நன்மை பெரியது!

"உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற, உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது" (சங். 31:19).


நல்லவரான தேவன், உங்களுக்கு நன்மை செய்வார். அற்பமாய், சொற்பமாய் அல்ல, நீங்கள் நினைக்கிறதற்கும், வேண்டிக்கொள்ளுகிறதற்கும் அதிகமாய் நன்மை செய்வார். "தேவபிள்ளையே, உனக்கு நன்மை செய்வேன்," என்று கர்த்தர் வாக்களிக்கிறார்.


ஓரல் ராபர்ட்ஸ் என்ற பக்தன் அடிக்கடி, "நம்முடைய தேவன் நல்ல தேவன். சாத்தானோ கெட்ட சாத்தான்" என்பார். சாத்தானுடைய கெட்ட குணங்களை ஆராய்வதைப் பார்க்கிலும், கர்த்தருடைய நல்ல சுபாவங்களையும், நமக்காக அவர் ஆயத்தம்பண்ணியிருக்கிற பெரிய நன்மைகளையும், தியானிப்பது எத்தனை பாக்கியமானது! "கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவி களுக்கு வழியைத் தெரிவிக்கிறார்" (சங். 25:8).  


இந்த பூமி முழுவதும், கர்த்தருடைய நன்மையான சிருஷ்டிப்புகளால் நிரம்பி யிருக்கிறது. எத்தனையோ அருமையான கனி தரும் விருட்சங்கள், எத்தனையோ அழகான மலைகள், பள்ளத்தாக்குகள், குளங்கள், ஏரிகள்! எத்தனையோ அழ கழகான மீன்கள், மிருகங்கள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள்! சூரியனிலிருந்து வரும் நன்மை. சந்திரனிலிருந்து வரும் நன்மை, காற்றிலிருந்து வரும் நன்மை. ஆம், அவர் சிருஷ்டித்த எல்லா சிருஷ்டிப்புகளிலும், தேவன் நமக்கு நன்மை செய்திருக்கிறார் என்று அறிந்துகொள்ளலாம்.


மனு மக்களைப் பார்க்கும்போது,  அவர் மனதுருகினார். குருடருடைய கண் களைத் திறந்தார். சப்பாணிகளை குதித்து நடக்கப்பண்ணினார். அசுத்த ஆவிகளைத் துரத்தினார். மரித்தோரையும் உயிரோடு எழுப்பினார். அவர் பெற்றிருந்த அபிஷேகம், நன்மை செய்ய அவரைத் தூண்டிக்கொண்டேயிருந்தது. "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே, அவர் நன்மைசெய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும், சுற்றித் திரிந்தார்" (அப். 10:38).


"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங். 34:8). "கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்" (நாகூம் 1:7).
சிருஷ்டிப்பிலே, அவ்வளவு நன்மைகளைச் செய்தவர். கல்வாரிச் சிலுவையிலும் அவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கிறார். அதனால், பாவ மன்னிப்பைப் பெறு கிறோம். இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெறுகிறோம். நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுகிறோம். மாத்திரமல்ல, பரலோகத்துக்குப் போகும்போதும் நமக்காக ஆயத்தமாக்கின, அருமையான வாசஸ்தலங்கள், சுதந்தரங்களைக் காண்போம்.


தாவீது, கர்த்தருடைய நன்மைகளை எண்ணியெண்ணி கர்த்தருக்கு நன்றி செலுத்தினார். "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" (சங். 103:2-5) என்று குறிப்பிடுகிறார். நன்மையினால் வாயை மட்டுமல்ல. நம் ஆத்துமாவையும் நிரப்புகிறார். கர்த்தர் உங்களோடிருப்பதே, பெரிய நன்மை அல்லவா?


நினைவிற்கு:- "என் ஜீவனுள்ள நாளெல்லாம், நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங். 23:6).