கிருபை பெரியது!

"நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்" (சங். 86:13).


உங்களுக்கு கிருபை பாராட்டுவேன். அந்த கிருபை பெரிதாயிருக்கும், என்று கர்த்தர் சொல்லுகிறார். "கிருபை" என்ற வார்த்தை, எல்லா வார்த்தைகளிலும் மிக இனிமையானதும், மேன்மையானதுமாகும். கர்த்தர், கிருபையாய் நம்மைத் தேடி வந்தார். கிருபையாய் அடிமையின் ரூபமெடுத்தார். கிருபையாய் இரட்சிப்பையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தந்தார்.


நான் சிறுவனாயிருக்கும்போது, என்னுடைய பெயரிலேயே இன்னொரு நண்பன் இருந்தான். ஒரே வகுப்பில் படித்தோம். "ஜெபத்துரை" என்று கூப்பிட்டால் நானும், அவனும் ஒன்றுபோல எழுந்திருப்போம். ஒரே பெயர் குழப்பமாயிருந்தபடியால், நான் என்னுடைய பெயரை, சாம் ஜெபத்துரை என்று மாற்றிக்கொண்டேன்.


அடுத்த ஜெபத்துரை, என்னைவிட நல்ல நிறமாயிருப்பான். அவனை வெள்ளை ஜெபத்துரை என்பார்கள். நல்ல திறமைகளோடு இருப்பான். நன்றாக நடிப்பான். அனைவருடைய பாராட்டையும் பெறுவான். ஆனால் நானோ, கால் ஊனமுற்றவனாய், விளையாட முடியாதவனாய், தாழ்வு மனப்பான்மையுடையவனாய் விளங்கினேன்.  அவனைப்போல அதிகமான மதிப்பெண்களையும், நான் பெறவில்லை.


ஆனால், ஒன்றை மட்டும் அறிவேன். கர்த்தரும், அவருடைய கிருபையும் என் னோடிருந்தது. சிறு வயதிலேயே, கர்த்தர் என்னோடு பேசினார். அந்த வயதிலேயே, கர்த்தருக்காக வைராக்கிய மாய் துண்டுப்பிரதிகளை தெருத் தெருவாய், வீதி வீதியாய் விநியோகித்தேன். வேதாகமத்தை விரும்பி வாசித்தேன். நாள் செல்ல செல்ல, கர்த்தர் ஆவிக்குரிய பிரகாரமாகவும், உலகப்பிரகா ரமாகவும் என்னை உயர்த்தினார். என்னை மேன்மைப்படுத்தின அளவுக்கு, என் பெயரையுடைய நண்பனை ஆண்டவர் உயர்த்தவில்லை. சீக்கிரமாகவே, அவன் மரித்துப்போய் விட்டான்.


கர்த்தர் பாராட்டின எல்லா கிருபையிலும், மேலான கிருபை நம்முடைய ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்துக்கும், நித்திய வேதனையான அக்கினிக் கடலுக்கும் தப்புவித்ததாகும். அதைத்தான் தாவீது சொல்லுகிறார், "நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது. என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்" (சங். 86:13).  "கிருபை" என்ற வார்த்தைக்கு, தகுதியில்லாவர்கள்மேல் பாராட்டப்படுகிற "தேவனுடைய தயவு," என்பது அர்த்தமாகும். நாம் பாவிகளும், அக்கிரமக்காரர்களுமாயிருந்தபோது, நமக்காக ஜீவனைக் கொடுத்து, தம்முடைய பிள்ளையாக மார்போடு அணைத்தாரே. அது எத்தனை பெரிய கிருபை!


பூமிக்கு வானம் எவ்வளவு பெரியது, என்று எண்ணி நாம் அதிசயிக்கிறோம். பூமிக்கு சூரியன் எவ்வளவு தூரத்திலிருக்கிறது, என்று நம்மால் அளக்கவே முடியாது. வேதம் சொல்லுகிறது, "அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபை யும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது" (சங். 103:11).


சாலொமோன் ராஜா, கர்த்தருக்காக பெரிய ஆலயத்தைக் கட்டியபோது,  கர்த்தருடைய பெரிய கிருபையை நினைவுகூர்ந்தார். கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி, ஆயிரக்கணக்கான பலிகளைச் செலுத்தி, கர்த்தருடைய உள்ளத்தை மகிழ்ச்சியாக்கினார். அவர், கர்த்தருடைய கிருபையைப் போற்றித் துதித்தபோது, அந்த தேவாலயம் முழுவதும், தேவனுடைய மகிமையாலும், மேகத்தாலும், அக்கினியாலும் நிறையப்பட்டது. "என் கிருபை உன்னைவிட்டு விலகாது" என்பதே, அவரது வாக்குத்தத்தம் (ஏசா. 54:10).


நினைவிற்கு:- "கர்த்தரைத் துதியுங்கள். அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக" (சங். 118:1,2).