தாயைப் போல!

"ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்" (ஏசா. 66:13).


நம்முடைய தேவன், தாயைப்போல அன்புடைய தேவன். அவருடைய பெயர் "எல்ஷடாய்" என்பதாகும். எபிரெய மொழியிலே, "எல்ஷடாய்" என்று சொன்னால், அதற்கு நான்கு அர்த்தங்களுண்டு. முதலாவது, பால் கொடுக்கிற தாயைப்போல, மனதுருக்கமுள்ள தேவன். இரண்டாவது, பராக்கிரமமுள்ள தகப் பனைப்போன்ற, சர்வ வல்லமையுள்ள தேவன். மூன்றாவது, நினைப்பதற்கும், வேண்டிக்கொள்ளுகிறதற்கும், மிக அதிகமாய் ஆசீர்வதிக்கிற தேவன். நான்காவது, நமக்காக யாவையும் செய்து முடிக்கிற தேவன். உலகத்தில், நண்பர்கள் பாராட்டும் அன்புண்டு. மனைவி யிடமிருந்து கிடைக்கும் பாசமுண்டு. இனத்தவர்கள், உறவினர்கள் விசேஷ அன்பைப் பொழிகிறார்கள். ஆனால், இவை ஒன்றும் தாயின் அன்புக்கு ஈடு இணையானதில்லை. நாம், எப்பொழுதுமே கர்த்தரை, தகப்பனுடைய ஸ்தானத்திலே வைத்துப் பார்க்கிறோம். அதே நேரத்தில், அவர் தாயைப்போல பாசமுடையவர். நேசித்து, அன்பு செலுத்தி அரவணைக்கிறவர். ஆற்றித் தேற்றி உற்சாகப்படுத்துகிறவர்.

ஆபிரகாமுக்கு 99 வயதானபோது, அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது. எல்ஷடாய், தேவனாய் ஆபிரகாமுக்கு கர்த்தர் தரிசனமானார். "உனக்கு ஒரு குழந்தையைத் தருவேன்," என்று வாக்குப்பண்ணினார்.


தாய் எப்படிப்பட்டவள்? அவள், ஒருபோதும் தன் பிள்ளையை மறப்பதில்லை. ஆகவே, கர்த்தர் உரிமையோடு கேட்டார். "ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" (ஏசா. 49:15). "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்" (ஏசா. 66:13).


ஆகவே, தாவீது கர்த்தர்மேல் அளவில்லாத விசுவாசம் வைத்தார். "என் தகப்பனும், என் தாயும், என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார்" (சங். 27:10) என்று சொன்னார்.


நான், வாலிபனாயிருந்தபோது, ஒருமுறை பயங்கரமான டைபாய்டு ஜுரம் வந்து, கை, கால்களை முறிப்பதுபோல இருந்தது. வாய் கசந்ததினால், ஒன்றும் சாப்பிட முடியவில்லை. வாலிபர்களோடு தங்கியிருந்த லாட்ஜில், என்னை கவனிக்க ஒருவருமில்லை. ஒரு இரவு, தாங்க முடியாத ஜுரத்தினால், என் சரீரம் தூக்கி தூக்கிப் போட்டது. அப்பொழுது, என் தாயை நினைத்து மிகவும் அழுதேன். என் தாய் என் அருகிலிருந்தால், என் வாய்க்கு ஏற்றபடி, அருமையாய் கஞ்சி வைத்து கொடுப்பார்களே என்று எண்ணினேன்.


சில நிமிடங்கள் கடந்தது. கதவு பூட்டப்பட்டிருந்தபோதும், கர்த்தர் தாயைப் போல வந்து, என் அருகில் அமர்ந்தார். அவருடைய கரம், என்னைத் தொட்டு தடவிக் கொடுத்தது. நீண்ட நேரம் என் அருகில் உட்கார்ந்திருந்தார். மறுநாள், புதிய உற்சாகம் என்னை நிரப்பியிருந்தது. ஜுரம் எங்கு போனதோ தெரியவில்லை.  கர்த்தர், அற்புதம் செய்து நல்ல சுகத்தைத் தந்தார்.


ஒரு தாய் குழந்தைகளைப் பெற்றெடுப்பதைப்போலதான், கர்த்தர் உங்களை உருவாக்கிப் பெற்றெடுத்தார். ஆம், கர்த்தர் தாயைப்போல கரிசனையுடையவர். தாயை இழந்தீர்களோ, கர்த்தர் உங்களுக்குத் தாயும், தகப்பனுமாயிருப்பார்.


நினைவிற்கு:- "அவர் தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்த படியே, முடிவுபரியந்த மும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்" (யோவா. 13:1).