அன்பு பெரியது!

"இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவை களில் அன்பே பெரியது" (1 கொரி. 13:13).


"மகனே, மகளே, உன்னில் பெரிய அன்பை வைத்திருக்கிறேன். அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன். உருக்கமான இரக்கங்களினால் உன்னைச் சேர்த்துக் கொள்ளுவேன்," என்று கர்த்தர் வாக்குக்கொடுக்கிறார். உடன்படிக்கைச் செய்கிறார்.
"விசுவாசமா? நம்பிக்கையா? அன்பா?" இதில் எது பெரியது? என்று, அப். பவுல் ஒரு பட்டிமன்றத்தை நடப்பித்ததுபோல இருக்கிறது. இன்றைக்கு, இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. ஆனால், இதில் எது பெரியது? அவரே ஒரு நீதிபதிபோல இருந்து, "அன்பே பெரியது" என்று, தீர்ப்பு வழங்குகிறார்.


அன்புக்கு இலக்கணம் வகுத்தவர் இயேசுகிறிஸ்துதான். தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவா. 4:8). அந்த அன்பினாலே, பரலோகத்தைத் துறந்து, தேவ தூதர்களின் ஆராதனையை வேண்டாம், என்று சொல்லி மனுஷகுமாரனானார். இந்த பூமியிலே, நம்மேல் அன்பு செலுத்தி, அடிமையின் ரூபமெடுத்தார். சீஷர்களின் கால்களைக் கழுவுகிற அளவுக்கு, தன்னையேத் தாழ்த்தி அன்புகூர்ந்தார். அந்த அன்பின் உச்சக்கட்டம் கல்வாரிச் சிலுவையிலே இரத்தத்தைச் சிந்தி, ஜீவனைக் கொடுத்ததாகும். அது தியாகமான அன்பு. அகாபே அன்பு.


ஒருமுறை, ஒரு சுவிசேஷகர் பதினான்கு நாட்கள், தொடர்ந்து கல்வாரி அன்பைக் குறித்தே, பிரசங்கித்து வந்தார். கடைசி நாளிலே, அன்பைக் குறித்து அவர் பேசும் போது சொன்னார், "நான் எத்தனை நாட்கள் கிறிஸ்துவின் அன்பைக்குறித்து, பேசினாலும் அந்த அன்பின் ஆழத்தை முற்றிலுமாய் வர்ணித்து, விவரித்து  உங்களுக்கு சொல்லி முடிக்க முடியவில்லை. என்னிடம், யாக்கோபின் ஏணி இருக்குமானால், அதில் ஏறி, பரலோக வாசலைத் தட்டி, "காபிரியேல் தூதனே, என் ஜனங்களுக்கு கர்த்தருடைய அன்பை விவரி," என்று கேட்பேன். அதற்கு யோவான் 3:16-ஐ சுட்டிக் காண்பிப்பான். "தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்," என்று சொல்லு வான் என்றார்.


அந்த பெரிய அன்பை வியந்து போற்றி அப். பவுல்,  "நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோம. 5:7,8).


உலகப்பிரகாரமாக ஒரு தாய் பறவை, குஞ்சுகள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறது! ஒருமுறை, கண் தெரியாத குஞ்சுகளுக்கு தாய் இரை ஊட்டு வதைப் பார்த்தேன். ஒரு குஞ்சுக்காவது கண் தெரியவில்லை. தாயைப் பார்க்க வில்லை. தாயுடைய அன்பை உணர முடியவில்லை. தாய்ப் பறவை, பறந்து வருகிற சத்தத்தைக் கேட்டதும், வாய் திறந்து கேட்கிறது. அந்த குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதற்காக, அந்த தாய் விடாமல் பறந்து பறந்து போய், புழுக்களையும், பூச்சிகளையும் பிடித்துக்கொண்டு வந்து, இரையூட்டுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.


தேவபிள்ளைகளே, தாயின் உள்ளத்தில் அவ்வளவு அன்பு வைத்த ஆண்டவர், தம்முடைய உன்ளத்தில் எவ்வளவு அன்பை வைத்திருப்பார்! அன்பு ஒருக்காலும் ஒழியாது. இம்மையிலும் சரி, நித்தியத்திலும் சரி, அன்பு ஒருக்காலும் ஒழியாது. கர்த்தருடைய அன்பு, நித்திய நித்தியமான அன்பு.


நினைவிற்கு:- "தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளா திருப்பதெப்படி?" (ரோம. 8:32).