு நிச்சயமாகவே ஒரு அற்புதத்தை, அதிசயத்தை உங்களுக்கு செய்தருளு வார். அவர் உங்களை நேசிக்கிறார்.


எகிப்தின் அடிமைத்தனத்தில் இஸ்ரவேலர் இருந்தபோது, கர்த்தர் அற்புதமாய், அவர்களை விடுவித்து, சிவந்த சமுத்திரத்தைக் கடக்கச் செய்து, வனாந்தரத்துக்குக் கொண்டு வந்தார். அங்கே எத்தனையோ அற்புதங்கள் செய்தார். வானத்திலிருந்து தேவதூதர்களின் உணவாகிய, மன்னா பொழிந்தது. அவர்கள் இறைச்சி சாப்பிட விரும்பினபோது, காடைகள், இஸ்ரவேலின் பாளயத்தில் வந்து குவிய ஆரம்பித்தது. எண்ணி முடியாத காடைகள். அவர்கள் வேண்டிய மட்டும் சாப்பிட்டார்கள்.


நாற்பது வருடங்கள், வனாந்தரத்தில் நடந்தும், அவர்களுடைய கால் வீங்கவில்லை. பாதரட்சைகள் பழையதாய்ப் போகவுமில்லை. காண்டாமிருகத்துக்கொத்த பெலனுள்ளவர்களாய் விளங்கினார்கள். அதே கர்த்தர்,  இன்றைக்கு உங்களையும் பலப்படுத்துவார், திடப்படுத்துவார். பூரண ஆரோக்கியத்தைத் தந்தருளுவார்.


கர்த்தர் மோசேயிடம், "இதோ, நான் ஒரு உடன்படிக்கைப்பண்ணுகிறேன்; பூமி யெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கும் முன்பாகவும் செய்வேன். உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்" என்றார் (யாத். 34:10).


வேதம் முழுவதையும் பார்த்தால், கர்த்தர் செய்த அற்புதங்களுமுண்டு. அவரு டைய தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் செய்த அற்புதங்களுமுண்டு. சாதாரண விசுவாசிகளைக்கொண்டும், அவர் பலத்த அற்புதங்களைச் செய்திருக்கிறார். உங்களைக் கொண்டும், அவர் அற்புதம் செய்வார். மனோவா கர்த்தருடைய பெயரைக் கேட்ட போது, அதிசயம் விளங்கினது (நியா. 13:18). அவருடைய நாமம் அதிசயமானவர் (ஏசா. 9:6)  அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் (யோபு 5:9).


நான், ஒரு சகோதரன் வீட்டிலே தங்கியிருந்து ஊழியம் செய்தேன். அவர்களுக்கு திருமணமாகி, 19 ஆண்டுகள் குழந்தை பாக்கியமில்லாதிருந்தது. அந்த சகோதரிக்கு, ஸ்திரீகளுக்கு வரக்கூடிய வழிபாடும் நின்று போயிற்று. அவர்கள் கர்த்தரை விசுவாசித்தார்கள். அவர்களுக்கு, அற்புதமாய் குழந்தை உண்டாகி விட்டது. அது குழந்தை என்று அவர்களுக்குத் தெரியவில்லை.


மூன்று மாதங்கள் கழிந்தப் பிறகு, வயிற்றிலே ஏதோ, ஒரு பிரச்சனை என்று டாக்டர்களிடத் தில் சென்றார்கள். டாக்டர்கள் குழந்தை உண்டாகியிருக்கிறீர்கள் என்று சொன்னபோது, அவர்களால் நம்பவே முடியவில்லை. நல்ல அழகான ஆண் குழந்தை பிறந்தது. வெளிதேசத்தி லிருந்த அவர்கள், குழந்தையை நல்ல முறையில் வளர்த்தால்போதும் என்று, வேலையை ராஜினாமா பண்ணி, இந்தியாவுக்கு வந்து விட்டார்கள். அந்த குழந்தையைப் பார்த்து, அவரு டைய இனத்தவர்களும், நண்பர் களும், "இது அதிசயம்" என்று சொல்லி தேவனைத் துதித்தார் கள். ஆம், தேவ பிள்ளைகளே, அதிசயங்கள் செய்கிறவர் இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார்.


நினைவிற்கு:- "அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப்பேசுங்கள்" (சங். 105:2).