நினைப்பதற்கு அதிகமாய்!

"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் .." (எபேசி. 3:20).


நம் தேவன், "எல்ஷடாய்" என்று அழைக்கப்படுகிறவர். நீங்கள் நினைக்கிறதற் கும், வேண்டிக்கொள்ளுகிறதற்கும் மிக அதிகமாய் ஆசீர்வதிக்க வல்லமையுள்ள தேவன். அப்படியே, உங்களை நிரம்பி வழிகிற பாத்திரமாக பயன்படுத்துவார். நீங்கள் ஆயிரமாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவீர்கள்.


ஆபிரகாமுக்கு குழந்தையில்லாதபோது, கர்த்தர் தனக்கு ஒரு மகனை தர மாட்டாரா என்று ஏங்கினார். ஆனால் கர்த்தரோ, ஆபிரகாம் மூலமாக ஒரு விசுவாச சந்ததியையே ஏற்படுத்தச் சித்தமானார். அவர் மூன்றுவித சந்ததிகளைக் கொடுத்தார். முதலாவது, கடற்கரை மணலைப்போல உள்ள ஒரு சந்ததி. இரண்டாவது, பூமியின் தூளைப்போல ஒரு சந்ததி. மூன்றாவது, ஆபிரகாமை தனியே அழைத்துக்கொண்டு போய், ஆபிரகாமே, உன் கண்களை ஏறெடுத்துப் பார். வானத்து நட்சத்திரங்களை எண்ண உன்னால் கூடுமானால், அவைகளை நீ எண்ணு என்று சொன்னார். பின்பு, உன் சந்ததி இவ்வண்ணமாயிருக்கும் என்று சொன்னபோது, ஆபிரகாமின் உள்ளம் மகிழ்ந்து களிகூர்ந்தது (ஆதி. 15:4-6).


அதோடு நின்றுவிடவில்லை. பின்னும் கர்த்தர் வாக்குப்பண்ணி, "உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள் என்றார்" (ஆதி. 17:6). எல்லாவற்றுக்கும்மேலாக கர்த்தர் கொஞ்சமும் எதிர்பார்த் திராதபடி, தம்முடைய ஒரேபேறான குமாரனை, ஆபிரகாமினுடைய குமாரனாகக் கொடுத்தார். அதைத்தான், "ஆபிரகாமின் குமாரனாகிய, தாவீதின் குமாரரான இயேசு கிறிஸ்துவின் வரலாறு"  (மத். 1:1) என்று வாசிக்கிறோம்.


தாவீது நினைத்ததை விடவும், கர்த்தர் அவரை மிகவும் ஆசீர்வதித்து மேன்மையாய் உயர்த்தினார். வெறும் ஆடுகளை மேய்த்த தாவீது, ராஜாவாக அரசாளுவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கர்த்தர் தாவீதிடம் சொன்னார், "நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை, ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன இடமெல்லாம் உன் னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக் கினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்" (1 நாளா. 17:7-10) என்று சொன்னார். தாவீதினுடைய உள்ளம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும்!


அதுபோல சிறையிருப்பிலும், அடிமைத்தனத்திலும், தானியேல் துக்கத்தோடு பாபிலோனை நோக்கி நடந்தார். அவர் கொஞ்சமும் நினைத்துப் பார்த்திராத அளவு, கர்த்தர் அவரை ஞானத்தின் ஆவியினால் நிரப்பினார். பாபிலோனிலுள்ள சகல ஞானிகளிலும், பத்து மடங்கு சமர்த்தராயிருக்கிறதை பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கண்டு, உயர்ந்த மந்திரிஸ்தானத்தைக் கொடுத்து உயர்த்தினார்.


இவ்வளவாய், பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களை உயர்த்தினவர், புதிய ஏற்பாட்டின் நாட்களிலே, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட, அவருடைய பிள்ளைகளாயிருக்கிற உங்களையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் நினைத்திராத ஒரு நன்மையை, கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கிறார். விசுவாசத்தோடு அதை எதிர்நோக்குங்கள். கர்த்தர், நிச்சயமாகவே உங்களை உயர்த்துவார்.


நினைவிற்கு:- "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத் தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" (எபேசி. 1:3).